அன்னை தெரசா

உலகில் அதிகப்பிள்ளைகள் கொண்டிருந்த ஒரே அன்னை

பெற்றால்தான் தாயா?!

பெற்றெடுக்கப்பட்டவர்கள் பெற்றவளை அம்மா என்றழைக்கிறார்கள்

பெற்றெடுக்காப் புனிதவதியான அவரை நாம் அன்னை என்றழைத்தோம்.

அம்மாவுக்கும் அன்னைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்

அம்மா அன்னையின் திரிபு அல்ல.

அம்மா ஒருமை; அன்னை பன்மை.

கண்கள் சிறியனவெனினும் அவற்றில் புனிதத் தீட்சண்யம் பெருமளவு படிந்திருந்தது

முகச் சுருக்கங்களில் கூட முக்தி ஞான வார்ப்புகள்

சமாதானப் புறாக்களின் ஆயிரமாயிரம் சிறகுகளின் தொகுப்புத்தானே அந்த வெண்ணிற ஆடை.

எளிமையில் தூய்மையும் தூய்மையில் உன்னதமுமே அவர் தோற்றம்.

அதிக அளவில் சம்பவிக்க இருந்த தற்கொலைகளை தடுத்தவர் அவர்

அவர் பொறுமையின் மகத்துவம் கண்டு பூமித்தாய் அவருக்கு சிஷ்யையானாள்

ஒதுக்கப்பட்டவரின் துயரக் கண்ணீரினூடே ஆனந்தக் கண்ணீரை பிரவகித்ததோடு
அவர்களை ஒதுக்கத்தகாவர்களாகவும் ஒப்பேற்றினார்.

அவரது கரங்கள் மட்டும் தொழுநோயாளிகள் மேல் படாமலிருந்திருந்தால், அவர்கள் அனைவரும் சுயவெருட்சியாலேயே மடிந்து மரித்திருப்பார்கள்.
.
வீட்டுக்காரர்களை விட விருந்தாளியாக வருபவர்கள், தோட்டத்துத் தென்னங்கன்று வளர்ச்சியில் அக்கறை எய்தி நீர் வார்ப்பது போல்.... சபலங்களிலும் சஞ்சலங்களிலும் காதல் மாயைகளிலும அவசரப்பட்டவர்களால் பிரசவிக்கப்பட்டு குப்பைத் தொட்டில்களில் முகாரியாய் அலறிய பிஞ்சுகளை அவர்தான் பழங்களாக்கினார்.
அவர் மருத்துவம் கற்காத, புனிதப் புதுமை டாக்டர்.

மருத்துவத் தகுதியோடு செவிலிப் பணியாற்றிய அருந்தகைப் புன்னகை அரசி.

அருட்கடலான அவர் ஒரு பல்கலைக் கழகம்

அப்பல்கலைக்கழகத்திலிருக்கும் சாந்தி நிலையத்தால் – அன்புப்பள்ளியால் – கருணை ஆசிரமத்தால் – சகிப்புத்தன்மைக் கூடத்தால் – பொறுமை வகுப்பால் சமூகத்திற்கு பயிற்றுவித்த பாடங்கள்தான் எவ்வளவு பிரமாணிக்கமானவை!

மறைமுக போதனைகளாக இருக்கும் அவரது செயல்பாடுகளாவன:

நேசிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லாமல் நேசியுங்கள்.

சிநேகிக்கப் படுவதைக் காட்டிலும் சிநேகித்துக் கொள்வதே எளிது

பாவங்களுக்கு வருந்துவதோடு நில்லாமல், அவற்றிற்கீடான பிரயாசித்தங்களில் ஈடுபடுதலே ஆத்ம திருப்தி அளிக்கும்

கவலைகளைக் கண்ணீரால் கழுவாதீர்கள். தன்னம்பிக்கையால் ஜீரணியுங்கள்

நிந்தனை சுபாவம் வாழ்க்கையல்ல. சகிப்புத் தனமையே ஜீவிதாயுதம்

கோபம் பனியிடம் கூட தோற்றுப்போகும். சாந்தம் சூரியனையும் வெல்லும்.

ஆழ்கடலாய் ஆர்ப்பரிப்பற்று உன் மனம் இருந்தால்தான்... நுனிக்கடல் அலைகள்போல் வந்து வந்து போகும் இரைச்சல் எண்ணங்கள் அதில் சப்திக்காது

கரைகளை அரித்துக்கொண்டே... பிராவகமெடுத்து அதிவேகத்தில் ஓடும் அந்நதி மற்ற நதிகளைப்போல் கடலில் சங்கமித்து உப்போடு உப்பாகப் போவதில்லை கடலையே உப்பிலிருந்து சுத்திகரிக்கத்தான்.

அருவி வீழ்ச்சியிலிருந்து தென்படும் நீரெழுச்சி;
மதகு திறப்பின்போது வெளிப்படும் அணைவெள்ளம்;
ஐப்பசியின் அடைமழை;
சில விடியங்களில் பூமிக்கு அடர்-வெண்ணாடை போர்த்தும் பனிப்பிராவகம்;
பல ராத்திரிகளில் வானில் கணக்கற்று விரவிக்கிடக்கும் விண்மீன்கள்;

இவை யாவும் அன்னையின் சமூக சேவைகள் என்ற உவமேயங்களுக்கான உவமானங்கள்….

அவர் மனிதத்துவத்திலேயே அத்வைதம் அடைந்தவராதலால் அவருக்கு மரணம் மரணமாகாது.

மோட்சம் எவ்வாறு இருக்கும் என்பதை ரகசியமாய் அறிந்து வைத்திருந்தவர் அன்னை ஒருவரே.

எழுதியவர் : யேசுராஜ் (1-Oct-19, 3:07 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : annai therasa
பார்வை : 262

மேலே