கனவுத்தமிழகம்--------------------------------செப்டம்பர் 6, 2016

சென்ற ஆண்டு கனடாவுக்குச் சென்றிருந்தபோது என்னுடைய நண்பரும் அறிவியலாளருமான வேங்கடரமணனைச் சந்தித்தேன். வேங்கடரமணன் அதற்கு முந்தையவருடம் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்து வந்திருந்தார். உங்களுக்குச் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி தன் செல்பேசியில் பதிவுசெய்திருந்த ஒரு பாடலை ஒலிக்கவிட்டார்.

முதலில் நான் நன்கு அறிந்த நாட்டுப்புறத் தமிழ்ப்பாடல் போலிருந்தது. அதன்பின் அது வேறு ஏதோ மொழி என்பது தெளிவாகியது. ஒரு சொல்கூட புரியவில்லை. கூர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு தமிழகப்பூசாரி பாடுவதுபோலவே இருந்தது. எந்த மொழி? ஐரோப்பிய மொழி அல்ல. ஆப்ரிக்க மொழியா? அல்லது ஏதாவது பழங்குடி மொழியா?

“தமிழேதாங்க.. . கேளுங்க” என்றார் வேங்கடரமணன். ”கடைசிவார்த்தைகளை மட்டும் கவனியுங்க”. மெல்ல ஒரு சொல் பிடிகிடைத்தது. ”போற்றி!” பின்னர் அடுத்த வார்த்தை “காத்தவராயா”. அப்படி ஓரிரு சொற்கள். “ஓம்” நன்றாகவே கேட்கத்தொடங்கியது. “இதைப் பாடுவது யார்?” என்றேன். சிரித்தபடி அவர் விளக்கினார்.

அதைப்பாடியவர் தமிழர். காத்தவராயன் கோயிலின் பூசாரி. உடுக்கடித்து பூசைக்காக அவர் பாடியதுதான் அந்தப்பாடல். ஆனால் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரது முன்னோர் தமிழகத்தைவிட்டுச்சென்று மூன்றுநூற்றாண்டுகள் ஆகிவிட்டன. 1776ல் தமிழகத்தைச் சூழ்ந்த முதல் தாதுவருடப் பஞ்சத்தில் கோடிக்கணக்கானவர்கள் செத்து அழிந்தனர்.

வெள்ளைய அரசின் கொடூரமான வரிவசூல் முறைகளின் விளைவாக நம் ஊர்களில் இருந்த பஞ்சகாலத்துக்கான சேமிப்புகள் முழுமையாகச் சூறையாடப்பட்டமையால் அந்த பஞ்சம் ஏற்பட்டது. அப்படி பஞ்சத்தில் சிதறிய மக்களை கூட்டம் கூட்டமாக விலைக்கு வாங்கி கப்பலில் ஏற்றிக்கொண்டு கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் வரை கொண்டு சென்று தோட்டங்களை உருவாக்கினர். அவர்களில் பத்தில் ஒருவரே உயிர்பிழைப்பது வழக்கம். ஆகவே பத்துமடங்குபேரை கொண்டுசென்றனர்.

அப்படிச்சென்ற தமிழர் உலகம் முழுக்கப்பரவியிருக்கிறார்கள். அவர்களில் மலேசியா, இலங்கை தமிழர்களே தமிழ்நாட்டுடன் உறவுடன் உள்ளனர். பர்மா, ஆப்ரிக்கா, நீயூசிலாந்து, செஷல்ஸ், ஃபிஜி, கரீபியன் தீவுகளைச் சேர்ந்தவர்களுக்கு நம்முடன் எந்த உறவும் இல்லை. அவர்களின் மொழி மறைந்துவிட்டது. பெயர்கள் கூட மாறிவிட்டன. ஆனால் பெயரில் இந்துமதம் சார்ந்த சில தடங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். வெஸ்ட் இண்டீஸின் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் காளிச்சரண் ஓர் உதாரணம்.

