திருவதிகை வீரட்டானம் - பாடல் 1

அறிமுகம்:
சிங்கப்பூரில் உள்ள தமிழிலும், வரலாற்றிலும் பெருமளவில் ஆராய்ச்சி செய்துள்ள மருத்துவர் ஜெயபாரதி அவர்கள் தனக்கு அறுவை சிகிட்சை செய்ய வேண்டி காத்திருக்கும் தருணத்தில் வாசிப்பதற்காக சில புத்தகங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். அதில் திருவதிகை வீரட்டானம் பதிகத்திலுள்ள,
'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை'
என்று முடியும் பத்து பாடல்களையும் எடுத்துச் செல்கிறார்.
இத் திருத்தலத்திற்கு என் மனைவியுடன் சென்று தரிசிக்கும் வாய்ப்பு சென்ற 23.09.2019 ல் கிடைக்கப் பெற்றேன்.
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
பாடல் எண்: 1 - வெண்டளை பயிலும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முரண் ஏறும் அகலம் அளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
பொழிப்புரை:
பொடியாக அமைந்த திருநீறும் வெள்ளிய சந்தனக் குழம்பும், முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும், அழகிய புலித்தோல் ஆடையும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும், தலைவனாகிய சிவபெருமானுக்கு பாதுகாவலாக அமைந்த பகைவரோடு மாறுபடும் காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்பும், உறுதியான கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினையுடைய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.
ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.
குறிப்புரை :
சுண்ணம் - பொடி. சுடர் - வெண்சுடர்.
சூளாமணி - சூடாமணி ; உச்சியில் அணிசெய்யும் அரதனம். அரதனம்: 1. a precious stone or gem, 2. a trinket worn on the feet of women, சிலம்பு .
வண்ணம் – அழகு, நிறம். உரிவை - புலித்தோல்.
அண்ணல் - பெருமையுடைய தலைவன்.
அரண் - காவல். ஏறு - காளை. அகலம் - மார்பு. அரவு - பாம்பு.
திண்ணன் கெடிலம் - திண் நல் கெடிலம். திண்மையும் நன்மையும் கெடிலயாற்றுக்குரியன.
தமர் – அடியவர், உறவினர்.
யாது என்பது வகையுணர்த்தலின் ஒன்றும் என்பது ஒரு சிறிதும் என்னும் பொருட்டு ஆயிற்று. `