அருளுடையர் ஆகி அறம்புரியாது மருளடைந்து வாழ்தல் மடம் - மறதி, தருமதீபிகை 489

நேரிசை வெண்பா

பிறந்தவர் எல்லாம் பிழையாது பின்னர்
இறந்து விழுவரென எண்ணிச் - சிறந்த
அருளுடையர் ஆகி அறம்புரியா(து) அந்தோ
மருளடைந்து வாழ்தல் மடம். 489

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறந்து வந்தவர் எவரும் இறந்து போவர் என்னும் உண்மையை உணர்ந்து தண்ணளியுடையராய்ப் புண்ணியம் புரியாமல் மண்ணிடை மருண்டு வாழ்வது பெரிய மடமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அறிவு மனிதனை மகிமைப்படுத்தி வருகிறது. அது உலக அறிவு, கலை அறிவு, உயிர் அறிவு என மூவகையாய் மருவியுளது. பல நிலைகளைத் துருவி அறியினும் தன்னிலையை உன்னியுணரவில்லையாயின் அவ்வறிவுகளால் உறுதியான பயனையடைய முடியாது. மெய்யறிவு மேலான பலனை நாடுகிறது.

உயிர்நிலையை நாடி அறிவதே உண்மையறிவாம். அந்த மெய்யுணர்வு தெய்வீக நீர்மையை அருளுகின்றது.

உண்மையை ஓர்ந்து தெளிந்தவன் உயர்ந்த கதியினை அடைகின்றான்; ஓராது கழிந்தவன் இழிந்த நிலைகளில் அழுந்தியுழல்கின்றான். நித்தியமாய் நிலைத்துள்ளதையும், அநித்தியமாய் அழிந்துபடுவதையும் ஒருவன் உய்த்துணருவானாயின் பொய்யான புலைப்பொருள்களில் வெறுப்பும், மெய்யான நிலைப்பொருளில் விருப்பும் விளைந்து வரும். அவ்வரவால் ஆன்ம ஒளி கெழுமி அதிசய மகிமைகள் பெருகி எழும்.

நிலையில்லாத உடம்பு உள்ள பொழுதே நிலையான உறுதி நலனை உயிர்க்கு உரிமையுடன் செய்து கொள்பவர் உயர்ந்த மகிமையுடையராய் ஒளி மிகுந்துள்ளனர்.

தம்மால் இயன்ற அளவு நாளும் புண்ணியங்களை எண்ணித் தொகுத்தவர் யாண்டும் கண்ணியம் பெறுகின்றனர்.

நேரிசை வெண்பா

நின்றன நின்றன நில்லா' எனஉணர்ந்(து)
ஒன்றின ஒன்றின வல்லே, செயின்,செய்க
சென்றன சென்றன, வாழ்நாள்; செறுத்துடன்
வந்தது வந்தது, கூற்று! 4 செல்வம் நிலையாமை, நாலடியார்

தந்தை, தாய் முதலாக உரிமையாய் வந்து நின்றவர் எல்லாரும் நில்லாமல் மறைந்து போயினர்; காலம் நாளும் சென்று கொண்டேயிருக்கின்றது; எமன் வந்துகொண்டே யிருக்கிறான்; நாம் இறந்து போகுமுன் இயன்ற நன்மையை விரைந்து செய்து கொள்ள வேண்டும் என இது விழைந்து கூறியுள்ளது.

நேரிசை வெண்பா

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா(து) அறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு. 19 இளமை நிலையாமை, நாலடியார்

உயிர்க்கு உறுதியான தருமங்களை வயது முதிர்ந்த பின்பு பார்த்துக் கொள்வோம் என்று காலம் கடத்தி நில்லாதீர்கள்; பெருங்காற்று அடிக்கும் பொழுது முதிர்ந்த கனிகளே அன்றி இளங் காய்களும் உதிர்ந்து விடும்; அதுபோல் இளம் பருவத்திலும் இறக்க நேருமாதலால் மரணம் புகுமுன்னே மறுமைக்கு உரிமையை விரைவில் மருவிக் கொள்ளுங்கள் என இங்ஙனம் உறுதி நலங்களை உயர்ந்தோர் உணர்த்தியுள்ளனர்.

There is a Reaper, whose name is Death,
And with his sickle keen,
He reaps the bearded grain at a breath,
And the flowers that grow between. - Longfellow

மரணம் என்னும் பெயருடைய எமன் ஒருவன் உளன்; அவன் கையில் உள்ள அரிவாள் மிகவும் கூர்மையானது; விளைந்து முதிர்ந்த பயிரை அவன் விரைந்து அறுக்கின்றான்; அவற்றோடு பூக்களும் அறுபட்டு அழிகின்றன’’ என்று லாங்பேல்லோ என்னும் மேல் நாட்டுக் கவிஞர் இவ்வாறு பாடியிருக்கிறார்.

பழுத்த கிழவர்களையே அன்றி இளங்குழந்தைகளையும் காலன் கவர்ந்து கொள்வான் என்பதை இவ்வுருவகம் விநயமாய் விளக்கியுள்ளது. எதிர்வதை எண்ணி இசைவதை நண்ணுக எனப்பட்டது.

அழிவு நிலை தலைமேல் உள்ளமையால் பருவம் இருக்கும் பொழுதே அரிய பிறவியின் பயனை உரிமை செய்து கொள்ள வேண்டும்; மறதியாய் நழுவவிடின் கொடிய துயரங்கள் தொடர்ந்து நெடிய மருள்கள் படர்த்து நீசம் அடர்ந்து விடும்.

’அருளுடையராகி அறம்புரி’ என்றது ஆன்ம ஊதியத்தின் திறம் தெரிய வந்தது. பிறவுயிர்கட்கு இரங்கி இதம்புரியின் அது பெரிய புண்ணியமாய்ப் பெருகித் தன்னுயிர்க்கு இன்பம் தரும்; அந்தத் தரும நீர்மைகளை மருவின் இருமையும் பெருமையாம்.

இத்தகைய உறுதி நலனைக் கருதிக் கொள்ளாமல் காலம் தாழ்த்தி நிற்பது சாலவும் கேடாம்.

’மருள் அடைந்து வாழ்தல் மடம்’ அருளுடையராய் அறம் புரியாமல் வாழ்வை இருளடையச் செய்து இழிந்து நிற்பது ஈன மூடமாய் இகழப்பட்டது. காலையில் இருந்தவன் மாலையில் இறந்தான் என எவ்வழியும் சாக்காடு மண்டியுள்ளதைக் கண்டும் தன் சீவனுக்கு இனிய நலனைச் செய்யாமல் இறுமாந்து திரிவது கொடிய மடமை ஆகின்றது.

நாளைச் செய்குவம் அறம்மெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
இதுவென வரைந்து வாழும்நாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை, - நடுகற் காதை, வஞ்சிக் காண்டம், சிலப்பதிகாரம்

நேரிசை வெண்பா

காலைச்செய் வோமென்(று) அறத்தைக் கடைப்பிடித்துச்
சாலச்செய் வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தான் எழுதல் அரிதால்மற்(று) என்கொல்
அறங்காலைச் செய்யாத வாறு. 17 அறநெறிச்சாரம்

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

மின்போல் அழியும் உடல்கொடுநல்
..வினைசெய் தழியா உடம்பெய்தி
இன்போ(டு) அமர்த லாயிருப்ப
..யாக்கை வருந்தும் என்றெண்ணி
அன்போ(டு) அறம்செய்(து) இளையாமல்
..அருந்தி வாளா இருக்குமவன்
தன்போல் மருளர் இலைஎன்றான்
..தண்பூம் பொழில்வைத்(து) அளிக்கின்றான். - பிரபுலிங்க லீலை

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பாம்பழல் வாயினால் பற்ற மண்டுகம்
தேம்பிடும் துயருறும் சீவன் தேயுநாள்
ஓம்பிட வல்லரே உற்ற மற்றையார்
போம்பொழு(து) அருந்துணை புரிந்த புண்ணியம். – சிவதருமோத்தரம்

இன்னிசை வெண்பா

நிலத்துக்(கு) அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்(கு) அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்(கு) அணியென்ப நாணந் தனக்கணியாம்
தான்செல் உலகத்(து) அறம். 9 நான்மணிக்கடிகை

நேரிசை வெண்பா

கொள்ளும் கொடும்கூற்றம் கொள்வான் குறுகுதல்முன்
உள்ளங் கனிந்தறம்செய்(து) உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு. 30 - நன்னெறி

தன் உயிர்க்கினிய துணை தருமம், அதனை மனிதன் விரைவில் ஈட்டிக் கொள்ள வேண்டும்; மரணம் வருமுன் அரணம் தேடாமல் இருப்பது மதி கேடாம் என இன்னவாறு முன்னோர்கள் உணர்த்தியுள்ளனர்.

சாவின் நினைவு தருமம் புரியத் துணை புரிதலால் அது இணைத்து எண்ண வந்தது. அழியாத நிலையை அழிவுநிலை தெளிவாக விழிதெரியச் செய்வது வித்தகக் காட்சியாய் விளங்கியுளது.

Live as though you would die to-night,
Farm as though you would live for ever.

‘இன்றிரவே இறந்து போவோம் என்.று கருதித் தருமம் புரிந்து வாழ்; என்றும் நிலையாய் வாழ்வோம் என்றெண்ணி உழவினைச் செய்' என்னுமிந்த வினய மொழி விழைந்து சிந்திக்கத் தக்கது. மறுமை உணர்வும், இம்மை நினைவும் மருவி நின்றன.

மரணத்தை நினைந்து தருமத்தை விரைந்து துணைக் கொள்க; கருமம் செய்யும் போது அவ்வாறு நினையாதே; என்றும் அழியாமல் நித்தியமாய் இருப்போம் என்னும் உறுதியோடு தொழில்களை ஊக்கிச் செய்து,. தரும கருமங்களின் மருமங்கள் தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Oct-19, 3:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே