திருவாதிரை திருவிழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் - ஜன 10ல் ஆருத்ரா தரிசனம்

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன நிகழ்வை முன்னிட்டு, நடராஜர், சிவகாமசுந்ததி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.

பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் விளங்குவது கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம் தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். பரதம் என்னும் நாட்டியக் கலையை தோற்றுவித்த நாயகரான நடராஜர் நாட்டியமாடும் கோலத்தில் இருக்கும் தலம். இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம், மனித உடலமைப்பை பிரதிபலிக்கும் கோவிலாககவும் உள்ளது.

தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாக்களாக இருப்பது மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி விழாவும் தான். சிவராத்திரி நாளில் இக்கோவிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். அதே போல் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.

பொதுவாக மற்ற சிவலாயங்களில் இருக்கும் நடராஜர் சிலையை விட, தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் இருக்கும் நடராஜர் சிலையானது வேறுபட்டிருக்கும். இச்சிலையும், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் இருக்கும் நடராஜர் சிலையும் ஒரே மாதிரி இருக்கும். காரணம், சிவபெருமானின் நடராஜர் தோற்றத்தில் முதன் முதலில் உத்தரகோசமங்கையிலும், மறுநாளில் சிதம்பரத்திலும் உருவாக்கியது தான். இவ்விரண்டு நடராஜர் சிலைகளையும் உருவாக்கியவர் ஒருவரே.

அதன் காரணமாகவே, இவ்விரண்டு கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பதோடு, உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே உற்சவராகவும் இருப்பதால், இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்ட வைபவம் ஜனவரி 9ஆம் தேதியான காலை 8 மணியளவில் நடைபெற்றது .இதற்காக தேரோட்டம் நடைபெற்ற நான்கு சாலைகளும் சீரமைக்கப்பட்டன. தேரோட்டத்தில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம்
நடைபெற்றது
தேரோட்டத்தை முன்னிட்டு தேர்களை சுத்தம் செய்து அலங்கரிக்கும் பணிகளை கோவில் ஊழியர்களும் தன்னார்வலர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்

ஜனவரி 10ஆம் தேதியன்று புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா நடைபெறவிருக்கிறது.

அதை முன்னிட்டு, ஜனவரி 10ஆம் தேதியன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். பின்னர், காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திருவாபரண அலங்காரம், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா காட்சியும், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன நிகழ்வும் நடக்கிறது. ஜனவரி 11ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் திருவீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

எழுதியவர் : தமிழ் one இந்தியா (10-Jan-20, 4:51 am)
பார்வை : 71

மேலே