பூ மீது யானை

________:__:_____:_____::______:___

உங்களைத்தான்...

ரொம்ப அவசரமா...

இல்லையே. அப்போ கொஞ்சம் இருங்க.

உங்ககிட்ட பேசணும் போல் தோணுது.
நீங்க என்னை புரிஞ்சுக்க முடியும்.

அப்படியொண்ணும் பெரிய ஆளும் நான் கிடையாது. ரொம்ப சராசரி பொண்ணுதான்.

கல்யாணமா?

அது ஆச்சு. ரெண்டு குழந்தைகள் கூட உண்டு. செக்கச்செவேல்னு....எட்டாம் கிளாஸும் நாலாம் கிளாஸும் படிக்கரங்க. டான் போஸ்கொல.

பெரிய ஸ்கூல்தான். இவருக்கு நல்ல வேலை. நல்ல சம்பளம். அதான்.

அவர் சம்பளமா?  தெரியலை.
இந்த 3BHK அபார்ட்மெண்ட், கார், புடவை, நகை... எனக்கு அவ்வளவுதான் தெரியும்.

நான் கிராமத்து பொண்ணுதான். ஆனா வெகுளியெல்லாம் இல்லை. படிச்சது திருச்சி காலேஜில். பேச்சிலர் டிகிரி. கெமிஸ்ட்ரி. டிகிரி வாங்கிட்டேன். கையோட இந்த கல்யாணமும் ஆச்சு.

ரெண்டு குழந்தைங்க. கண்ணுக்கு நிறைவான புருஷன். பணம். காசு. வீக் எண்ட் சந்தோசமா ஊர் சுத்தி... அப்பறம்...வருஷத்துக்கு ரெண்டு தடவை டூர் மூணாறு, உடுப்பி கோயில்...

என்ன சிரிக்கிறீங்க? இது போதாதா னு கேக்கறீங்களா? போதுமா...

இங்கே பாருங்களேன்..இதோ இந்த இடுப்புக்கு மேலே வட்டமா கருப்பா..தெரியுதா...சிகரெட் சூடு.

இவர் போட்டதுதான்.

சரி விடுங்க. எல்லாத்தையும் காட்டி, அதுக்கு ஒரு கதை சொல்லி...

நீங்க பாட்டு பாடுவீங்களா? கொடுத்து வச்சவங்க. நான் எழுதுவேன்.

எழுதினா ராமரையும் கிருஷ்ணரையும் மட்டும் எழுதினா அது எழுத்தா? அது போதும் னு அவர் சொல்வார்.

வேற யாரை பத்தி எழுதறே? என்னை விட அவனுக்கு பெருசா இருக்குமா னு கேப்பார். அப்போ சிரிச்சிட்டேதான் கேப்பார்.

சிரிச்சிட்டே கேட்டு சிரிச்சிட்டே அடிச்சி சிரிச்சிட்டே சூடு வைப்பார்.

சிரிச்சிட்டே இருந்தா போர்ட்போலியோ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்னு நாடி ஜோசியத்தில் வந்திருக்காம்.

நானும் அழ மாட்டேன். எல்லாம் அங்கே சொன்ன உத்திரவுதான்.

யாரை பத்தி நான் எழுத போறேன். எழுதற ஒருத்தரை படிக்கறேன். அது பிடிச்சு போகுது. அது மாதிரி எனக்கு நடக்குதா நடந்தா என்ன ஆகும் என்ன பண்ணனும் னு யோசிக்கறேன். எழுதி பாக்கிறேன். அது தப்பா?

அப்படியே அதுக்கு கால் வச்சு கண் வச்சு மானே தேனே பொன்மானே போட்டு இதோ இந்த பிரதிலிபி தெரியுமா அதுலதான் வேற பெயர் போட்டு எழுதி வச்சுக்கறேன்.

குடும்ப கதைதான் எழுதுவேன்.

நல்லா இருக்குன்னு நூறு பேர் பாராட்டி சொன்னா... எப்படி குளிரும் தெரியுமா?

சொல்லி இருக்காங்க...

அக்கா அருமை சூப்பர் மேடம் பிரமாதம் அப்டினெல்லாம் வரும்...
நிஜார் போட தெரியாத பையன், நேத்து குத்த வச்ச பொண்ணுங்க கூட அவ்ளோ அழகா கருத்து சொல்லுவாங்க. எது கேட்டாலும்...

ஒரு தடவை நான் வெறும் மூணு வரி கவிதை போட்டப்ப கூட ஒருத்தர் முப்பது வரியில் பாராட்டி இருந்தார். பாவம்...அவருக்கு என்ன கஷ்டமோ னு நினைச்சுக்கிட்டேன்.

ம்ம்ம்...அதுல ஒரு நிம்மதிதான். இது போதும்டா னு மனசுக்கு தோணும்.

ஆனா அங்கும் ஒரு ஆள் இருக்கான். எப்போ பார்த்தாலும் மயிரு மாதிரி கருத்து சொல்லிட்டு...எரிச்சலா வரும்...

அப்ப "நான் என் கஷ்டம் தீர எழுதறேன், பெண்களுக்கு இன்னும் விடிவு வரலை அது உங்களுக்கு புரியாது னு சொல்லிடுவேன்". போதும் அவனுக்கு அந்த பதில்.

டால்ஸ்டாய் படிச்சு டால்ஸ்டாய் மாதிரி எழுதனுமோ...திமிரு.அவனுக்கு...
ஆம்பிளை திமிரு...

நேத்து கூட உலகத்தில் சிறந்த கண்டுபிடிப்பு என்ன னு கேட்டதுக்கு எல்லோரும் பாவம் யோசிச்சு அறிவாளித்தனமா பதில் கொடுக்கும் போது அந்த கிராக்கு உள் பாடி னு சொல்றான். பாத்தீங்களா...
யோவ் அறிவிருக்கா உனக்கு னு கேட்டு எழுதி அப்பறம் அழிச்சிட்டேன்.

எப்படியோ போட்டும்.

நான் எழுதறேன். நீங்க பாடறீங்க. என்
ஃப்ரண்ட் கமலா சூப்பரா வரைவா.

ஒரு நாள் அவ ஆர்ட் பண்ணினதை என் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பில் வச்சேன்.

என்ன படம்னா கேக்கறீங்க? அது ரொம்ப வர்ண கலவையா இருக்கும். ஒரு பெண்ணுறுப்பில் பூமி மலர்வது மாதிரி.

ஏதோ பிக்காஸோ மாடல் கான்டெம்போரரி ஆர்ட் னு சொன்னா.

என் கம்ப்யூட்டர் என் திரையில் ஒரு படம்.

இவர் பார்த்துட்டு உனக்கு இவ்ளோ பெருசா இல்லையே. கமலா வீட்டுக்காரன் பாவம்...ஒருவேளை அவனே.....சீ..விடுங்க.

ஆம்பிளைக்கு நாக்கு சவுக்கு.

நான் ஒண்ணும் பேச மாட்டேன். பதில் தர மாட்டேன். அவர் ஆபிஸ் போனதும் எழுத ஆரம்பிச்சுடுவேன்.

எழுதற சுகம் தனி தெரியுமா? அப்போ மனசு மட்டும் எக்சிபிஷன் மாதிரி மாறிடும். வேடிக்கை பார்த்துட்டே எழுதுவேன். கை பாட்டுக்கு ஓடும்.

நம்ப மாட்டிங்களா...

இப்போ எழுதி காட்டவா?

இருங்க. நான் உங்ககிட்ட பேசின எல்லாமும் சேர்த்து வச்சு ஒரு கதை.

சரியா?

போய்டாதீங்க. பேனா எடுத்துட்டு வரேன்.

பேனா வச்சு பேப்பரில் எழுதி அதை திருத்தி டைப் பண்ணி போடுவேன். பழகிடுச்சு.

நீங்க வந்த நேரம் ஒரு பேனாவும் கிடைக்க மாட்டேங்குது. எல்லாம் பசங்க தூக்கிட்டு ஓடிடுதுங்க.

சிரிக்காதீங்க.

உள்ள அவர் கட்டிலில் படுத்து கிடக்கிறார். அவர் சட்டை பையில் பார்க்கர் பேனா இருக்கும். எடுத்துட்டு வரேன்.

அது அவர் ஜப்பான் போனபோது வாங்கிட்டு வந்தார். பள பள ன்னு...அந்த நிப் கோல்ட் தெரியுமா உங்களுக்கு.

எப்போவாச்சும் என்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்குவார்.

இதோ...இந்த பேனா.

அட...ரெண்டா உடைஞ்சு கிடக்கு....

ம்ம்..

என்ன பண்றது...தப்பு என் மேலதான்.

ஒரே பதட்டம். எனக்கு வர வர நிதானமே இல்லாமல் போயிடுச்சு. அவசர புத்தி.

இந்த பேனா உடையவே உடையாது.

நான் பொறுமையா கொஞ்சம் தள்ளி வச்சு அவரை சுட்டிருந்தா....

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

எழுதியவர் : ஸ்பரிசன் (31-Oct-19, 6:54 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : poo meethu yaanai
பார்வை : 249

மேலே