பிறர்நலம் காண்போன் பன்னலமும் மேவ தேவனென நிற்பன் - இதம், தருமதீபிகை 503
நேரிசை வெண்பா
தன்னலமே நாடித் தவித்துழலும் மானிடருள்
மன்னலம் காண்போன் மகானாகிப் - பன்னலமும்
மேவ விளங்கி வியனுலகில் என்றுமே
தேவனென நிற்பன் தெளிந்து. 503
- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தனக்கே நலத்தை நாடி யாண்டும் தவித்துழலுகின்ற மானிடருள் பிறர்க்கு இதத்தைப் புரிபவன் பெரிய மகானாய் அரிய தெய்வீக நிலையை அடைகின்றான்; இவ்வுண்மையைத் தெளிந்து உய்தி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தன்னைச் சார்ந்துள்ளவர்கள் அளவிலேயே மனிதனுடைய அன்புரிமைகள் மருவி நிற்கின்றன. தன்னுடைய மனைவி, மக்கள், ஒக்கல் என இன்னவாறு பக்கம் படர்ந்து தொடர்ந்து அபிமானங்கள் புரிந்து வருதலே மனித இயல்பாய் விரிந்து வருகிறது. இந்த நிலையிலிருந்து மேலே சென்ற பொழுதுதான் அந்த மனிதன் பெரியவனாய் அரிய மேன்மைகளை அடைகின்றான்.
உள்ளம் சுருங்கி உதவி நிலை குன்றியிருக்கும் அளவும் அவன் சின்ன மனிதனாகவே சிறுமையில் உழலுகின்றான். பிறருடைய நலத்தைச் சிறிதும் நாடாமல் தன்னலத்தையே பெரிதும் நாடிப் பேயாய்த் திரிவது மாயவுலகின் மயக்கமாயுள்ளது.
’தன் நலமே நாடித் தவித்துழலும் மானிடர்’ என்றது மனித வாழ்வின் பரிதாப நிலையை இனிது காண வந்தது.
சுயநலம் என்பது இயல்பாகவே சூழ்ந்திருத்தலால் அதில் ஆழ்ந்து மூழ்கி அவல நிலையில் யாவரும் வீழ்த்து கிடக்கின்றனர்.
தன் வயிறு நிறைந்தால் போதும் எனத் தன்னலமே கருதிப் பிறர்க்கு இதம் யாதும் பேணாதிருப்பின் அது பேய்வாழ்வு, நாய்வாழ்வு என்று பிழைமிகப் படுகின்றது. ஒத்த மக்களுக்கு உள்ளமிரங்கி உதவி செய்யாதவன் செத்த சவம் என எள்ளப்படுதலால் இதநலம் இல்லாத வாழ்வு எவ்வளவு இழிவடைகின்றது! என்பது தெளிவாகி நின்றது.
நேய நெஞ்சோடு உதவி புரிகின்றவரைத் தாயர் என்றுலகம் உவந்து போற்றுகின்றது; அவ்வாறு உதவாதவரை பேய்கள், நாய்கள் என்று பிழை பேசி இகழ்ந்து போகின்றது.
கட்டளைக் கலித்துறை
சேய்போல் உலகத்(து) உயிரையெல் லாமெண்ணிச் சேர்ந்துபெற்ற
தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றுமெட்டிக்
காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
நாய்போல் குறைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே. 5385 தனித்திருவலங்கல், ஆறாம் திருமுறை, அருட்பா
சன்மார்க்கர் இயல்பும், துன்மார்க்கர் நிலையும் இதில் குறிக்கப்பட்டுள்ளன. இனிய பண்போடு இதம் புரிபவர் உயர்ந்த மகான்களாய்ச் சிறந்து விளங்குகின்றனர்; அங்ஙனம் இல்லாதவர் இழிந்த புல்லராய்க் கழிந்து ஒழிகின்றனர்.
செயல் இனிமையாய போது உயர்வு தனிமையாய் ஒளி பெறுகின்றது. எவ்வுயிர்க்கும் இதத்தை நாடிவரின் அவ்வுயிர் திவ்விய தேசோடு சிறந்து திகழ்கின்றது.
’மன் நலம் காண்போன் மகான்’ பெரிய மகான்களுடைய தன்மையை இது அறிய வந்தது.
பிறர்நலம் உடையராய் இன்புறும் வழியை ’மன் நலம்’ என்றது. பிற உயிர்கள் நலமடையும்படி இதம் புரிந்து ஒழுகுபவர் உயர்ந்த மகான்களாய் ஒளி பெறுகின்றனர். இனிய உதவி அரிய தெய்வ பதவியை விரைவில் அருளுகின்றது. அயலார் இன்புறும் செயலையுடையவன் இயல்பாகவே எங்கும் உயர்வெய்தி நிற்கின்றான்.
புகழும் புண்ணியமும் உபகாரங்களால் விளைந்து வருதலால் உபகாரிகள் இம்மை, மறுமை என்னும் இருமைகளிலும் இசை பெற்று மகிழ்கின்றார்.
உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், 5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை, 15
பிறர்க்கென வாழ்திநீ ஆகன் மாறே. பதிற்றுப்பத்து
காப்பியனார் என்னும் சங்கப் புலவர் ஒரு சேர மன்னனைக் குறித்து இங்ஙனம் பாடியிருக்கிறார் ’பலர்க்கும் உதவி புரிந்து நீ பிறர்க்கு என வாழ்தி’யாதலால் உன் புகழ் உலகில் உயர்ந்துளது எனப் புலவர் உளமுவந்து கூறியுள்ளமை கண்டு உணர்ந்து சிந்திக்க வுரியது.
பிறர்க்கென வாழ்தி! என்றது அந்த அரசனுக்கு எவ்வளவு பெரிய மதிப்பைக் கொடுத்திருக்கிறது. ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அவனது உதவி நிலை எல்லாருடைய இதயங்களிலும் இன்பஒளி வீசி வருகிறது. மற்றவர் வாழ உயிர் வாழ்கின்றவன் அமரரும் புகழ உயர்வோங்கி ஒளிர்கின்றான். உண்மை யுயர்வு உதவியில் உளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.