காட்சி புரிந்தருளும் காமர் விழிபோல கல்வியும் செல்வமும் கண் - கல்வி, தருமதீபிகை 551

நேரிசை வெண்பா

காட்சி புரிந்தருளும் காமர் விழிபோல
மாட்சி புரிந்து மனுக்குலத்தை - ஆட்சியாய்ப்
பல்வழியும் ஊக்கிப் பயன்காட்டி நிற்றலால்
கல்வியும் செல்வமும் கண். 551

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

காட்சிகளைக் கண்டருளுகிற அழகிய விழிகள் போல மாட்சி புரிந்து மனித சாதியைப் பல வழிகளிலும் உயர்த்திப் பயன் விளைத்து வருதலால் கல்வியும் செல்வமும் இரண்டு கண்கள் எனப்படும். இது கல்வியின் மாட்சியை உணர்த்துகிறது.

அறிவு ஆன்ம நீர்மை. அது இயற்கை செயற்கை என இருவகையாயுள்ளது. மனிதனிடம் இயல்பாய் அமைந்திருப்பது இயற்கையறிவு, கற்றல், கேட்டல் முதலிய செயல்களால் வளர்ந்து வருவது செயற்கையறிவு. முன்னது நிலை அறிவு; பின்னது கலை அறிவு எனப்படும்.

பொதுவாகப் பிறப்புரிமையில் அமைந்த அந்த அறிவு கல்விப் பயிற்சியால் சிறந்து வருதலால் சிறப்பறிவு என உயர்ந்து தெளிவாய்த் தேசு மிகுந்துள்ளது.

கல்வி என்னும் பெயர் காரணக் குறியாய் அமைந்தது. கல்லுதல் என்பது கிளைத்தல், தோண்டுதல், அருவுதல் என்னும் தொழில்களை உணர்த்தி வரும். உள்ளத்தில் உறைந்துள்ள அறிவைக் கிளைத்துக் கொள்ளுதல், நூல்களைத் துருவிக் கற்றல் என்னும் வினைக்குறிப்புகளால் கல்வி என்னும் பேர் விளங்கி நின்றது.

Education is the manifestation of the perfection already in man. - Vivekananda

மனிதனுள் முன்னதாகவே நிறைந்து உறைந்திருப்பதை வெளிப்படுத்திக் கொள்வதே கல்வி' என விவேகானந்தர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.

Wit and wisdom are born with a man. - Selden

’அறிவும் ஞானமும் மனிதனோடு கூடவே பிறந்திருக்கின்றன’ என்று ஜான் செல்டென் என்பவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். இயல்பாகவே அறிவுடைய மனிதன் பயிற்சியால் உயர்ச்சியடைந்து கொள்கிறான்.

ஊற்று நீரைத் தோண்டிக் கொள்வது போலவும், விளக்கைத் தூண்டி விடுவது போலவும் கல்வி ஈண்டு விளங்கியுள்ளமையை ஊன்றியுணர்ந்து கொள்ள வேண்டும்.

அறிவைத் தெளிவாக்கி ஒளி செய்து வருதலால் மனிதனுக்குக் கல்வி விழி என வந்தது. நல்ல வழிகளைக் காட்டி நலம் பல ஊட்டி வாழ்வை வளம்படுத்தி வரும் தன்மை கல்விக்கு உண்மையால் அதனைக் கண் என்று முன்னோர் அருமையாகக் கருதி யுரைத்துள்ளனர்.

காலங்களால் சுரந்து, தேசங்களால் பிரிந்து, நெடிது மறைந்துள்ள எல்லாப் பொருள்களையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி செய்தலால் நேரே காணுகின்ற கண்ணினும் கல்வி அரிய காட்சியும் பெரிய மாட்சியும் உடையதாம்.

முகத்தில் உள்ளது ஊனக் கண், அகத்தில் உள்ள கல்வி ஞானக் கண். எதிரே நேர்ந்த உருவப் பொருள்களை மாத்திரம் அது காணும்; இது எல்லாவற்றையும் எளிதே கண்டு கொள்ளும். அதன் காட்சியில் பட்டது மறைந்து போகும்; இதன் காட்சியில் வந்தது என்றும் மறையாது நின்று நிலவும். இவ்வளவு மகிமை உடையதாயினும் எவரும் எளிதே தெளிய விழியுவமை வந்தது.

காட்சி புரிந்து அருளாத குருட்டுக் கண்களும் உளவாதலால் அவற்றை விலக்கி யுணர காமர் விழி என்றது. காமர் – அழகு, அருமை கருதி விழுமிய கல்வியை அழகிய கண் என்றது.

கல்வி உயிர்க்குக் கண்ணாயுள்ளமையால் உடலின் கண்ணோடு இணைத்துக் காட்டி உணர்த்த நேர்ந்தது.

எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு. 392 கல்வி

எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும். - ஒளவையார்

வள்ளுவரும் ஒளவையாரும் கல்வியை இங்ஙனம் குறித்துள்ளனர்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

கற்றறி வாளர் கருதிய காலத்து
கற்றறி வாளர் கருத்திலோர் கண்உண்டு
கற்றறி வாளர் கருதியுரை செய்யும்
கற்றறி காட்டக் கனலுள வாக்குமே. 2 - 23. கல்வி, முதல் தந்திரம், பத்தாம் திருமுறை, திருமந்திரம்

கல்வியைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு உரைத்திருக்கிறார்.

‘கல்வியும் செல்வமும் கண்’. மனித சமுதாயத்திற்கு இனிய கண்கள் இவை என இது சுவையாக உணர்த்தியுள்ளது. உயிர் வாழ்க்கை கண்களால் இதமாக இயங்கி வருகிறது; உலக வாழ்க்கை கல்வி செல்வங்களால் உயர்வாக நடந்து வருகிறது. ஒளி வழியே யாவும் வெளியாய் உலாவுகின்றன. -

சூரியன் சந்திரன் என்னும் இரண்டு பெரிய ஒளிகளைத் தனக்கு இனிய விழிகளாக உலகம் மருவியிருத்தலால் எல்லாம் இனிது நிகழ்ந்து வருகின்றன. விழிப்புடையது விழி என வந்தது. எல்லாரும் விழிப்பாய் வேலை செய்ய விழிகள் ஒளி புரிந்து அருளுகின்றன.

உலக வாழ்வு அந்த ஒளிகளால் மேன்மையடைந்து வருதல் போல் மனித வாழ்வு கல்வி, செல்வம் என்னும் இந்த ஒளிகளால் மகிமையடைந்து வருகிறது.

‘மனுக் குலத்தை மாட்சி புரிந்து’ என்றது மனித இனத்துக்கு இவை செய்து வரும் காட்சியைக் கருதிக் காண வந்தது. அகம், புறம் என்னும் இருவகை நிலைகளில் நின்று முறையே இவை பெருமைகளை அருளி வருகின்றன. திருவும் அறிவும் உருவும் உயிரும் என மருவியுள்ளன.

மடமை இருளை நீக்கி மதி ஒளி ஆக்கி அதிசய நிலையில் கல்வி மனிதனை மகிமைப் படுத்துகிறது. வறுமைத் துயரை ஒழித்து வளம் பல பெருக்கிச் செல்வம் சிறப்புச் செய்கிறது.

கல்வி மாத்திரம் இருப்பின் அவர் ஒரு கண் உ.டையவரே. கல்வியோடு செல்வமும் சேரின் அவர் இரு கண்ணாளராய் எழில் மிகப் பெறுகின்றார். இரு பெருந்திருவும் ஒருவரிடம் ஒருங்கமைந்திருப்பது அரிய காட்சியாய்ப் பெரிய மாட்சி தருகிறது.

கல்வியில்லாத செல்வர் ஒற்றைக் கண்ணராய் உறுகண் உறுகின்றார். கல்வியோடு கலவாத செல்வம் மணமிழந்த மலராய் மாண்பிழந்து படுதலால் அதன் துணை நிலை யுணரலாகும்.

கல்வி எல்லா மகிமைகளையும் தருகிறது; மனிதனைத் தெய்வமாக்கி யருளுகிறது, ஆகவே அது சீவ அமுதமாய்த் தேசு மிகுந்துள்ளது.

இன்னிசை வெண்பா

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து. 132 கல்வி, நாலடியார்

நேரிசை வெண்பா

அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் – உறும்கவலொன்(று)
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்(கு) உற்ற துணை. 2 நீதிநெறி விளக்கம்

கல்வியின் அருமை பெருமைகளையும், மாந்தருக்கு அது செய்து வருகிற உறுதி நலங்களையும் இவை உணர்த்தி யுள்ளன.

நிலையினில் சலியா நிலைமை யானும்
பலவுல(கு) எடுத்த ஒருதிறத் தானும்
நிறையும் பொறையும் பெறுநிலை யானும்
தேவர் மூவரும் காவ லானும்
5 தமனியப் பராரைச் சைலம் ஆகியும்,

அளக்கவென்று அமையாப் பரப்பின தானும்
அமுதமும் திருவும் உதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுக லானும்
முள்ளுடைக் கோட்டு முனைஎறி சுறவம்
10 அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும்,

நிறையுளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை
தருதலின் வானத் தருஐந்(து) ஆகியும்,
மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருத்தலின்
அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும்,
15 உயிர்பரிந்(து) அளித்தலின் புலமிசை போக்கலின்

படிமுழு(து) அளந்த நெடியோன் ஆகியும்
இறுதியில் சலியா(து) இருத்த லானும்
மறுமை தந்துதவும் இருமை யாலும்
பெண்ணிடம் கலந்த புண்ணியன் ஆகியும்,
20 அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும்,

கொள்ளுநர் கொள்ளக் குறையா(து) ஆதலின்
நிறையுளம் நீங்கா துறையருள் ஆகியும்,
அவைமுத லாகி இருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி. 11 கல்லாடம்

மேருமலை, கடல், கற்பகதரு, பிரமன், திருமால், சிவபெருமான், கண், அருள் என்னும் இந்த அருமைப் பொருள்களோடு சிலேடையாக நேர் வைத்து ஒப்புரைத்து கல்வியின் பெருமையைக் கல்லாடர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். இதில் குறித்துள்ள பொருள் நிலைகளையும் அழகுகளையும் ஓர்ந்து கொள்ள வேண்டும். அறிவின் சுவைகள் இங்கே பெருகியுள்ளன.

கல்வி இங்ஙனம் அதிசய நலங்களை அருளி எழுமையும் இன்புறுத்தி வருதலால் உயிர்க்கு உறுதியாக நன்கு உரிமை செய்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-19, 3:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே