வீடு

ஒரு அழகான வீடு அது..பார்த்து பார்த்து கட்டியது என்று சொல்வார்களே அதுக்கு எடுத்துக்காட்டு அந்த வீடு தான்... எல்லோரும் பார்த்து பொறாமை படும்படியான வீடு அது..அப்படி ஒரு அழகிய வேலைப்பாடுகள் அந்த வீடு முழுவதும் நிறைந்து இருந்தன..


வீட்டை கட்டி முடிக்க அவர்களுக்கு நீண்ட காலம் எடுத்து கொண்டது.. இருந்தாலும் அவர்களுடைய சொந்த வீடு அவர்களுக்குக்கானது இங்கு யாரும் வந்து அவர்களை குறை கூற முடியாது..இத்தனை காலம் அவர்கள் கழித்தது வாடகை வீட்டில் தான்..சேர்ந்தார் போல் ஒரு பத்து பேர் கூட அங்கே இருக்க முடியாது... அந்த வீட்டிற்கு மாதம் 6000 வாடகை... அது போக வாட்டர் சார்ஜ்,ட்ரைனேஜ் கிளீன் சார்ஜ் என அத்தனை சார்ஜையும் நம்மிடம் ஒப்படைத்து விடுவார்... வீட்டு ஓனர் அந்த அளவுக்கு ரொம்ப நல்லவர்.


சில நேரம், ஏன்டா இங்க வந்து மாட்டிக்கிட்டோம்.. என்றும் கூட நினைப்பார்கள்..ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினர்.. ஜானகிராமன் வீட்டின் தலைவர்.. மனைவி அம்புஜம்.. இரண்டு மகன்கள் முறையே நவீன்,நந்து மிடில் கிளாஸ் பேமிலி.. மிடில் கிளாஸ் எல்லோரிடம் உள்ள ஒரு பிரச்சனை.. காசு இருக்கணும் சொல்ல முடியாது... இல்லனும் சொல்ல முடியாது... இல்லன்னு ஒன்னுருத்தவன் கிட்ட போயும் கேக்க முடியாது... எப்போதும் திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தான் மிடில் கிளாஸ் குடும்பத்தினருக்கும்..


அதே நிலைமை தான், ஜானகிராமன் குடும்பத்தினருக்கும்.. மகன்களை எஞ்சினியர் படிக்க வைக்கவே தன் சம்பாத்தியம் முழுவதையும் இழந்து விட்டார் ஜானகிராமன்.. வயதும் இப்போது 45 ஐ நெருங்கி கொண்டு இருக்கிறது..இன்னும் 5 வருடத்தில் அவருடைய வேலைக்கும் டாட்டா சொல்ல வேண்டும்.. மகன்களும் நல்ல இடத்தில் இன்னும் வேலைக்கு அமர்ந்த பாடில்லை... ஏதோ பேருக்கு ஒரு வேலைக்கு செல்கின்றனர்... அந்த சம்பாத்தியம் அவர்களுடைய பெட்ரோல் செலவுக்கே போதாத ஓன்று.. அவங்களும் என்ன தான் செய்வாங்க என ஜானகிராமன் ஏதும் குறை சொல்வது கிடையாது..


ஜானகிராமனுக்கும் அவனது மனைவிக்கும் நெடுநாள் ஆசையே சொந்த வீடு கட்டி குடியேறுவதுதான்..இதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரை ஆட்கொண்டு இருந்தது.. அதன் படியே தன் மகன்களை நம்பினால் கதைக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு பணி ஓய்வு எடுக்க உள்ள இந்த ஐந்து வருடத்தில் இதனை சாத்தியமாக்க வேண்டும் என்று முதற்கட்டமாக ஊரில் உள்ள தன் பூர்விக சொத்தை போய் பார்த்தார்..

அந்த ஊரில் உள்ள பெரிய இடமே அவருடையது தான்.. எப்படியாவது அந்த இடத்தை விற்று தற்போது இருக்கும் நகரத்திலே ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது தான் அவரின் திட்டம்.. ஆனால், ஊரிலோ இவர் சொல்லும் தொகையை கொடுத்து வாங்க யாரும் முன்படவில்லை..அதில் பெரிய ஏமாற்றம் தான் ஜானகிராமனுக்கு..
பிறகு, அந்த இடத்திலேயே வீடு கட்டலாம் என முடிவு செய்து பூமி பூஜை போட்டாயிற்று.. கிராமத்தில் வீடு கட்ட மகன்களுக்கு பிடிக்கவில்லை..ஏனென்றால், அங்கு இருந்து நகரத்திற்கு (அதாவது இவர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு ) வர 1.30 மணி நேரம் எடுக்கும்..அதனாலேயே அவர்கள் இதை விரும்பவில்லை.. இருந்தாலும் என்ன செய்வது அவருடைய உழைப்பு இதில் நாம் பங்கு ஏதும் இல்லையே என்ற குற்ற உணர்வு நவீனுக்கும், நந்துவுக்கும்..

