முதல் புத்தகம்
முதல் புத்தகம்
நான் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கிறேன், அதை புத்தகமா போடலாமுன்னு நினைக்கிறேன்.
தாராளமா போடலாம், எவ்வளவு காப்பி வேணுமின்னு நினைக்கிறீங்க?
என் கிட்ட பண வசதி அவ்வளவு இல்லை.
குறைஞ்ச பட்சம் எவ்வளவு காப்பி குறைவான பட்ஜெட்டுல போட முடியும்.
முந்நூறுலிருந்து எவ்வளவு வேணுமின்னாலும் போடலாம்.
எவ்வளவு ஆகும்? அவர் தொகையை சொன்னதும் மலைத்து போகிறான், அவ்வளவு ஆகுமா?
ஆமாங்க, அதுக்கு மேலே காப்பி அதிகமாக அதிகமாக உங்களுக்கு தொகை குறையும். ஆனால் குறைந்த பட்சம் இத்தனை காப்பியில இருந்துதான் போட முடியும்.
இவன் யோசனையில் ஆழ்ந்து விட்டான். அவனுக்கு இது கட்டுப்படியாகாத தொகை, இருந்தாலும், தான் ஒரு எழுத்தாளனாய் அங்கீகாரத்துக்கு இது ஒரு அச்சாணி அல்லவா,
முடிவு எடுக்க தடுமாறினான்.
ஒரு மாதம் டைம் கேட்டு வந்தான்.
இவன் வாங்கும் குறைவான சம்பளத்தில் தன்னுடைய குடும்ப செலவுகளுக்கே தடுமாறிக்கொண்டிருக்கும் போது இது தேவையா? மனது வெளிப்படையாய் கேட்டாலும், அவனின் ஆர்வம் எப்படியாவது உன் கதைகளை புத்தகமாக போட்டு விடு என்று உள்ளூர சொல்லிக்கொண்டது.
புத்தகங்கள் அச்சடித்து வெளி வந்த பின்னால்தான் அவனுக்கு மற்ற தொல்லைகள் தெரிந்தது.
யாரும் புத்தகத்தை வாங்கி படிக்க விரும்பவில்லை.இவனாக ஒவ்வொரு புத்தக்கடைக்கும் அலைந்து இரண்டு மூன்று என்று விற்றான். விற்பதுக்கு கொடுத்தாலும் உடனே பணம் கிடைக்காது. புத்தகம் விற்றால்தான் பணம் கொடுக்கமுடியும் என்று சொல்லி விடுவார்கள்..
இதற்காக இவன் பஸ்ஸுக்கு செலவழித்த தொகைக்கு இன்னொரு புத்தகம் போட்டு விடலாம். சில நேரங்களில் எப்படியாவது புத்தகம் விற்பனை ஆக வேண்டும் என்று சகாய விலைக்கு கூட தள்ளி விட்டான். அதை கொடுப்பதற்கு கூட மனமில்லாமல் முணு முணுத்தவர்கள் நிறைய பேர்.ஆனால் கொஞ்சம் பேர் அவனுக்காக பரிதாபப்பட்டு வாங்கியவர்களும் உண்டு.
இவ்வளவு சிரமத்தில் இவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த பொழுது எப்பொழுதோ இவன் அனுப்பி இருந்த கதை ஒன்று பத்திரிக்கையில் வெளி வந்தது. இவனது கதைக்கு கிடைத்த சன்மானத்தொகை பெரிய உதவியாக இருந்தது. இரண்டு மூன்று மாத்த்தில் மற்றுமொரு கதையும் வேறொரு பத்திரிக்கையில் வெளி வந்தன.
இப்பொழுது எழுத்துலகில் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பித்து விட்டான்.அவனது கதைகள் வாசகர்களால் அடையாளம் காணப்பட்டது. இப்பொழுது பல பத்திரிக்கைகள் அவனிடம் கதை கேட்க ஆரம்பித்து விட்டது. இவன் தன்னுடைய கதைகளை ஒவ்வொரு பத்திரிக்கைக்கு அனுப்பிக்கொண்டிருந்த காலம் போய் பத்திரிக்கைகள் இவனது கதைகளுக்கு காத்திருக்க ஆரம்பித்தன.
இவனது கதைகள் இவனை பெரிய எழுத்தாளராக்கி விட்டன.இவன் எழுதப்போகிறான் என்று விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு பிரபலமாகி விட்டான்.
வருடங்கள் ஓடி விட்டன. ஒரு பத்திரிக்கை இவனை பேட்டி கண்டபொழுது இவனிடம் நீங்கள் மிக பிரபலமாகி விட்டீர்கள். பத்திரிக்கை உலகில் எல்லா உச்சிகளையும் அடைந்து விட்டீர்கள்.ஆனால் இப்பொழுதும் உங்களது நிறைவேறாத ஆசை என்ன?
அவர் சொன்னார் நான் முதன் முதலில் எழுதிய புத்தகம் ஒரு காப்பி கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன். முதல் புத்தகம் வெளி வந்து இருபது வருடம் ஆகி விட்டது. ஆனால் அன்று தெருத்தெருவாய் நான் விற்ற எனது முதல் புத்தகம் ஒரு காப்பி கிடைத்தாலும் போதும்.