மருத்துவ வெண்பா – எலுமிச்சம்பழம் - பாடல் 36

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப் பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா

தாகங் குநகநோய் தாழாச் சிலிபதநோய்
வேகங்கொ ளுன்மாந்தம் வீறுபித்தம் – மாகண்ணோய்
கன்னநோய் வாந்தியும்போங் கட்டுவா தித்தொழிலின்
மன்னெலுமிச் சங்கனியை வாழ்த்து. 36

குணம்:

மலபந்தமுள்ள எலுமிச்சம் பழத்தால் தாகம், நகச்சுற்று, யானைக்கால், உள்மாந்தம், பித்தம், கண்ணோய், காது வலி, வமனம் இவைகளை நீக்கும்.

செய்கை:

சீதளகாரி, உதரவாதஹரகாரி, ஜடராக்கினி வர்த்தினி

உபயோகிக்கும் முறை:

இப் பழரசத்தை வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் தினம் 2 வேளை 90 மில்லி நீருடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்.

இதனால் ஆயாசம், தாகம் தீரும். அம்மையினால் நேர்ந்த தேகவெப்பு அடங்கும்..

ஊர்த்துவ முகமாகவேனும், அதோ முகமாகவேனும் பூரித்து வெளியாகும் இரத்தப் போக்கை நிறுத்தும்.

அரை எலுமிச்சம்பழத்தின் சாற்றுடன் சிறிது நீர் விட்டுக் கொடுக்க மார்பெரிச்சல் நீங்கும்.

இப்பழச் சாற்றுடன் நீர் சேர்த்து வாய் கொப்பளிக்க விரணங்கள் ஆறும்.

இப்பழ ரசத்தை பதார்த்தங்களுடன் கூட்ட சுவையும் அதிகரித்து சீரண சக்தியை உண்டாக்கும்.

சாதத்திலும் இப்பழச் சாறைக் கூட்டிச் சாப்பிட மிகச் சுவையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Nov-19, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே