தன்னதெனும் வித்து மடியின் நிலையான ஓரின்பமாகும் உணர் - பண்பு, தருமதீபிகை 539

நேரிசை வெண்பா

வித்து மடியின் விளைவுமிகும் தன்னதெனும்
வித்து மடியின் வியனாகி - எத்திறத்தும்
பேரின்ப மாகப் பெருகி நிலையான
ஓரின்ப மாகும் உணர். 539

- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வித்து மடிந்தால் விளைவு மிகுந்து வரும்; தனது என்னும் பற்று ஒழிந்தால் அரிய பேரின்பம் பெருகி எழும், புனிதமான இந்த இனிய நிலையை நுணுகி உணர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்,

மனிதனிடம் உயர்ந்த அறிவு மருவியிருக்கின்றது. இருந்தும் இழிந்த எண்ணங்களால் அவை பாழாயழிந்து போகின்றன. தன்னுடைய தாழ்வுக்கும் உயர்வுக்கும் தனது உள்ளமே .காரணமாக உள்ளமையை அவன் உணர்ந்து கொள்ளாமையால் ஊனங்கள் பல விளைந்து ஈனங்கள் பெருகி நிற்கின்றன. துயரங்களையும் இழிவுகளையும் விளைத்துக் கொண்டு வழிவழியாகவே அவல நிலைகளில் சீவர்கள் அலமந்து வருகின்றனர்.

இழிந்த புன்மைகள் ஒழிந்த பொழுதுதான் உயர்ந்த நன்மைகள் உளவாகின்றன. இனிய கருமங்கள் மூலமாயரிய தருமங்கள் விளைகின்றன. விளைத்த வினைப் போகங்களையே யாவரும் அனுபவித்து வருதலால் நுகர்ச்சிகளுக்கு முயற்சிகள் மூல காரணங்களாயின.

’வித்து மடியின் விளைவு மிகும்’ என்றது விதை விளைவுகளின் நிலைகளை உய்த்துணர வந்தது.

நிலத்தில் விதைத்த வித்து அப்படியே கிடந்தால் அதிலிருந்து யாதொரு விளைவும் உண்டாகாது. அது உருமாறி மடிந்த போதுதான் அதிலிருந்து முளை கிளம்பி மிகுந்த விளைவுகள் தோன்றுகின்றன.

தான் என்கிற அகங்காரம் தடித்திருக்கும் வரையும் உண்மையான புனித போகங்கள் மனிதனுககு உளவாகாது. பொல்லாத சீவ சுபாவங்கள் மாறிய பொழுதுதான் நல்ல தெய்வீக இன்பங்கள் மேலோங்கி வருகின்றன.

அகங்காரத்தை ’தன்னது எனும் வித்து’ என்றது. ஆணவ முனைப்பு நுணுகிய நிலையில் அணுகியிருத்தலால் வித்து என வந்தது. உயிர்கள் அடைகிற துயரங்களுக்கெல்லாம் பூரணமான காரண பூதமாய் இது மாரணம் விளைத்துள்ளது.

ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
ஆணவத் தினும்வலிதுகாண்
அறிவினை மயக்கிடும் நடுவறிய வொட்டாது
யாதொன்று தொடினும்அதுவாய்த்
தாங்காது மொழிபேசும் அரிகரப் பிரமாதி
தம்மொடு சமானமென்னுந்
தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்காரெ னக்குநிகர் என்னப்ர தாபித்
திராவணா காரமாகி
இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடுசெய்
திருக்கும் இதனொடெந் நேரமும்
வாங்காநி லாஅடிமை போராட முடியுமோ? 9 மௌனகுரு வணக்கம், தாயுமானவர்

எனத் தாயுமானவர் இவ்வாறு பாடியிருக்கிறார். சீவ போதத்தோடு மாறாயவர் போராடியுள்ள நிலைகளை இது காட்டியுள்ளது. மானச தத்துவங்கள் ஞான போதமாய் வருதலால் அவை நன்கு உய்த்துணர வுரியன.

ஆங்காரம், ஆணவம் என்பன நான் என்னும் முனைப்புகளாய்த் தடித்து எழுகின்ற சீவத் திமிர்கள். முன்னது மனத்திலிருந்து மண்டி எழுவது, பின்னது உயிரோடு சார்ந்து உருமியுள்ளது. இவை இரண்டும் உண்மை நிலைகளை மறைத்துப் புன்மை புரிவதாதலால் பிறவித் துயரங்களுக்கு மூலங்களாயின. நான் செய்தேன்; எல்லாம் என்னாலாயின என அகத்திலிருந்து செருக்கி வருவது அகங்காரம் என வந்தது.

அகம் - மனம். காரம் - உறைப்பு, முனைப்பு. இதுவே முதல் நீண்டு பின்பு ஆங்காரம் என நேர்ந்தது.

எல்லாம் இறைவன் செயல் என்று அமைதியாய் அடங்கி ஒழுகுவது உயர்ந்த ஞான சீலமாம், அங்ஙனமின்றி அகங்காரமாய் அடங்கொண்டு நிற்பது மடம் கொண்ட படியாம். தெருண்டு தெளியாமல் மருண்டு மயங்கி நிற்றலால் இது மருள், இருள், மயக்கம் என வந்தது.

இழிந்த மாய மயக்கங்களே உலகை வளைந்து கொண்டு யாண்டும் ஓயாமல் வதைத்து வருகின்றன. இருண்ட மருள்களில் புரண்டு வருதலால் சீவர்களிடம் ஆங்காரங்கள் ஓங்கி நிற்கின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் மா அரையடிக்கு)

அமைவ றிந்திடா ஆணவப் பயலே
..அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
எமைந டத்துவோன் ஈதுண ராமல்
..இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
..கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
..உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. 8

கருமை யாம்அகங் காரமர்க் கடவா
..கடைய னேஉனைக் கலந்தத னாலே
அருமை யாகநாம் பாடினோம் கல்வி
..அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
இருமை இன்பமும் பெற்றனம் என்றே
..எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
..உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே. 9 - 39. நெடுமொழி வஞ்சி, திருவொற்றியூர், இரண்டாம் திருமுறை, முதல் தொகுதி, அருட்பா

அகங்காரத்தையும், ஆணவத்தையும் நோக்கி இராமலிங்க சுவாமிகள் இவ்வாறு உரையாடியிருக்கிறார். அவற்றின் செயல் இயல்களை இவற்றுள் ஊன்றி உணர்ந்து கொள்கிறோம். ’அகங்கார ஆணவங்களே! என்னை நீங்கள் கெடுத்து விட்டீர்கள், மிகவும் கெட்டுப் போனேன், இப்பொழுது தெளிந்து கொண்டேன்; இனிமேல் ஒழிந்து போய் விடுங்கள், நின்றால் மாண்டு படுவீர்கள், இறைவன் திருவருளை எய்தியுள்ளேன்; ஞான வாள் என் கையில் உள்ளது; வெட்டி விடுவேன்' என அவர் வெருட்டியிருக்கும் காட்சியை இதில் கருதிக் காண வேண்டும்.

தான் என்னும் செருக்கு ஈனப்படுத்தி விடுகிறது, எல்லாம் அவன் செயல் எனத் தெய்வ சிந்தனை செய்து ஒழுகிவரின் அது உய்தி நலனை உதவியருளுகிறது. தெளிந்த ஞானம் விளைந்து வர இழிந்த ஈனம் ஒழிந்து போகிறது.

மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் உண்மையான உயர்ந்த பொருளை உணர்ந்து உய்தி பெறுவதேயாம். நித்திய நிலையைச் சிந்தனை செய்து வருபவர் உத்தம கதிகளை அடைந்து .கொள்ளுகின்றனர்.

நேரிசை வெண்பா

இன்ப மயமான ஈசனையே எண்ணினேன்;
துன்பமெலாம் நீங்கிச் சுகமடைந்தேன் - முன்புநான்
எண்ணி இழிந்த இழிபிறவி யாவுமே
மண்ணா யழிந்த மடிந்து.

புனிதமான தெய்வ சிந்தனை அதிசய ஆனந்தத்தை அருளி வருதலால் அதனையுடையவர் பேரின்ப நிலையாய்ப் பெருகி நிற்கின்றனர்.

25.வாக்கு மனனும் யாக்கையு மொன்றாச்
சொற்றரு கரண மற்றிவை மூன்றும்
நின்புகழ் நவிற்றியு நினைத்துநின் றுணைத்தாள்
அன்புட னிறைஞ்சியு மின்பமுற் றனவால்
அவகர ணங்களே யல்லமற் றம்ம

30 சிவகர ணங்களாய்ந் திரிந்தன வன்றே, அதனாற்
றிரிகர ணங்களெள் றுரைசெயு மப்பெயர்
ஒருபொருட் களவியெல் லோர்க்கும்
இருபொருட் கிளவியா யிருந்ததின் றெனக்கே. 23 பண்டார மும்மணிக்கோவை

தம்முடைய மனம், மொழி, மெய்கள் சிவபெருமானையே மருவியுள்ளமையால் சிவ கரணங்கள் ஆயின, அவகரணங்கள் என்னும் அவப் பெயர்கள் போயின எனக் குமரகுருபர சுவாமிகள் இவ்வாறு கூறியுள்ளமையால் அவரது புனித வாழ்வு இனிது தெளிவாயது. உள்ளம் பரமனோடு தோய்ந்த அளவில் உவகை வெள்ளம் பாய்ந்து வருகிறது.

மூன்று என்னும் தொகையின் வகையாய்த் திரிகரணங்கள் எனப் பொதுவாய் இருந்தது, தம்மிடத்தில் அவை சிவ கரணங்களாய்த் திரிந்து வந்தமையால் இரு பொருட் கிளவி ஆயது என உரைத்திருக்கும் அழகு உணர்வுக் காட்சியாயுள்ளது.

தன்னைக் கருதி வருகிற உள்ளத்தில் ஈசன் வாசமாயிருத்தலால் அந்த அன்பன் இன்ப நிலையாய் இனிது நிலவுகிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஒருகணம் இருப்பன் தெய்வ
..வுருவினில் ஈசன் தான்மற்(று)
இருகணம் செங்கோல் ஓச்சும்
..இறையவர் பால்இ ருப்பன்;
அருமறை யவர்கு ழாத்துள்
..அம்புவீழ் அளவி ருப்பன்:
துரியயோ கிகள்உ ளத்தில்
..தூங்குவன் இருந்தெப் போதும். – பதிபசு பாச விளக்கம்

கடவுள் நிலையை இது காட்டியுள்ளது. உணர்வுக் காட்சிகளை ஊன்றி நோக்கி உறுதி நலங்களைக் காண வேண்டும்.

மனிதன் பிரியமாய்க் கருதி வருவதை உறுதியாய் அடைந்து கொள்கிறான். தூய நாட்டம் தோய்ந்த போது, தீய நாட்டம் ஓய்ந்து போய் ஏக இன்பம் எய்துகிறது.

உள்ளத்தை உயர்வாகப் பண்படுத்தினால் உயர்ந்த இன்பப் பொருள் அதில் விளைந்து வருகிறது. அந்த ஆனந்த போகத்தை அடைந்து கொள்பவன் அதிசய பாக்கியவானாய் அமரரும் துதி செய்யப் பெறுகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Nov-19, 1:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே