திருவதிகை வீரட்டானம் - பாடல் 2

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியின் மையப்பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

பாடல் எண்: 2 - வெண்டளை பயிலும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பூண்டதோர் கேழல் எயிறும் பொன்திகழ் ஆமை புரள
நீண்டதிண் தோள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போலவெண் ணூலும்
காண்தகு புள்ளின் சிறகுங் கலந்தகட் டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை:

அணிகலனாக அணிந்த மகா வராகத்தின் கொம்பும், பொன்போல் விளங்கும் ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும், காண்பதற்கினிய கொக்கின் இறகும், தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும், இங்கே பெருகி வரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.

ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.

குறிப்புரை:

கேழல் - பன்றி. எயிறு - பல். கொம்பு. பொன் திகழ் ஆமை - பொன்போல விளங்கும் ஆமை.

நீட்சியும் திண்மையும் தோளின் அடை.

வெண்ணூல் வலம் சூழ்தல் . வெண்மைக்கு நிலாவொளி ஒப்பு.

புள்ளின் சிறகு - கொக்கிறகு. கட்டங்கம் - மழு. மழுக்கொடியும் உண்டு போலும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-19, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே