மருத்துவ வெண்பா - சீரகம் - பாடல் 41

நம் இல்லங்களில் சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இடம் பெற்றுள்ள முக்கிய பொருள்களில் சீரகமும் ஒன்று. மற்றப் பொருட்கள் கடுகு, மிளகு, உடைத்த உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவை.

சிறுபிள்ளைகள் இல்லாத வீடு வீடல்ல, சீரகம் இட்டு சமைக்காத கறி, கறி அல்ல என்பது பழமொழி.

நேரிசை வெண்பா

பித்தமெனும் மந்திரியைப் பின்னப் படுத்தியவன்
சத்துருவை யுந்துறந்து சாதித்து - மத்தனெனும்
ராசனையு மீவென்று நண்பைப் பலப்படுத்தி
போசனகு டாரிசெயும் போர். - தேரன் வெண்பா

சித்த மருத்துவத்தில் சீரகத்திற்கு தனி இடம் உண்டு. சீர் + அகம் = சீரகம்; அதாவது உடல் ஆரோக்கியத்தைச் சீர் செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயரானது.

சீரகத்தை அசை, சீரி, துத்தசாம்பலம், பிரத்திவிகா, பித்தநாசினி, மேந்தியம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இந்தியா முழுவதும் சீரகம் பயிர் செய்யப்படுகின்றது. இதற்குச் சிறந்த மணமுண்டு.

சீரகம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. உற்சாகத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். நறுமணத்தையும், இன்சுவையையும் தரும். இதனை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது
.
சீரகத்தைப் பொடி செய்து ரசம், கூட்டு, பொறித்த குழம்பு செய்யும்பொழுது சேர்க்கலாம்.

குடற்புழு நீங்க:

சீரகத்தை நன்கு பொடி செய்தோ அல்லது நன்கு வாயில்போட்டு மென்றோ சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

வயிறு எரிச்சல் குறைய:

சிலருக்கு வயிற்றில் எரிச்சல் உண்டாகும். எவ்வளவு உணவு உண்டாலும் எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் வயிறு எரிச்சல் குறையாது. அதிக வாய்வுள்ள பொருட்களை உட் கொள்வதாலும், அஜீரண பொருட்களை உட்கொள்வதாலும் இது ஏற்படுகின்றது.

இவர்கள் சீரகத்தைப் பொடி செய்து அதில் நீர்விட்டு பசைபோல் கலந்து வயிற்றின்மீது பற்று போட்டால் வயிற்றில் எரிச்சல், வலி போன்றவை குணமாகும்.

தேள்கடி விஷம் நீங்க:

சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்.

மலச்சிக்கல் நீங்க:

சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

சீரகத்துடன் பனங்கற்கண்டு கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த தேகம் வலுப்பெறும். உடலுக்கு புத்துணர்வும், தெம்பும் ஏற்படும்.

தலைவலி, வாந்தி மயக்கம் தீர:

50 கிராம் சீரகத்தை 1 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி சீரகம் ஒடியும்நிலை வந்தவுடன் எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் தலையில் தேய்த்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். தலைவலி, மந்தம், வாந்தி மயக்கம் தீரும்.

சீரக குடிநீர்:

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அந்த நீர் நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்க வேண்டும். தற்போது குடிநீர் சுத்தமானதாக கிடைப்பதில்லை. இதனால் பல வகையான நோய்கள் உண்டாகின்றது.

எனவே நீரை கொதிக்க வைத்து அருந்தவேண்டும். அப்படி கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தினால் சிறுநீரகக் கோளாறு, நீர் சுருக்கு, உடல் சூடு, தலைமுடி உதிர்தல், தாகம், ஜலதோஷம் போன்றவை நீங்கும். நீரினால் உண்டாகும் நோய்கள் ஏதும் நம்மை நெருங்காது. உடலில் உள்ள அசுத்த நீரை வியர்வை சுரப்பி வழியாக வெளியேற்றும். மலச்சிக்கல் தீரும்.

நல்ல குரல்வளம் பெற:

சீரக தண்ணீர் நல்ல குரல்வளத்தைக் கொடுக்கக்கூடியது. இசைத்துறையில் உள்ளவர்கள், பாடகர்கள் சீரகம் கலந்த நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். தொண்டைக்கட்டு, இருமல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

பெண்களுக்கு:

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி குமட்டல் குணமாகும்.

குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் தாய்க்கு சீரகத் தண்ணீர் கொடுத்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். மாதவிலக்குக் காலங்களில் அதிக இரத்தப்போக்கு, சீராக, சீரகம் சிறந்த மருந்தாகிறது.

அதிக மருத்துவக் குணம்கொண்ட சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆரோக்கியத்தைப் பெறலாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Nov-19, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 102

மேலே