மேலான வழியிலே பழகி வானோடு வாழ்க வரைந்து - பண்பு, தருமதீபிகை 535
நேரிசை வெண்பா
சின்ன நினைவுகள் சின்னவனாய்ச் செய்துவிடும்;
அன்ன நிலையை அறிந்துமே - என்னவகை
ஆனாலும் மேலான அவ்வழியி லேபழகி
வானோடு வாழ்க வரைந்து, 535
- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
சின்ன எண்ணங்கள் மனிதனைச் சின்னவனாகச் செய்து விடுமாதலால் அப்புன்மைகளை ஒழித்து எவ்வழியும் நன்மைகளைப் பேணி யாண்டும் மேன்மையாக வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனநினைவுகளால் மனித உலகம் இயங்கி வருகின்றது. புறவுலக நிகழ்ச்சிகளுக்கு நிலையான மூல காரணங்கள் உள்ளே மறைந்திருக்கின்றன. செயல்களால் அயல் வருதலால் காரியங்கள் வெளியே தெரிகின்றன, காரணங்கள் கரந்து நிற்கின்றன. வளர்ந்து ஓங்கிய மரத்தை விழைந்து பார்க்கிறோம். அது எங்கிருந்து வந்தது என்பதை மறந்து விடுகிறோம். சிறிய விதையிலிருந்து கிளர்ந்து பெரிய மரம் வெளி வருதல் போல் நுணுகிய நினைவுகளிலிருந்து மனிதவுலகம் வெளிப்பட்டுள்ளது,
உள்ளே எண்ணி வருகிற எண்ணங்களின்படியே வெளியே மனிதர் வண்ணங்கள் படிந்து வளர்ந்து வருகின்றனர். புனிதமான இனிய எண்ணங்களையே எவ்வழியும் பழகி வருபவர் புண்ணிய சீலர்களாய்ப் பொலிந்து விளங்கித் திவ்விய கதிகளை எய்துகின்றனர். மனம் புனிதமானால் மனிதன் தெய்வமாகிறான்.
தீய நினைவுகளை உடையவர் பாவிகளாயிழிந்து பழிதுயரங்களை அடைகின்றனர். உயர்வும் இன்பமும், இழிவும் துன்பமும் வெளியிலிருந்து வருவன அல்ல. உள்ளத்திலிருந்து வருகின்றன. உள்ளம் நல்லதாயின் எல்லாம் நலமாகின்றன.
நல்ல எண்ணங்களிலிருந்து புகழும் புண்ணியமும் இன்பமும் உளவாகின்றன. தீய எண்ணங்களிலிருந்து பழியும், பாவமும், துன்பமும் விளைகின்றன.
தருமாத்துமா, மகாத்துமா எனச் சிலரை உவந்து புகழ்ந்து உரிமை பாராட்டி வருகிறோம்; அந்த அரிய மகிமைகள் அவர்களுக்கு எதனால் அமைந்தன? செல்வத்தாலா? கல்வியாலா? அதிகாரத்தாலா? அரச பதவியாலா? என்று சிந்திக்க வேண்டும்; எந்த வெளி வசதிகளாலும் அந்த ஒளி உயர்வுகளை அடைய முடியாது; உள்ளப் பண்பினாலேயே அவை இனிது அமைகின்றன.
உள்ளத்தில் இனிய இயல்புகளைப் பழகி வருபவன் உலகத்தில் பெரிய மகானாய் நிலவி நிற்கிறான். சான்றோர், மேலோர், ஆன்றோர் எனத் தோன்றி மிளிர்பவர் எவரும் தருமம், கருணை, சத்தியம் முதலிய உத்தம நீர்மைகளில் ஊன்றி விளைந்தவரேயாவர்.
நல்ல தன்மைகளை உடையவர் எல்லா நன்மைகளையும் எளிதில் அடைந்து கொள்ளுகின்றனர். தன் எண்ணங்களைப் புனிதமாகப் பேணி வருபவர் பெரிய பாக்கியவான்கள் ஆகின்றனர்.
’நெஞ்சு உயர நிலை உயரும்’ என்னும் பழமொழி விழுமிய நிலையை விழி தெரிய விளக்கியுளது. உள்ளம் கெடின் எல்லாம் கேடேயாகும்.
’சின்ன நினைவுகள் சின்னவனாய்ச் செய்து விடும்’ என்றது எண்ணங்களின் அதிசய வலிமைகளை உன்னியுணர வந்தது. இருதயத்தில் இழித்த இயல்புகள் மலிந்திருந்தால் அந்த மனிதன் இழிமகன் என வெளி அறிய வருகிறான்,
அற்பன், ஈனன், தீயவன், கொடியவன், பாதகன், பாவி வன இன்னவாறு இழிநிலைகளில் பழிபட்டிருப்பவர் யார்? கெட்ட எண்ணங்களையே விழைந்து பழகிக் கெட்டுப் போனவர்களே இப்படிப் பட்டங்கள் தாங்கிப் பாழ்பட்டுள்ளனர்.
நல்ல எண்ணம் இன்பத்தை ஊட்டி மனிதனை உயர்த்துகிறது. கெட்ட எண்ணம் துன்பத்தில் ஆழ்த்தித் தாழ்த்தி விடுகிறது.
தன் நெஞ்சில் தீய சிந்தனைகளைச் செய்து வருகிறவன் தனக்கு என்றும் தீராத நரக துன்பங்களைச் செய்தவனாகிறான்,
The suicide of the soul is evil thought; In it is the poison.
கெட்ட எண்ணம் உயிரின் படுகொலையாம்; அதில் கொடிய நஞ்சுள்ளது' என்னுமிது இங்கே அறிய வுரியது.
கேடான சிந்தனைகளால் நெஞ்சு பாழாகின்றது; ஆகவே அந்த மனிதன் இழிந்து அழிதுயரங்களை அடைய நேர்கின்றான்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தன்நெஞ்சம் தனக்குச் சான்றது வாகத்
..தத்துவம் நன்குண ராதே
வன்னெஞ்ச னாகிக் கூடமே புரிவோன்
..வஞ்சகக் கூற்றினும் கொடியோன்
பன்னுங்கால் அவன்றன் தெரிசனம் பரிசம்
..பழுதுற நிரயயே துவுமாம்
புன்னெஞ்சால் அவனும் போய்நர கெய்திப்
..பூமியுள் ளளவுமே றானால். - பெருந்திரட்டு
நெஞ்சு கெடின் அந்த மனிதன் நஞ்சாய் நாசமடைகின்றான் என இந்தப் பாசுரம் உணர்த்தியுள்ளது.
தன்னைச் சின்னவனாக்கிச் சீரழிக்கின்ற தீய நினைவுகளை அறவே நீக்கித் தூய எண்ணங்களையே ஒருவன் பழகி வரவேண்டும். ஞான வாழ்வு நலம் பல தருகிறது.
’வானோடு வாழ்க’ என்றது மேலான குண நலங்களோடே பழகி எவ்வழியும் உயர்ந்த குறிக்கோளுடன் ஒழுகி வருதலைக் கருதி வந்தது. இம்மையும் அம்மையும் இனிமையுறும்படி தன்மை தழுவி நன்மையுடன் வாழ்ந்துவரின் அவ்வாழ்வு எம்மையும் இன்பமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.