தெய்வ வழிபாடு எய்திய மக்கள் மதமாகப் போற்றியே பக்கம் படிந்தார் - மதம், தருமதீபிகை 513
நேரிசை வெண்பா
தெய்வ வழிபாடு சீவனுக்(கு) எஞ்ஞான்றும்
உய்தி உதவி உறுதலால் - எய்திய
மக்கள் அதனை மதமாகப் போற்றியே
பக்கம் படிந்தார் பரந்து. 513
- மதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
சீவ கோடிகளுக்குத் தெய்வ வழிபாடு உயர்ந்த உறுதிநலனை உதவி வருதலால் அதனை உரிமையோடு போற்றி மக்கள் ஒழுகி வருகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஆன்மா சார்ந்ததின் வண்ணமாய் நேர்ந்து வருகிறது. மனிதன் எதனை ஆவலோடு எண்ணி வருகிறானோ அவ்வண்ணமே ஆகி விடுகிறான். தெய்வ சிந்தனையுடையவன் தெய்வமாய் உய்தி பெறுகிறான்; பாவ சிந்தனையுடையவன் பாவியாய் இழிந்து ஒழிகிறான். நினைவு புனிதமாய் உயரின் அவன் இனிய பாக்கியவான்; அது பழுதாய் இழியின் பாழாய் அழிகிறான். அழிவு நிலை தெரியாமல் இழிவில் அழுந்தி வருவது ஒழியா வாழ்வாய் உலகில் நிமிர்ந்துள்ளது. அந்த ஊன நிலை ஞானக் காட்சியால் ஒழிகின்றது.
'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்.” (குறள், 596) என வள்ளுவர் அருளியுள்ளது அரிய மானச தத்துவமாய் மருவியுள்ளது. சீவ அமுதமான இந்த உணர்வு மதியை மனிதன் சிந்தனை செய்து பழகிவரின் விழுமிய பயனை விரைந்து அடைந்து கொள்வான். ’பொன்னை அடுத்தவன் பொன்; மண்ணை மடுத்தவன் மண்’ என்னும் பழமொழி எண்ணி யுணரவுரியது. பெரிய எண்ணங்கள் அரிய மகிமைகளை அருளுகின்றன.
எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் கடவுளே; அதனைக் கருதி உருகிய அளவு சீவன் திவ்விய நிலைமையை அடைகிறது.
கடவுள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை: தெரியாத ஒன்றைப் பெரிதாக எண்ணி வீணே நம்புவது ஏன்? தனக்கு மேலான ஒரு பொருள் இருப்பதாகக் கருதித் தன்னைக் கீழாக்கிக் கொள்வது அடிமைப் புத்தி அல்லவா? என்று இப்படிச் சில புதிய புத்திகள் கிளைத்திருக்கின்றன.
பொறிகளுக்கு அடிமைப்பட்டுப் பல வகையிலும் இழிந்து உழலுகின்றவர் உயர்ந்த தலைமையாளர் போல் உரையாடுவது மிகுந்த நகையைத் தருகிறது. இந்த வீட்டுக்காரிக்கு அடிமையாயிருப்பவர் அந்த வீட்டுக்காரனுக்கு அடிமைப்படுவது அடாது தான்' என ஒரு பெரியவர் நாத்திகனை நோக்கி ஒரு முறை நயமாக நவின்றருளினார். வீட்டுக்காரன் - மோட்ச நாயகன்.
நேரிசை வெண்பா
கொண்ட மனைக்குக் குடியடிமை யாயிருந்து
கண்டபடி ஊழியங்கள் கைசெய்வார்; - தொண்டு
புரிவார் எவர்க்கும்; புரியார் இறைக்குப்
பெரியார் பெருமை பெரிது.
இந்தப் பெருமையில் சிலர் உரிமை கொண்டுள்ளனர். சனகன் முதலிய அரிய ஞான சீலர்களும், பெரிய முடிமன்னர்களும் இறைவனைத் தொழுது உலகங்களை ஆண்டிருக்கின்றனர். ஆண்டவனைக் கருதினவர் ஆண்டவர்களாயினர்; அல்லாதவர் அடிமைகளாய் மாண்டனர். நாளும் மாள்கின்றனர்.
உலகாயிதம்
தெய்வம் இல்லை என்பதும் ஒரு வகை மதமாய் முடிந்தது. சாருவாகம், உலகாயிதம் என மதங்கள் சில உலாவி வருகின்றன. கண்கண்ட உலக இன்பங்களைத் தவிர மேலாக வேறு ஒன்றையும் கருதி ஒழுகாதவர் ’உலகாயிதர்’ எனப் பெருகி வந்தனர்.
’கண்டதுதான் காட்சி; தெய்வம் உண்டு’ என்பது பிழை. தருமம், ஒழுக்கம், கருமம், நீதி என்னும் போதனைகள் பேதைமைகளாம். பிறர் மனைவியரை விரும்பினால் பாவம், பிறர் பொருளை வவ்வினால் தீமை என்பன எல்லாம் நெஞ்சுரம் இல்லாத கோழைகள் சொல்லிய வஞ்சகச் சூழ்ச்சிகளே; மனம் விரும்பியபடி எதையும் அனுபவிக்கலாம். கட்டுப்பாடுகள் செய்வது பகுத்தறிவில்லாத மட்டித்தனங்களாம். கண் எதிரே கண்ட இன்ப போகங்களை எண்ணியபடியே இனிது நுகராமல் காணாத சுவர்க்க மோட்சங்களைக் கருதியுழல்வது அறிவு கேடான மடமையேயாம் என இவ்வகையில் உலகாயிதருடைய கொள்கைகள் பரவியுள்ளன.
எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
வள்ளமுலை மாதர னுபவம் உறாமல்
..வாலிபம்வீண் போகவுப வாசம் செய்தும்
தள்ளரிய தவமுயன்றும் கனிகாய் தின்றும்
..தாம்கெட்டும் கேடுபிறர் தமக்குச் சூழ்வித்(து)
உள்ளதுசொல் பவன்தனைப்பொய் சொல்வோன் என்றும்,
..உறுவிழியில் தோன்றாத(து) உண்மை என்று
விள்ளுமவன் தானேமெய் சொல்வோன் என்றும்,
..விளம்புதுர்ப்,புத் தியர்இவர்போல் வெய்யோர் யாரே? 1
நெட்டுடலை இருகூறாய்ப் பிளந்து சீவன்
..நிற்பததில் கண்டவரார் நீர்தாம் பாரும்!
விட்டுடலை அதுபோன வழியார் பார்த்தார்;
..விண்ணுலகில் இருந்ததையார் விளங்கி வந்தார்?
எட்டுணைஅவ் வளவிதற்குள் மெய்யுண் டானால்
..இன்றுமுதல் யான்சாரு வாகன் என்னும்
கட்டுரையும் வேண்டேன்;பா ஷண்ட விஞ்சைக்
..கல்வியையும் எவர்க்குமினிக் கழறி டேனால் 2
எவ்வுயிர்க்கும் பிறப்புமவ யவமும் ஒக்கும்;
..இதில்வருண பேதமுள என்றால், மேலாம்
அவ்வருணத் தவர்க்(கு)உறுப்(பு)ஒன்(று) அதிகம் உண்டோ?
..ஆகாயந் தனில்நின்றும் அவர்வீழ்ந் தாரோ?
செவ்வியவர் நரைதிரைமூப்(பு) இவைதா மின்றித்
..தீர்வையின்சாக் காடுமின்றிச் சிறந்தார் கொல்லோ?
