சாமிநாதனை பேய் அடித்து விட்டது

சாமிநாதனை பேய் அடித்து விட்டது

எங்கள் ஊரில் ஒரே பரபரப்பு, சாமிநாதனை பேய் அடித்து விட்டது, எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் அனறு காலை அவன் இருந்த கோலத்தை பார்த்தவர்கள் அப்படியே நம்பிவிட்டனர். அப்படி இருந்தது அவனது கோலம். முகமெல்லாம் கருத்துப்போய் முடி எல்லாம் கருகியும் இருந்தன. ஏற்கனவே அந்த கலரில் இருப்பவன் இப்பொழுது அட்டைக் கரியாய் இருந்தான். மயக்கமாய் கீழே கிடந்தவனை ஊர் மக்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப அவன் நான் எங்கேயிருக்கிறேன் என்று சினிமாவில் கதாநாயகி கேட்கும் கேள்வி போல கேட்கவும், ஊர் மக்கள் அவனை கண்டிப்பாய் பேய்தான் இந்த அளவுக்கு அடித்திருக்க முடியும் என முடிவு செய்து விட்டனர்.
ஊர் என்றவுடன் நீங்கள் பெரியதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நான்கைந்து தெருக்கள். அந்த தெருக்களில் பத்திருபது வீடுகள், அவ்வளவுதான் எங்கள் ஊர். மற்றபடி ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், அனைத்திற்கும் வெளியூர்தான் சென்றாக வேண்டும். டவுன் பஸ் மட்டும் தினமும் காலை மாலை வந்து திரும்பி செல்லும். ஊருக்குள் ஒன்றிரண்டு பேரிடம் மட்டும் சைக்கிள் இருக்கும். சீமைக்கார பால்பாண்டி வீட்டில் ஒரு பழைய அம்பாசிடர் ஒன்றும், ஒரு “எக்ஸ் எல்” .சூப்பர் வண்டி ஒன்றும் உண்டு. மற்றபடி பெருமான்மையோர் “நடராசா சர்வீஸ்தான்” அதிக பட்சம் எங்கள் ஊரில் வாரம் இரண்டு நாட்கள் ரேசன் கடை திறந்திருக்கும்.
சாமிநாதனை பேய் அடித்ததிலிருந்து மாலை ஆறு மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. மண்ணெண்னை விளக்கை ஏற்றிக்கொண்டு சுப்பண்ணன் வீட்டில் இரவு முழுக்க ஆடும் சீட்டாட்டம் மாலை ஆறு மணிக்கு மேல் மூட்டை கட்ட ஆரம்பித்து விட்டது. அதை விட சாமிநாதனை பேய் அடித்த நாளிலிருந்து எங்கள் ஊரில் தெரு விளக்குகள் எரியாமல் நின்று விட்டன. மக்கள் ஆறு மணிக்கு மேல் நடமாட்டத்தை நிறுத்தி விட்டதால் அவ்வளவாக பாதிப்பு முதலில் தெரியாவிட்டாலும், இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் மக்கள் தெரு விளக்குகளுக்கு ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் கரண்ட் ஆபிசுக்கு போவதற்கும், மற்றபடி அவர்களை அங்கிருந்து கூட்டி வருவது எல்லாம் சாமிநாதன் தான் பார்த்துக்கொண்டிருந்தான், அவனை பேய் அடித்து விட்டதால் யார் “கரண்ட் ஆபிசுக்கு” போவது என்ற கேள்விக்குறி அவர்களுக்குள் எழுந்தது.
சாமிநாதனை பேய் அடித்து ஒரு வாரமாகிவிட்டது. அதற்குள் பலர் பேயை பார்த்த்தாக சொல்லிவிட்டார்கள், ஆனால் எப்படி இருந்தது? என்பது மட்டும் ஒருவருக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை. அவரவருக்கு வசதிப்படி சொல்லிக்கொண்டார்கள். கல் தடுக்கி விழுவது கூட பேயின் வேலையாக இருக்கும் என்ற அளவுக்கு பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஊர் மக்கள் இரவு காவலுக்கு தோட்டம் பக்கம் செல்வது நின்று விட்டது. இரவு நல்லதோ கெட்டதோ, மாலைக்குள் முடித்து விடுவது என்று அவர்களே முடிவு எடுத்து விட்டார்கள். ஆக மொத்தம் சாமிநாதனை பேய் அடித்த சோகத்தை விட ஊர் மக்கள் அடைந்த சோகத்தை சொல்லி மாளாது.
இதற்கு ஒரு வழி காண வேண்டும் என்று அந்த ஊர் இளந்தாரிகள் முடிவு செய்ய அந்த ஊர் பெரிசுகள், தம்பிகளா இது காத்து கருப்பு சமாச்சாரம், பார்த்து நடந்துக்குங்க, என்று அவர்களின் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைக்க அவர்களும் தங்களுடைய இளந்தாரிகளை வெளியில் விடாமல் பிடித்துக்கொண்டனர்.
பக்கத்து ஊரிலிருந்து வந்த ரேசன் கடைக்காரர் அன்று வேலை முடிய இரவு ஏழு மணிக்கு மேல் ஆகி விட்டதால் அதற்கு பின் வீட்டுக்கு கிளம்ப சைக்கிளை எடுக்க அந்த ஊர் மக்கள் தடுத்து சாமிநாதனை பேய் அடித்ததை சொல்லி காலையில் போய்க்கலாம் என்று அறிவுரை சொல்ல அவர் நக்கலாக ஏழு மணிக்கு எந்த பேய் வரும் என்று கிண்டலாய் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ‘விர்ரென’ கிளம்பி விட்டார்.
ஊர் எல்லை தாண்டியதும் வயிறு கட புடாவென சத்தமிட சற்று ஒதுங்கலாம், என்று சைக்கிளை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு இருளில் உட்காரப் போனார். சற்று தொலைவில் ஒரு உருவம் அசைவதை கண்டார். உள்ளத்தில் உதறல் எடுக்க, எழுந்து சைக்கிளை எடுக்கலாம் என்று போனவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு உருவத்தை பார்த்தவுடன் திகைத்து போய்விட்டார். அது பேய் அடித்த சாமிந்தானை போலவே இருந்தது.
.சத்தமில்லாமல் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார். காலையில் நான்கைந்து பேரை கூட்டிக்கொண்டு அந்த இடத்துக்கு வந்து பார்க்க, கரண்ட் கம்பிகள் துண்டு துண்டாய் ஏராளமாய் கிடந்தன. என்னடாவென்று மேலே பார்த்தால் அங்கு கரண்ட் கம்பிகளையும் காணோம்.
உடனே கரண்ட் ஆபிசுக்கு தகவல் தர அங்கிருந்து ஆட்கள் வந்து பார்த்த பின்தான் தெரிந்தது, தெரு விளக்குகளுக்கு வரும் கரண்ட் கம்பிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. சாமிநாதனை பிடித்து விசாரித்ததில் எப்பொழுது கரண்ட் வரும் எப்பொழுது வராது என்பது அவனுக்கு தெரியுமாதலால், கரண்ட் வராத சமயம் கரண்ட் கம்பம் எறி கரண்ட் கம்பிகளை துண்டு போட்டான். அவனது கெட்ட நேரமோ என்னமோ திடீரென்று மின்சாரம் வந்ததால் அவன் முடி கம்பி மீது பட மின்சாரம் தாக்கி கீழே விழுந்திருக்கிறான்.
காலையில் ஊர் ஆட்கள் வந்து அவன் கீழே விழுந்து கிடந்ததை பார்த்தவர்கள் கொஞ்சம் மேலே பார்த்திருந்தால் உண்மை விளங்கியிருக்கும், அதற்குள் இவர்க்ளே பேய் அடித்ததாக முடிவு செய்ய அதுவே சாமிநாதனுக்கு வசதியாக போய் விட்டது.
இப்படியாக ஒரு மின்சாரப்பேய் வந்து சாமிநாதன் மூலமாக எங்கள் ஊரை ஆட்டுவித்துச்சென்றது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Nov-19, 3:11 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 152

மேலே