திருமலைராயனின் சிறப்பு

தமிழ் நாவலர் சரிதை, இச் செய்யுளைக் காளமேகம் பாடியதென்று காட்டும். மூன்று நான்காவது அடிகளிற் சில மாறுதல்களுடன் இதனைச் சொக்கநாதப் புலவர் பாடியதாகவும், சாளுவக் கோப்பையன் புதல்வனான திப்பையராயன் என்பவனைக் குறித்ததாகவும் சிலர் கொள்வார்கள். காளமேகம் செய்ததாகவே ஏற்றுக்கொண்டு நாம் பொருளைக் காண்போம்.

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா
விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான்
அக்கினி யுதரம்விட் டகலான்
எமனெனைக் கருதா னரனெனக் கருதி
நிருதிவந் தென்னையென் செய்வான்

அந்தமாம் வருண னிருகண்விட் டகலான்
அகத்துறு மக்களும் யானும்
அனிலம தாகு மமுதினைக் கொள்வோம்
யாரெனை யுலகினி லொப்பார்

சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத்
தரித்திர ராசனை வணங்கித்
தலைசெயு மென்னை நிலைசெய்கல் யாணிச்
சாளுவத் திருமலை ராயன்

மந்தர புயனாங் கோப்பய னுதவு
மகிபதி விதரண ராமன்
வாக்கினாற் குபேர னாக்கினால் அவனே
மாசிலா வீசனா வானே. 6

- கவி காளமேகம்

பொருளுரை:

ஆயிரங் கண்ணனான இந்திரன் ஆடையாக உருவெடுத்து என்இடையிலே அமைத்திருந்தான் (அதாவது, உடுத்துள்ள உடையிலே ஒராயிரம் பொத்தல்கள்), நெருப்புக் கடவுளான அக்கினியோ என் வயிற்றை விட்டு அகலாமல் நிலைத்திருக்கின்றான் (அதாவது, வயிற்றிடத்தே பசித்தீ அகலாது நிலைபெற்றிருக்கிறது);

சிவபெருமானே எனநினைத்து எமனும் என்னை நினைக்கமாட்டான் (பிச்சை ஏற்று உண்ணலால், பிட்சாடன மூர்த்தியாகிய சிவன் என்று எமன் நினைத்து என் உயிரைக் கவர்தற்கு நினையாதே இருக்கின்றான்;

காற்று வந்து மோதினாலும் என்னை என்ன செய்துவிடுவான் (உடல் மிகவும் மெலிந்துபோயின தன்மையை இப்படிக் குறித்தார். காற்று மோதி ஏதும் செய்ய வியலாது என்றதனால்) இறுதியான வருணன் என் இரு கண்களையும் விட்டு ஒரு போதுமே அகலாதிருக்கின்றான் (துயரத்தால் கண்கள் சதா நீர் சொரிகின்றன);

என் வீட்டிலே தங்கியிருக்கும் என்மக்களும் யானும் காற்று ஆகிய அமுதம் ஒன்றனையே பசிக்கு உணவாக உட்கொள்வோம் ஆயினோம்; இத்தகைய, நிலையிருக்கும் எனக்கு உலகினில் ஒப்பாவார்தாம் யாவரோ? இத்தகைய சிறப்பினையே எந்நாளும் பெற்றுத் தரித்திரம் என்னும் அரசனை வணங்கிப் பணிந்து வாழும் என்னை நிலைபெற்ற கல்யாண குணங்களையுடைய சாளுவத் திருமலைராயன் என்பவன் மந்தர மலைபோன்ற புஜங்களையுடையவன்; புலவர்களுக்கு ராஜ மரியாதைகளை அளித்து உதவும் மன்னவன்,; நான்கும் தெரிந்த ராமனைப் போன்று சிறந்தவன் தன் ஆணையினாலே குபேர செல்வத்திற்கு உரியவனாக்கினால் குற்றமற்ற கடவுள் எனக்கு அவனே ஆவான்.

காளமேகப் புலவருக்குக் குழந்தைகளும் இருந்தார்கள் என்று இதனால் தெரிகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-20, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே