திருநங்கையின் கணவன்

திருநங்கையின் கணவன்
==========
புதுப்பேட்டைப் பகுதியில் கனகராசுவைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவனது பெயர் அந்த அளவுக்குப் பிரபலமான பெயுர். வீர் தீர சாகஸங்கள் செய்தோ அல்லது படிப்பில் பெரிய புலியாக இருந்தோ அவனுக்கு நல்ல பெயர் வாங்கிய அனுபவம் கிடையாது.
=====
அதற்கு மாறாக அவன் பெரிய ”ஜோள்ளு மன்னன்” என்பதை யாரும் மறுக்கமுடியாத அளவுக்குப் “நற்பெயர்” பெற்றிருந்தான். யாருக்கும் இடையூறு செய்யாமல் ஜொள்ளுவிட்டு, கண்களால் காமரசம் பருகுதைத் தடை செய்ய நாட்டில் எந்த சட்டமும் நடைமுறையில் இல்லாதது கனகராசு போன்ற ஜொள்ளு-லொள்ளு மன்னர்களுக்கு மிகவும் சாதகமான விஷயம் தான்.
======
முதுகலைப் படிப்பை முடித்திருக்கவேண்டிய வயதில், தட்டுத் தடுமாறி பல கஜினி பல்ட்டிகளுக்குப்பின் தேர்வுத் தாள் திருத்தும் ஆசிரியர்களிடையே வீசிய அனுதாப அலையின் விளைவாக, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தான் கனகு

எல்லாப் பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சிக்கான மதிப்பெண் என்னவோ அதையே பெற்றிருந்தான் கனகு, கனகராசும் அவன் பெற்றோர் எட்டியப்பனும், அய்யம்மாளும் அடைந்த பேரானந்தத்தை ஒலிம்பிக் பந்தயத்தில் புதிய உலக சாதனை படைத்து பல தங்கப் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரன்கூட அடைந்திருக்கமாட்டான்.

எட்டாம் வகுப்புவரை படித்துவிட்டு, காவல் துறையில் முப்பதாண்டு பணிக்குப் பின் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் எட்டியப்பனுக்கும், ஐந்தாம் வகுப்பே படித்த அய்யமாளுக்கும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் தங்கள் மகன் தேர்ச்சி பெற்றது ஏதோ செயற்கரிய செயலை அவன் செய்துவிட்டதாக எண்ணிப் பெருமைப்பட்டனர். . அதனால் கனகு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தார்கள். செல்பேசி முதல் யமஹா மோட்டார் சைக்கிள் வரை ஏராளமான பரிசுகளை மனமுவந்து வாங்கிக் கொடுத்தார் எட்டியப்பன்.
======
வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எட்டியப்பன் திறம்படச் செய்யும் காரியம், தான் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாமூல் வசூலிப்பதுதான். எதிர்பார்க்கும் அளவுக்கு மேலாக வசூல் செய்வதில் எட்டியப்பனை யாரும் மிஞ்ச முடியாது. எனவே வசூலான மாமூல் தொகையைப் பங்கிட்டுக் கொள்ளும் அத்தனைபேரிடமும் எட்டியப்பனுக்கு நல்ல பெயர். ஒவ்வொரு தடவையும் வசூலான தொகையில் யாருக்கும் தெரியாமல் ஒரு கணிசமான தொகையைச் சுருட்டிக்கொள்வதும் எட்டியப்பனுக்குக் கைவந்த கலை. தனது சகாக்களிடம் “வசூல் ராஜா’ திரைப் படம் வெளியாவதற்கு முன்பே “வசூல் ராஜா” என்ற பட்டப் பெயரைப் பெற்றவர் நம் எட்டியப்பன். அவர் பணியாற்றும் காவல் நிலையத்தில் ’எல்லொரும் அவரை ’வசூல் ராஜா’ என்று தான் மரியாதையோடு அழைப்பார்கள்.
======
எட்டியப்பனும் அய்யமாளும் தவமிருந்து பெற்ற ஒரே பிள்ளை தான் கனகராசு. அதனால் கனகு எது கேட்டாலும் மறுப்புச் சொல்லாமல் வாங்கிக் கொடுப்பார் எட்டியப்பன். செல்லம் கொடுத்தே தன் மகனைக் கெடுத்துவிட்டோம் என்று கனகுவின் பெற்றோர் எப்போதும் எண்ணியதில்லை. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் கனகு ஒற்றைப்படை மதிப்பெண் பெற்றபோதெல்லாம் அவர்கள் கனகுவைக் கடிந்து கொளவதை விட்டு அவனது ஆசிரியர்களைத் தான் குற்றவாளிகளாக்கிப் பார்ப்பார்கள். ”அந்த நாசமாப் போன வாத்தியாருங்க தா வேணுமின்னே கனவுக்கு மார்க்கக் கொறச்சுப் போட்டுடாங்க” என்று ஆசிரியர்களைத் திட்டித் தீர்ப்பார்கள். கனவு சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் பார்வையில் முழு கவனத்தோடு படிப்பதுபோல நடிப்பதில் நடிகர் திலகம்.
=====
தனது பன்னிரண்டாவது வயது வரை எந்த நேரமும் தெருவில் கிரிக்கெட் விளையாடியே பொழுதைக் கழித்ததுடன், புதுப்பேட்டை பகுதியில் அவனது வயதையொத்த பையன்கள் பலரையும் கெடுத்த பெருமையும் கனகுவுக்கு உண்டு. பன்னிரண்டாம் வயது முடிவதற்குள் கனகுவின் ரசனை கண்களால் காமச் சுவையைப் பருகும் நிலையை எட்டியது. கிரிக்கெட்டும் ஜொள்ளும் கனகுவுக்கு இரு விழிகளாகின.
(தொடரும்)

எழுதியவர் : மலர் (14-Dec-19, 5:07 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 187

மேலே