அவர்களிடம் மாரியம்மன் வழிபாடு, காத்தவராயன் வழிபாடு போன்றவை சற்று எஞ்சியிருக்கின்றன. அவற்றில் தமிழ் இப்படி நீடிக்கிறது. கரித்தாள் வைத்து பிரதி எடுக்கும்போது மிகமிக அடியிலிருக்கும் பிரதிபோல. தமிழ் என ஊகிக்கமுடியும், அவ்வளவுதான்

அத்தகைய ஒரு குடும்பத்தை நான் 1988ல் ஒருமுறை சந்தித்தேன். பங்களாதேஷ் அருகே உள்ள மாவட்டத்தில் —- என்னும் ஊரில். சிறிய ஊர். அருகே கங்கை பெருகி ஓடிக்கொண்டிருந்தது. நான் காசியிலிருந்து படகில் கங்கைவழியாக செல்லவேண்டும் என்பதற்காக அந்தப்பயணத்தைச் செய்தேன். அலகாபாத்தில் ஒரு சரக்குப்படகில் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் பேசி ஏறிக்கொண்டேன்.

என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கு இரவுகள் கங்கையின் நீரின்மேல் கழிந்தன. அன்றெல்லாம் ஏராளமான சரக்குப்படகுகள் அலஹாபாத் முதல் பங்களாதேஷ் எல்லைவரை சென்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் விவசாய விளைபொருட்கள். அந்தப்படகுப் போக்குவரத்து இன்று மிகமிகக் குறைந்துவிட்டது. அந்தப் படகுப் பயணத்தின் பலவகையான சித்திரங்களை என் வெண்முரசு என்னும் மகாபாரத நாவல்களில் விரிவாக விவரித்திருக்கிறேன்

இரவெல்லாம் சுழன்றடிக்கும் காற்றில் அமர்ந்திருந்தேன். விடியற் காலையில் காய்ச்சல் வந்ததுபோல உடல் நடுங்கி கண்கள் எரிந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கரையிலிறங்கிய பின்னரும் உடலில் ஆட்டம் எஞ்சியதனால் நடக்கமுடியாமல் தள்ளாடினேன். அங்கே நதிக்கரையோரம் சேறு மிதிபட்டு சாணியுடன் கலந்து வீச்சமடித்தது. எங்கும் பலவண்ணத் தலைப்பாகை கட்டிய மக்கள் கூச்சலிட்டபடியும் சுருட்டு பிடித்தபடியும் கூடிநின்றனர்.

என்னுடன் அந்தப்படகில் இருபது எருமைகளும் வந்திருந்தன. வயோதிக எருமைகள். அவற்றை கரையிறங்கச் செய்து மந்தையாக்கிக் கூட்டிச் சென்றனர். ஏராளமான எருமைகள் வந்திறங்கியிருந்தன. அவை எல்லைகடந்து பங்களாதேஷுக்கு இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்படுபவை. சட்டவிரோத எல்லைகடத்தல் என்பது அங்கே ஒரு வணிகம் அல்ல, வாழ்க்கைமுறை.

உள்ளூர் புல் ஒன்றால் கூரையிடப்பட்டிருந்த பெரிய கொட்டகை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நடுவே பெரிய ஹூக்கா ஒன்றை வைத்திருந்தார்கள். சுற்றிலும் குந்தி அமர்ந்து அந்த குழாயை வாங்கி மாறி மாறி இழுத்தார்கள். வாயை வைக்கவில்லை. கைகளால் பொத்தியபடி இழுத்து மூக்கு வாய்வழியாக மேகம்போல புகை விட்டனர். மண்கோப்பைகளில் டீ. அது அன்று ஒரு ரூபாய். ஹூக்கா இலவசம்.

நான் ஒரு ரூபாய்க்கு டீ வாங்கி குடித்தேன். சமூசா இருந்தது. எனக்கு அன்றுமின்றும் சமூசா அதன் பின்நவீனத்துவ வடிவமான பப்ஸ் போன்றவை கொஞ்சம் கூட பிடிக்காதவை. அந்தக்காலை நேரத்திலேயே சப்பாத்தி சாப்பிடவும் பிடிக்கவில்லை. இன்னொரு டீ குடித்தேன். ஆனால் பால் சற்றுப்பழையது. நன்றாகச் சுண்டவைத்தபோது அது குமட்டல் தரும் கசப்பு கொண்டிருந்தது.

நால்வருக்குச் சோறு வந்தது. துணைக்கு மீன்குழம்பு. மீன் தலையை அப்படியே குழம்பில் போடுவது வங்கப்பண்பாடு. மிகப்பெரிய மீன் புன்னகைபுரிந்தபடி உலகை நோக்கியது. பெரிய அலுமினிய ஏனத்தில் மீன்குழம்பு. அதை சுற்றி தட்டுகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர். நானும் சோறு சாப்பிடலாம் என எண்ணினேன். மீன்குழம்பின் வாசனையின் ஈர்ப்புதான் காரணம்

கடைக்காரரிடம் அதைச்சுட்டிக்காட்டி அது வேண்டும் என்றேன். பங்காளியில் ஏதோ கேட்டார். புரியவில்லை என்றதும் இந்தியில் கேட்டார். இந்தியும் தெரியவில்லை என்றதும் கண்களைச் சுருக்கியபடி “எந்த ஊர்?” என்றார். “தமிழ்நாடு” என்றேன். அவர் சிலகணங்கள் ஸ்தம்பித்தது போலிருந்தார். “தமிழ்நாடா?” என இந்தியில் மீண்டும் கேட்டார். “ஆமாம்” என்றேன்.

அவர் தொண்டை ஏறியிறங்கியது. மூச்சிழுக்க சிரமப்படுபவர் போலத்தோன்றினார். பின்னர் பொரித்த மீன் தலையுடன் வந்த அவரது மனைவியிடம் வங்காளியில் “இவர் தமிழ்நாட்டுக்காரர்” என்றாள். அந்த அம்மாள் கணீர் குரலில் “தமிழாளா?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்கள் தமிழ்நாடா?”. கடைக்காரர் “ஆமாம், தமிழ்நாடு.. . ” என்றார். நான் ”தமிழ்நாட்டில் எங்கே?” என்றேன். “தெரியாது” என்றார். “தமிழ்கூட பேசத்தெரியாது” என்று சொல்லி மூச்சிளைத்தார்

இருவருக்குமே தமிழில் உதிரிச்சொற்கள் மட்டுமே தெரிந்தன. ”ஆமாவா?” என்றனர். ஆகவே அவர்கள் தமிழகக் கர்நாடக எல்லையில் ஏதோ ஊரைச்சேர்ந்தவர்கள் என்று ஊகித்தேன். பேசினால் புரிந்துகொண்டனர். பேசப்பேச அவர்களுக்குள் இருந்து தமிழ் ஊறிப்பெருகி வந்தது. கொஞ்ச நேரத்திலேயே ஒருமாதிரி சமாளித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள்

அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர்களின் முன்னோர் இருநூறாண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டவர்கள். பலமுறை பல தோட்டங்களுக்கு இடம் மாறினர். இரண்டாம் உலகப்போரில் அவர்கள் தோட்டமே அழிந்தது. அவரது தாத்தா ரங்கூன் அருகே ஒரு சிற்றுரில் கூலித்தொழிலாளராக வந்து குடியேறினார்.

போர் முற்றியபோது பர்மா ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. அவரது கொள்ளுத்தாத்தா ஜப்பானிய கூலியாகக் கொண்டு செல்லப்பட்டார். காட்டில் கடும் உழைப்பு முகாம்களில் குடும்பத்துடன் இருந்தனர். பிரிட்டிஷ் பட குண்டுவீச்சில் அவரது குடும்பம் மீண்டும் சிதறியது. அங்கிருந்து பங்களாதேஷ் வந்து குடியேறி அங்கே துப்புரவுத் தொழிலாளராக பணியாற்றினார்கள். ஐம்பதுகளில் பங்களாதேஷில் இந்துத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது அவரது குடும்பம் மீண்டும் சிதறியது.

எழுபதுகளில் பங்களாதேஷில் இருந்து அகதியாக இந்தியா வந்தனர். சட்டவிரோத குடியேற்றம்தான். அந்த ஊரில் கூலிவேலை செய்து மெல்ல வேரூன்றினர். டீக்கடை வைத்து எட்டு ஆண்டு காலமாகிறது. நான்கு குழந்தைகள். மூத்தபெண் ஒரு வங்காளியைத் திருமணம் செய்திருக்கிறாள். இரண்டாவது பையன் வேலை பார்க்கிறான். இரு சிறுவர்கள் படிக்கிறார்கள்.

இருநூறாண்டுக்காலமாக அவர்களில் எவருக்கும் தமிழகத்துடன் தொடர்பில்லை. இந்தியாவந்தபின் பிற தமிழருடனும் தொடர்பில்லை. அவர்கள் கிளம்பியபின் இருபெரும்போர்கள் நிகழ்ந்தன. பஞ்சங்கள் வந்தன. தேசங்கள் உடைந்தன. புதியதேசங்கள் பிறந்தன. வரலாறு பெரும்பிரவாகமாக அவர்களைச் சுழற்றியடித்துக்கொண்டுசென்றது. எதுவும் எஞ்சவில்லை.

