அழிய வாட்டு

‘மண்மாரி பெய்தால் மட்டும் போதாது; ஊர் முற்றவுமே அழியுமாறு வாட்டுதல் வேண்டுதல்’ எனவும் நினைக்கிறார் காளமேகம். மன்மதனை அழித்தது போல சிவனே! இந்த ஊரையும் எரித்து அழித்துவிடு' என்கிறார்.

நேரிசை வெண்பா

செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற்
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற்றியோர்
மண்மாரி யாலழிய வாட்டு. 13

- கவி காளமேகம்

பொருளுரை:

என் அய்யனே! சிவபெருமானே! வெம்மையான நெருப்புக் கண் பார்வை மழையினாலே மன்மதனின் ஆற்றலை யெல்லாம் போக்கிச் சாம்பராக்கினாற் போல,

எனக்குச் செய்யத்தகாத எல்லாம் செய்த இந்தத் திருமலைராயனுடைய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட நாட்டில் உள்ள தீயவர்களை அரைநொடிப் போதிலேயே, மண்மாரியினாலே அழியும்படியாக வாட்டு வாயாக என்கிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-20, 11:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 89

மேலே