கவ்வையில்ஆண் பெண்சாதி இரண்டின் அல்லால்
..காசினியில் வேற்றுருவம் கண்டார் யாரே? 3
பொலிவுறுதா ரம்பரதா ரங்கள் என்று
..பொறித்தகுறி உளதோ?தம் பொருள்ஈ(து) என்றும்
இலகுபர திரவியம்ஈ(து) என்றும் ஆங்கே
..எழுத்துவெட்டி இருப்பதுண்டோ? எப்பெண் டீரும்
வலியவருக்கு எப்பொருளும் தமதன் றோ?கை
..மாட்டாதார் பிறர்மனையாள் மற்றோர் செம்பொன்
நலியிலதி பாவம்வரும் பழிமேல் உண்டு
..நரகமென்று புகல்வரெந்த நாளும் தானே. 4
வானமுதம் எனஇரத மலிந்த தெண்ணீர்
..வாவிதம(து) அருகிருக்க மடுத்துண் ணாமல்
கானலைநீர் என்றோடி உழலு வார்போல்
..கைப்பலமாய்க் கிடைத்தவின்பம் கடிந்து புத்தி
ஈனர்சிலர் சொன்னபொய்யை மெய்என்(று) எண்ணி
..இவ்வுலகில் பற்பலபேர் இரண்டும் கெட்டுப்
போனவர்க்கும் இன்பமுற இவ்வா(று) ஓதிப்
..புத்திநல்கி நம்மியலிற் பொருத்தி னேனால். 5 - மெய்ஞ்ஞான விளக்கம்
மோகன் என்னும் மன்னனிடம் தன்னுடைய பிரதாபங்களைக் குறிதது இன்னவாறு சாருவாகன் கூறியிருக்கிறான்.
பகுத்தறிவுவாதிகள் என இக்காலத்தில் கிளைத்திருப்பவர் சொல்லித் திரிவதையும், முற்காலத்தில் முளைத்திருப்பதையும் ஈண்டு இணைத்து எண்ணிக் கொள்ள வேண்டும். மனித சுபாவங்கள் மருள் நிலையில் யாண்டும் ஒருமுகமாகவே மருவி வருகின்றன.
தேகமே ஆத்துமா; போகமே முத்தி என்று அவர் கருதி நிற்கின்றனர் ’யாதொரு நெறி முறையுமின்றி நெஞ்சு போனபடி அஞ்சாமல் செல்வதே ஆண்மை’ என அவர் கேண்மை கொண்டாடுகின்றனர். மாய மயக்கங்கள் நேயங்களாய் நிலவி நிற்கின்றன.
கடவுள் உண்டு என்று சிலர் சொல்லிக் கொண்டாலும் பொறிவெறிகளிலும் போகக் களிப்பிலுமே உலக மக்கள் பெரும்பாலும் மூழ்கிக் கிடத்தலால் எல்லாரும் உலகாயிதர்களாகவே உலாவியுள்ளனர். செய்ய எளியதில் வையம் களி கொள்கிறது. அரிய செயல் அயலாயது. உலகமயல் பலவகையிலும் பரிதாபமுடையது.
’தெய்வ வழிபாடு சீவனுக்கு உய்தி’ இறைவன் எல்லாம் வல்லவன்; என்றும் உள்ளவன்: இன்ப நிலையினன். அந்தப் பரம்பொருளை உழுவலன்போடு கருதி வருவது உயிர்க்கு உயர்ந்த அமுத போகமாய்ச் சுரந்து வருகிறது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)
5576
நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
..நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
..நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
..மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
..பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. 1 - 134. மரணமிலாப் பெருவாழ்வு, அருட்பா
தெய்வ சிந்தனை செய்து வந்துள்ள இராமலிங்க சுவாமிகள் உலகத்தவரை நோக்கி அன்புரிமையோடு இங்ஙனம் உறுதியுண்மைகளை உரைத்திருக்கிறார். உள்ளத்தின் உருக்கமும், ஆன்ம அனுபவங்களும் உரைகளில் பெருகியுள்ளன. ஊன்றி உணர்ந்து உய்தி நலங்களை ஓர்ந்து தெய்வ சீர்மைகளைத் தோய்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.