அம்புஜம் முகத்தில் இப்போது தான் மலர்ச்சி..நம் வீடு அதுவும் சொந்த வீடு என்று..ஜானகிராமன் வீடு கட்ட யோசனை செய்யும் போதே அந்த வீடு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.. அதற்காக பல ஊர்கள் கிராமங்கள் சென்று பழைய வீடுகள் பலவற்றை பார்த்தும் அதனை பற்றி பிறரிடத்தில் கேட்டும் வந்தார்.. இப்படி சுற்றியத்தில் பழமை வாய்ந்த ஒரு மேஸ்திரியையும் கண்டு பிடித்தார்..

அவர் பெயர் சுப்பிரமணி.. எல்லாவற்றையும் தெரிந்த படு புத்திசாலி ஆனால், வாய் தான் கொஞ்சம் நீளம்.. இவர் பேச்சுக்கு நிகர் இவரே..அஸ்திவாரம் போட்டனர்..ஒரு மூணு சென்டில் வீடு கட்ட.. வேலையும் பரபரப்பாக நடந்தது.. அஸ்திவாரம் போட்டு இரண்டரை மாதங்கள் ஆகியும் அடுத்த கட்ட வேலை இன்னும் நடக்கவில்லை என்று மகன்கள் சலித்து கொண்டனர்..ஆனால், அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும் மண்ணுடன் நன்றாக பிணைப்போடு இருக்கவே இந்த தாமதம்..மேலும், கொள்ளை புறத்தில் மரக்கன்றுகள் முறையே மா, தென்னை,கொய்யா,முருங்கை மற்றும் இதர மரங்களின் கன்றுகள்,செடிகளை வாங்கி வைத்து கொண்டு பராமரித்து கொண்டும் வந்தார் ஜானகிராமன்..



வீட்டை லாரி பார்க்கர் போன்றோரின் கை வண்ணம் உடையதாய் ஆக்க எண்ணி அந்த பாணியை பின் பற்றினர்.. ஜானகிராமனும், சுப்பிரமணியும்.. இந்த முறைப்படி சுவர்களின் இருபுறமும் சிமெண்ட் கொண்டு பூசப்படாது.. செங்கற்கள் அப்படியே இருக்கும்..அது ஒன்றுடன் ஒன்று ஒட்ட இடையில் மட்டும் சிமெண்ட் பயன்படுத்த படும்.. இப்போது உள்ள கற்கள் பார்க்க அழகாக இருப்பதில்லை.. அதனால், நெடுந்தூரம் பயணம் செய்து பாரம்பரிய முறைப்படி கல் செய்யும் கிராமத்தில் தேவையான அத்தனை கற்களையும் வாங்கினர்...


மேலும், சுவர் எழுப்ப தொடங்கினர்..வீட்டை எப்படி இருக்க வேண்டும்.. எந்தெந்த இடத்தில் என்னென்ன இருக்க வேண்டும்.. என்பதை அவ்வப்போது மாற்றிகொண்டே இருந்தார்.. ஜானகிராமன்.. மகன்கள் மற்றும் தன் மனைவி சொல்வது எதையும் அவர் காதில் போட்டு கொள்ளவில்லை.. சுப்பிரமணியின் வாக்கு அவருக்கு வேதமாக இருந்தது.. இப்போது வீடும் சுப்பிரமணி போடும் திட்டத்தில் தான் எழும்பி கொண்டு இருக்கிறது..

சிமெண்ட் பூச்சு இல்லாததால் செலவும் குறைவு.. மேலும் இது வெப்பத்தை உள்வாங்கி கொள்ளாது.. எப்போதும் குளிர்ச்சியை வெளிப்படுத்தும்..எல்லா இடத்திலும் ஜன்னல்கள் ,கதவுகள் போன்றவற்றை அதிகம் இருக்கும்படி கட்டுமானம் சென்று கொண்டிருக்க .. ஜனகிராமனுக்கே சந்தேகம் வந்துவிட்டது..

"யோ, சுப்பிரமணி நீ என்னய்யா? எல்லா இடத்திலும் இவ்வளவு பெரிய அளவில் ஜன்னல் வைக்கிற, மரம் வாங்க ஆசாரி கூலி... இதெல்லாம் நீ பார்த்துகிரியா..?
ஐயா... கவலைப்பட வேண்டாம்.. எனக்கு தெரிஞ்ச கிராமத்துல பழைய வீட இடிக்கிறங்கா.. அங்க போய் நாம நமக்கு தேவையான அனைத்து வகையான விதமான மர சாமான் எல்லாத்தையும் வாங்கிடுவோம்.. என்று சொல்லிகொண்டே வேலையை செய்து கொண்டு இருந்தார் சுப்பிரமணி..


ஒரு வழியாக சுவர் எழுப்பி முடித்தாயிற்று... ஜனகிராமனுக்கோ கையில் பணம் இல்லை.. அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க.. ஐயா.. என் சம்பளத்தை விடுங்க பிறகு மொத்தமா வாங்கிக்கொறேன்.. நீங்க முதலில் அந்த கிராமத்துக்கு போய் எல்ல மர சாமானையும் வாங்கிட்டு வந்துடுங்க..ஜனகிராமனும் தனது மகனுடன் சென்று தேவையானவற்றை குறைவான விலையில் வாங்கி வந்தார்..எல்லாம் தேக்கில் செய்த ஜன்னல்கள் கதவுகள் அவ்வளவாக சேதாரம் இல்லை.. இருந்தாலும் புது பொலிவுடன் இருக்க சில சில்லறை வேலைகளை பார்க்க ஆசாரியிடம் கூறினார் ஜானகி ராமன்..


ஒரு வழியாய் 75 சதவீத பணி நிறைவுற்றது..சுப்பிரமணி தன் வீட்டை போல ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து கட்டினார்.. எல்லா வேலைகளையும் முடிய மேலே ரூப் போட்டால் எல்லாம் முடிந்து விடும்..இதையும் பழைய முறைபடியே மச்சு என்று சொல்லப்படும் வகையை பின்பற்றி கட்டினர்..இதன்படி நல்ல வளமான மரகட்டைகள் சீரிய இடைவெளியில் வைத்து அதற்கு இடையில் செங்கல் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தி கொண்டு தரை தளம் போல அமைப்பார்கள்.. இதற்கு கான்க்ரீட் கலவைகள் தேவையில்லை.. மேலே பார்க்கவும் அழகாக இருக்கும்.. கான்க்ரீட் கலவைகள் இல்லாததால் இது வெப்பத்தை உள்வாங்கி கொள்ளாது.. எப்போதும் வீடு குளிர்ச்சியாக இருக்கும்.. மேல உள்ள செங்கல் மற்றும் சிமெண்ட் கலவைக்கு மட்டும் வெள்ளை அடித்தார்கள்..வேறு எங்கும் இல்லை.. இருந்தாலும் இது முழுக்க முழுக்க பழங்கால கட்டடக்கலை என்றும் சொல்ல முடியாது.. தேவையான இடங்களில் செமெண்ட்,ஜல்லி கான்க்ரீட் கலவைகள் போட்டு பில்லர்கள் எழுப்பப்பட்டு இருந்தது..

வீட்டின் வேலை அனைத்தும் முடிந்தது.. வீடு சிவப்பு நிற பூசப்படாத செங்கற்களால்..கம்பீரமாய் நின்றது.. வீட்டின் முகப்பில் இடது புறத்தில் ஒரு சிறிய திண்ணை அதனை சுற்றி சிறு சிறு செடிகள் மூலிகைகள்.. எப்போதும் பச்சை வாசம் மற்றும் குளிர்ச்சையை ஏற்படுத்தின.. மேலும், ஒற்றை சன்னல் ஒன்று வலது புறம்..ஒரு அறையின் சன்னல்.. வாயிற்கதவு பழைய வீட்டின் கதவு அழகிய வேலைப்பாடு நிறைந்தது..ஒற்றை கதவு தான்.. கதவை தட்ட நாரங்கி போன்ற அமைப்பு கொண்டு அழகாக இருந்தது.. வீட்டின் உள்ளே சென்றவுடன் எதிரே முற்றம் அங்கும் சில சிறு செடிகளை வைத்து இருந்தனர்.. வீட்டிற்கான வெளிச்சம் முழுவதும் முற்றத்தின் வழியாக வந்தது..

