மருத்துவ வெண்பா – பசுவின் மோர் - பாடல் 16

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப் பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா:

வீக்க மகோதரமுள் வீறுகுன்மம் பாண்டுபித்தந்
தாக்குமருந் திட்டததி சாரமொடு – கூக்குரலே
மாறாத் திரிதோஷ மந்தமனற் றாகம்போம்
வீறாவின் மோருக்கு மெய்.

விளக்கமும், பயனும்:

பசுவின் மோருக்கு வீக்கம், மகோதரம், வயிற்றுவலி, பாண்டு, பித்தம், இடுமருந்தால் வரும் நோய்கள், பேதி, திரிதோஷம், மந்தம், அனல், தாகம் ஆகியவைகள் போகும் எனப்படுகிறது.

பசுவின் தயிரை விட மோரே ஆகாரத்திற்கு சிறந்தது. ஆகார முடிவில் மோர் சாதம் உண்பதைப் பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சாதத்துடன் சிறிது புளிப்பேறிய மோரை உப்பிட்டுக் கூட்டி உண்பதினால் இரத்தத்திலுள்ள மாசுக்களை நீக்கி இரத்த ஓட்டத்தைச் சுத்தப்படுத்தும்.

மலசலக் கட்டுகள் உண்டாகாமல் உட்சூட்டை வெளியாக்கும். கணுக்காலில் வீக்கம், வலி உடையவர்கள் இம்மோரை உபயோகித்து வர நீரிறங்கி வீக்கம் குறையும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 11:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே