பாட்டுக்கு அதிபதி பாரதி

முப்பத்தொன்பதை முடிக்காமலேயே
முடிந்து போனாலும்
எழுத இன்னும் எதுவுமில்லை
என்னும் அளவிற்கு
எல்லாம் எழுதிய
எப்போதும் வென்றான்...
எட்டாத புகழ் எட்டிய
எட்டையபுரத்தார்...
பாட்டுகொரு புலவன்
மகாகவி பாரதியின்
பிறந்தநாள் இன்று...

இன்னும் அறுபத்தொன்று
வாழ்ந்திருந்தால்
என்னவெல்லாம் எழுதியிருப்பாரோ...
அவர் எண்ணமெல்லாம்
சொல்லியிருப்பாரோ...

மகாகவி பாரதியின்
அநீதி எதிர்க்கும் அனல் வரிகளும்
மனிதம் நேசிக்கும் அமுத வரிகளும்
ஒட்டுமொத்த உலகிற்கு
அவர் வழங்கிய ஒப்பற்ற கொடை..

பாரதியின் பாடல்கள்...
ஆவேச அக்னி வளர்த்தாலும்
அழகாய்ப் பூக்கள் சொரிந்தாலும்
படிக்கிற போதெல்லாம்
கொதிக்கிற மனங்களையும்
குளிர வைத்துப் பார்க்கும்.. அறிவை
ஒளிர வைத்துப் போகும்...

பெற்ற சுதந்திரத்திற்கு
இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பே
இறப்பை வரவேற்றுக்
காத்திருந்தாயோ... பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
பாருக்கு அறிவித்தாய்
மகாகவி... பாரதி நீ...

சுதந்திரத்தைப் பெறும் முன்னரே
சுதந்திரத்தைக் கொண்டாடியது
பாரதி நீயாகத்தான் இருக்கும்...

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே:
ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று...
அழகாகப் பாடிச் சென்றாய்...

"காசி நகர்ப் புலவர்
பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர்
கருவி செய்வோம்"..

மொபைல் போன்களும்
முக நூல்களும்.. வாட்ஸ்அப்களும்
வருவதை நூறாண்டுகளுக்கு
முன்னரே உரைத்தாயே...
நின்புகழ் நூறாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் நிலைத்திருக்கும்...

பாரதியே.. பாடல்களின் அதிபதியே..
நினைப் போற்றிப் புகழ்ந்து பாட
நின் நற்புகழ் பரப்ப
வரிகள் தேடத் தேவை இல்லை
உந்தன் பாடல் வரிகளே போதும்...
உன் புகழ் பாடும்... அதில்
ஆயிரம் அர்த்தங்கள் சேரும்..

ஒளி படைத்த
கண்ணினாய் வா வா வா...
உறுதி கொண்ட
நெஞ்சினாய் வா வா வா...
உனது பாடல்கள்
எல்லாவற்றிலும் வாழ்கின்ற
பாரதியே... புவியில்
என்றென்றும் வாழ்வாய் நீயே..

எல்லோரும் ஓர்குலம்
எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...
சமத்துவ சமுதாயம் கண்ட
பாரதியின் புகழ்... என்றும்
வாழ்க!.. வாழ்க!!. வாழ்கவே!..

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்...
👍🙏🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (11-Dec-19, 9:07 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 142

மேலே