அதன் வலது புறம் ஒரு அறை.. அப்படியே இடது புறம் நடக்கவே பழைய கதவுடன் கூடிய மற்றுமொரு அரை மூன்று சன்னல்கள் கொண்டு நல்ல வெளிச்சத்துடன் இருந்தது..அதிலிருந்து இடது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய வரவேற்பறை.. தன் மகன்கள் வாங்கிய பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் இதர பொருட்களை சுவரோரம் மூன்று மரபலகை கொண்டு ஒரு காட்சி பொருளாக வைத்தனர்..அந்த சிவப்பு நிற பின்புலத்தில் மிகவும் அழகாக இருந்தது.. அப்படியே செல்ல இடது புறத்தில் ஒரு சிறிய அறை ஒற்றை படுக்கை கொண்ட அறை...

அப்படியே செல்ல எதிரே நல்ல விசாலமான நுழைவு கொண்ட சமையலரை..வரவேற்பறையில் இருந்ததை போன்ற பலகைகள் கொண்டு மூன்று புறமும் அழகிய வேலைப்பாடு கொண்டு இருந்து பாத்திரங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடுக்க ஏதுவாய் இருந்தது..நவீன கால முறைப்படி பாத்திரங்கள் கழுவ தண்ணீர் வசதியும் அதை வெளியேற்றும் அமைப்பும் செய்ய பட்டு இருந்தது..அதிலிருந்து வெளியே வந்து கொஞ்ச தூரம் சென்றால் இடப்புறத்தில் ஒரு கதவு..அநேகமாக கொள்ளைவாசல் செல்ல வழி... அதன் இடப்புறமாக தனி தனியாக குளியலறை மற்றும் கழிவறை.. இப்போது நாகரிகம் என்ற பெயரில் படுக்கை அறையிலே கழிவறை.. அதன் மூலம் வரும் துர்நாற்றம் மற்றும் இதர நோய் தொற்றுகள் ஏராளமானவை..

பிறகு இரண்டு படிக்கட்டுகள் இறங்கினால் கொள்ளை... ஜானகிராமன் வைத்த மரங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன..பின்ன மொத்தம் 2.30 வருடங்கள் ஆகிவிட்டனவா..நல்ல குளுமையான காற்றை வீசி கொண்டே இருந்தது..மரங்கள் மேலும், அதிகளவு பிராண வாயு தரக்கூடிய மூங்கில்கள் அதிலும் குறிப்பாக முள்ளில்லா மூங்கில்கள் கொள்ளையின் கடைசியில் இருந்து தேவையான அளவு காற்றை சுவாசிக்க கொடுத்தன..மனைவி அம்புஜம் காய் தரக்கூடிய செடிகள் சிலவற்றையும் தெளித்திருந்தால் அதுவும் வளர்ந்து இருந்தது..

நவீனும், நந்துவும் தனது அப்பா ஜனகிராமனை பார்த்து வியந்தனர்..ஆச்சர்யப்பட்டனர்..பெருமிதமும் அடைந்தனர்.. அவர்களும் வேலை நேரம் போக மற்ற நேரம் சிறு சிறு வேலைகளை செய்து கொடுத்து இருக்கின்றனர்.. இன்று தான் அவர்கள் வீட்டின் புதுமனை புகு விழா.. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லை..நெருங்கிய உறவு, நட்புகளுக்கு மட்டுமே அழைப்பு.. ஏனென்றால்..செய்த செலவுக்கே இன்னும் போராட வேண்டுமே.. இதும் ஒரு சிலவா என குறைத்து கொண்டனர்...

குறிப்பாக அவர்களின் பழைய வீடுகளின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து இருந்தனர்...ஆனால், பெருந்தன்மையோடு வந்தது ஒரு சிலரே... எல்லோரும் வீட்டை சுற்றி சுற்றி வந்து வளைத்து பார்த்தனர்...சிலர் அருமையான வீடு கட்டி இருக்க ஜானகிராமா...என்றும் சிலர் என்ன வீடு இது போலீஸ் ஸ்டேஷன் கலர்ல என்று முணுமுணுத்தும் கொண்டனர்... பேசுகிற வாய்கள் பேசிக்கொண்டே தான் இருக்கும்... அவர்களின் வாய்க்கு சீனி போட்டாற்போல் இன்னும் சுவையாக இன்பமாக பேரானந்ததோடு முணுமுணுக்க இன்னுமொறு செய்தி விழாவின் சிறப்பு விருந்தினர்.. விழா நாயகன் வீட்டை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பது யார் தெரியுமா... வேற யாரும் இல்லை நம்ம மேஸ்திரி சுப்பிரமணி தான்..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : Mohamed Mufariz.M (30-Oct-19, 3:54 pm)
சேர்த்தது : Mohamed Mufariz
Tanglish : veedu
பார்வை : 774

மேலே