நினைவில் நின்ற கவிஞன்

ஒத்த கருத்தோடு
ஒட்டி வாழ்வது
சமூகத்தில் எளிது.

மாற்றுக் கருத்தை
உற்ற கருத்தாய்
உருமாற்ற நினைப்பது
அவனியில் என்றும் பெரிது.

உற்ற கருத்தை
துணிந்து ஒலித்தவன் நீ...
மக்கள் நலம் வாழும்
மாற்றுக் கருத்தை
அவனியில் விதைத்தவன் நீ...

மண்ணில் மறைந்து
ஆண்டுகள் பல ஆனாலும்
அப்பா என்றதும்
பலசமயம்
நினைவில் வருகிறது உன் பா
ரதிஅழகின் உச்சம்
பாரதி பாட்டின் உச்சம்..

ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை பூமியில்
சமதர்மத்தை காட்டினாய்
இழிவு கொண்ட மனிதர்
இந்தியாவில் இல்லை என்று
சாதி மத பேதத்தை வெறுத்தாய்..

உயிர்கள் அனைத்தும் ஒன்று
உலகிற்கு உவமை காட்டினாய்
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற
உயர்ஜாதி கவிஞன் நீ
பிறப்பால் அல்ல பாட்டால்....

சுடர்மிகும் அறிவுடன்
சிவசக்தியை கூப்பிட்டு
உன் நலம் கேட்கவில்லை
ஊராரின் நலம் வேண்டுமென்றாய்..

வறுமையை உனது ஆக்கினாய்
பாட்டை இனிமையாக்கினாய் விடுதலை எழுச்சியை உருவாக்கினாய்
மக்கள் வீறுகொண்டு எழச்செய்தாய்

நேர்கொண்ட பார்வை உமது
சிந்தனைத் தடுமாற்றங்களோ எமது
உதற மாட்டோம் உன் நினைவை
நெஞ்சில் நிறைந்த கவிஞனே..

எழுதியவர் : அலாவுதீன் (11-Dec-19, 6:51 pm)
பார்வை : 128

மேலே