எழுது கோல்

கண்ணகிக்குப் பிள்ளை இல்லை என்று
யார் சொன்னது,
நீ இருக்கையில்?

நீ தான் கவிக்கோவின் ஆறாம் விரல்!
பாரதிகளின் சுட்டுவிரல்!

கண்ணகியை கழுத்தருத்த
மலட்டுக் கருப்பை சமைத்த பிள்ளை
இல்லை நீ!


அவள் அறுத்தெறிந்த
முலையில் இருந்து
முளைத்த பிள்ளை!

கொங்கை கொண்டு
தந்த கங்கை!

மதுரையை எரித்த தாய்க்கு
ஈனப் பதறுகளை எரிக்கப்
பிறந்த பிள்ளை!

குழந்தையாய்
எனக்குப் பசியெடுக்கும் போதெல்லாம்
பால் தந்தது தாய்மை!
எழுத்துப் பசியெடுக்கும் தருணங்களில்
நீ தந் தாய் மை!


காகிதக் கன்னங்களில் முத்தமிட்டு
முத்தமிட்டு அரத்தமூட்டும்
வெட்கமாறியாப் பெண்ணே!
வெட்கத்தைப் பேணவில்லை.
அதனால் பேனா ஆனாயோ?

உன் மை இருக்கும் வரை தான்
உனக்கு மதிப்பு!
உண்மை இருக்கும் வரை தான்
பெண்ணுக்கும் மதிப்பு!

பெண்ணைக் கரம் பிடித்தவனெல்லாம் ஆணில்லை!
உன்னைக் கரம் பிடித்தவனெல்லாம் கவிஞனுமில்லை !

அழுத்திப்பிடிக்க பெண் சீறுகிறாள்!
நீ கீறுகிறாய்!

பெண்ணை ஆளத்தெரியாதவன்
கிருக்கனாகிறான்!
உன்னை ஆளத் தெரியாமலும் கிறுக்கனாகிறான்!

பெண்ணவள் மூப்படைந்து கிழவி யாகிறாள்!
கிளவிகளே உன் புண்ணியத்தில்
காகிதப் பூப்படைகின்றனர்.!

பெண்ணெழுந்து அதிகாரம் செய்தால்
ஆதிக்கமெல்லாம் அடியோடு சாயும்!

உன் எழுத்து அதிகாரம் செய்தால்
பேரரசுகளின் பொருளதிகாரமோ
அகம்பாவிகளின் சொல்லதிகாரமோ
எல்லாம் மண்ணோடு போகும்!

பெண்ணுக்கும் உனக்கும் ஒரே வித்தியாசம் தான்!
அவள் பெண்மையை மூடி வைப்பாள்!
நீ உண்மையை உடைத்திடுவாய்!

என்ன செய்ய ?
எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி
இருப்பதில்லை!

-(பாபுகனி மகன் என்கிற அகமது திப்பு சுல்தான்)
(குற்றாலத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதியது )

எழுதியவர் : பாபுகனி மகன் (8-Oct-19, 2:24 pm)
சேர்த்தது : Babu Ganison
Tanglish : ezhuthu gol
பார்வை : 63

மேலே