ஆனால் மூதாதையரின் சொற்களாக பிறந்த மண் அவர்களிடம் எஞ்சியிருந்தது. தங்கள் ஊர் அருகே கடல் உண்டு என்றும் சித்ராபௌர்ணமிக்கு வண்டி கட்டிச்சென்று கடலோரம் அமர்ந்து சாப்பிடுவதுண்டு என்றும் சொன்னார்கள். பெரிய கோபுரம் கொண்ட ஒரு கோயிலும் அதேபோல வண்டிகட்டிச் செல்லும் தொலைவில் இருந்தது. இரண்டு கண்மாய்களால் விவசாயம் நிகழ்ந்தது.

தீபாவளியும் பொங்கலும் அவர்கள் நினைவில் இருந்தன. இரண்டையும் வங்கமுறைப்படி கொண்டாடினர். பிள்ளைகள் அவர்களிடமிருந்து பெற்ற சிலநூறு தமிழ்ச்சொற்களைப் பேசின. ”ஆனால் அவர்கள் வங்காளிகளைத்தான் திருமணம் செய்துகொள்வார்கள். வேறுவழி இல்லை” என்றார் ரத்தினம். அவர் மனைவில் வள்ளியும் அதையேதான் சொன்னார். அவர்களின் பேரக்குழந்தையின் பெயர் மாணிக். வங்கப்பெயர்

“ஊருக்குப்போகலாம்னு தோணும். ஆனா எந்த ஊருக்கு போறது? அங்க யாருக்கு நம்மளத் தெரியும்?” என்றார் ரத்தினம். “அதனால நானே ஒரு ஊரை கற்பனை செஞ்சுகிடுவேன். அங்க இருக்கிற ஆட்களை எல்லாம் தெளிவா நானே மனசுக்குள்ள உண்டு பண்ணிக்கிடுவேன். ராத்திரி நினைச்சுகிட்டா கண்ணீர் வந்திடும் சார். அழுதிட்டே தூங்கினா ஒரு பெரிய நிம்மதி”

நான் அன்று அவர்களுடன் தங்கினேன். வள்ளி சோறும் மீன்குழம்பும் தந்தார்கள். அவர்கள் சுவரில் துர்க்கை படம் வைத்திருந்தனர். அதை கும்பிடும்போது ஓரிருவரிகள் தமிழில் பாடினர். மாரியம்மன் பாட்டு அது. சொல் மழுங்கிப்போய் வங்கம் போல இருந்தது.

அன்றிரவு வெளியே கட்டில் போட்டு விண்மீன்களைப்பார்த்தபடி படுத்திருந்தபோது நான் கேட்டேன், “உங்களுக்கு பர்மிய மொழி தெரியுமா?” ரத்தினம் சிரித்துக்கொண்டு “இல்ல சார், அங்க இருந்ததைக்கூட சொல்லிகேட்டுத்தான் தெரியும். ஒரு ஊரோ முகமோ ஞாபகமில்லை” நான் “பங்களா தேஷுக்கு மறுபடியும் போனீர்களா?” என்றேன். “இல்லசார். அது நமக்கு எதுக்கு? யாருதோ ஊருல்ல அது”

ஆனால் தமிழகம் இன்றும் அவர்களின் ஊர்தான். அவர்களுக்குள் நுண்ணிய கனவாக அது மரம்பூத்து மண்மணக்க வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அது அழியாது என நினைத்துக்கொண்டேன். அவர்கள் திரும்பி வருவார்கள். தலைமுறைகள் கடந்தாலும்கூட

சென்ற ஆண்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பர்மாவில் உள்ள தமிழர்களின் கூட்டமைப்பு ஒன்று பொங்கல் கொண்டாடுவதைப்பற்றி அவ்வமைப்பின் செயலாளரான தியாகராஜன் என்பவர் எழுதியிருந்தார். உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்படுகிறது. வரலாற்றால் சிதறடிக்கப்பட்டவர்களும் அதனூடாக இணையக்கூடும்.

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (24-Jan-20, 2:45 am)
பார்வை : 146

மேலே