நாக்கில் உறைந்த நிசி சாபம்

காற்றின் மைய நுனித்துளையில் வழிந்த பனிக்குளிர் இரவொன்றில் அந்த மூச்சு கிளம்பிற்று. குளிர். இரவை திரிக்கச்செய்யும் பாதாள பூக்களின் கடு வாசம். வெம்மையின் நாற்றம்.

ஆந்தை அலறலில் முடுக்கிக்கொண்டு திசை கிளறும் பக்ஷிகளின் பேரொலியில் ஒளி பிசையும் நிலவு.

காடினில் உருக்குலைந்த நிலவொளியில் தடுமாறித் தீய்ந்த விலங்கின் பெரும்பசி.
பசியை யாங்கேனும் கண்ணுற்ற தீயின் நாக்கு சுழலுறுகையில் சிலிர்த்த விருஷத்தில் பொங்கி குமையும் காட்டின் மணம். பாதைகள் தரை தப்பியது.

ஓடுதற்கொவ்வாது அலைந்து நடுக்கமுற்ற வெளிர் பாதங்களில் தரை சேறு உயிர் கவ்விய தடங்கள்.

இசை பொசுங்கிய மனம். ஆற்றின் பிணவாடை. விழுதில் மரண கீச்சொலி.
பாதங்கள் குருடின் ஓலத்துடன் மௌனத்தின் கனவை பிய்த்து உண்ணும் நரிகளை பயம் கிள்ள கடந்தன.

விசை கொண்டு யாழ் பிரித்த செஞ்சுருட்டையில் நீலமாய் ஒழுகிய வன இரவு. அதிர்வின் கன முழக்கத்தில் நடுங்கியபடி புணரும் சிள்வண்டின் அதிகாரக்காமம் விரித்த நீள் முடிகள்.

பாதங்கள் சமுத்திர புழையுள் மெதுக்கிடும் மீன் குஞ்சாய் பரிதிப்பஞ்சொளியில் இயக்கமுறும் பறவையின் மிதைவாய் பயணமுறும் கவனம்.

மொழிகள் வற்றின. காட்சிகள் குலைந்து வர்ணம் பிசகிய ஓவியமாய் நொடி தோறும் மாறின.

இவர்களின் யாவற்றிலும் அறுந்த கோடுகளில் முனை வளைந்த பிசாசின் கருங்கரம் துண்டாடி காற்றில் அலையும் சித்திரங்கள்.

ஓடு. ஓடு. ஓடு.

யாரோ எவர்க்கோ நதிக்குள்ளிருந்து சாம்பல் துகள்கள் வீசி கர் ரென்று ஆணையிடும் சப்தம். பெயர் குலைந்து நடுக்கமுற்ற பேயின் பரி ஓட்டம்.

மறந்து ஓடுகையில் அங்கங்கள் உதிர்த்து நிணம் மலம் தெறிக்க நரம்புகள் பிய்ந்து சடசடக்கும் எலும்புகள் வெடித்து புகைக்க விசும்பலில் தவித்து அலறல் புடைக்க ஓர்
ஓட்டம். காலத்தை விழுங்கும் சீற்றம்.

வனத்தை பூக்கள் உறிஞ்சியது. வனத்தை விழுதுகள் நெருக்கி இறுக்க வானம் ஒளி குதப்பிய ஒவ்வொரு விண்மீனாய்  எறிந்தது காட்டின் வாய்க்குள்.

பாதைகள் எங்கும் பொறிந்த விஷச்சாரல். அமிலத்தின் தூறல். தெறிக்கும் துளிகளில் மரணத்தின் உதிரம் கொதித்த கூர்பல் நீண்டு வளர்ந்தது.



பரிதவித்த பாதங்கள் நில்லாது பாய்ந்தன. எதிரியின் ஆவேச கற்பனைகள் முள்ளாய் துளைத்தன.குருதி புடைத்து வெஞ்சினம் பகிர அம்பின் தூவலாய் பாய்ந்தது.


வெறி பிடித்த ஓட்டம் காலங்களை உதறியது. காற்றின் முகம் உதைத்து உயிரின் ரசவாதத்தை அக்னியில் தளும்பச்செய்து ஓடின.


மஞ்சு பொதிந்த முகடின் மெல்லிடையில் நீளும் பசும் கிரணம். ஒளி. பரிதியின் தேர் இருள் முகத்தில் ஓடலானது. பின்னர் காடு பூக்களுக்கு ஓர் இரவின் அசைவை பற்றிய பாடலை போதிக்க துவங்கியது.


÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எழுதியவர் : ஸ்பரிசன் (24-Oct-19, 7:24 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 126

மேலே