காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நடவேண்டும் தெரியுமா

பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகிறது. அலாஸ்காவின் வெப்பநிலை நியூயார்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் புலம்புகிறார்கள். நம் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? டெல்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வுமையம் கூறுகிறது. இனிவரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் சென்ற வாரம் எச்சரித்திருந்தது ஞாபகம் இருக்கலாம். இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன? நாம் எல்லோரும் அறிந்ததே. மரம் வளர்க்கவேண்டும். அதுவும் எவ்வளவு தெரியுமா? 17 டிரில்லியன் அதாவது 10 லட்சம் கோடி மரங்கள் நட்டால் தான் 2050 ல் நம்மால் பிழைத்திருக்க முடியும்.

எண்கள் மிகப்பெரிதாக தெரிகிறதல்லவா? ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அதற்கான இடம் பூமியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. விளைநிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் தவிர்த்து பூமி முழுவதும் சுமார் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் இடம் காலியாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவை மரம் வளர்க்க தகுந்த இடங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி நடும் பட்சத்தில் வளிமண்டலத்தில் உள்ள 25 சதவிகித கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்ற முடியும். அடுத்த 100 வருடங்களுக்கு இந்த பூமி முந்தைய 100 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அப்படி நம்மால் வைத்துக்கொள்ளவும் முடியும்.

இப்படி மரம் வளர்க்க ஏதுவான நாடுகளாக ஆய்வில் பட்டியலிடப்பட்டவை ரஷியா (583,000 சதுர மைல்கள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (397,700 சதுர மைல்கள்), கனடா ( 302,700 சதுர மைல்கள்), ஆஸ்திரேலியா (223,900 சதுர மைல்கள்), பிரேசில் (191,900 சதுர மைல்கள்), சீனா ( 155,200 சதுர மைல்கள்) ஆகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் மொத்த அமெரிக்காவின் பரப்பளவிற்கும் நாம் மரங்களை நட்டாக வேண்டும் என்பது தெளிவாகும்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஸ்விஸ் பெடரல் பல்கலைகழக சூழலியல் பேராசிரியர் தாமஸ் கிரவுதர் ( Thomas Crowther ) பேசும்போது, ” காடுகளின் அடர்த்தியை அதிகப்படுத்துவதன் மூலமாக 225 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும். கிட்டத்தட்ட நூறாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய மொத்த அளவிலான கார்பன் டை ஆக்சைடையும் இந்த திட்டத்தின் மூலம் வடிகட்டிவிடலாம்” என்றார்.

காலநிலை குறித்த அரசுசார் குழு (IPCC- Intergovernmental Panel on Climate Change ) வெளியிட்டுள்ள கருத்தின்படி கூடுதலாக 3.8 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மரம் வளர்க்கப்பட்டால் 2050 ஆம் ஆண்டுகளில் இருக்கக்கூடிய வெப்பநிலையை விட 2.5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பமே இருக்கும் எனத் தெளிவுபடுத்துகிறது.

இந்த ஆய்வுக்குழு கூகுள் எர்த் எஞ்சின் மூலமாக சுமார் 80,000 காடுகளை ஒருங்கிணைத்துள்ளது. இத்தனை மரக்கன்றுகளை நட்டாலும் நம்மால் உடனடியாக அதற்கான பலனை அனுபவிக்க முடியாது என்கிறார் கிரவுதர். ஆனால் நம்மால் செய்யக்கூடிய ஒன்று அதுமட்டும் தான் என்பது பேருண்மையாக கன்னத்தில் அறைகிறது.

எழுதியவர் : மாதவன் (24-Jan-20, 2:18 pm)
பார்வை : 68

மேலே