ரத்த வேட்டை
நேரம் நள்ளிரவு..
அந்த கிராமத்து ரயில் நிலையத்தில் போனால் போகிறது என்று அந்த நள்ளிரவு அமைதியைக் கிழித்துக் கொண்டு “கூ..” என்ற கத்தலோடு ரயில் நிற்க, அதிலிருந்து ஒரே ஒரு பயணியாய் இறங்கினேன்.
நான்.? ராஜா இளைஞன் வயது 27. ஒரு பிரபல நடிகரைப் போல அழகாய் இருப்பதாக கல்லூரி படிக்கையில் தீபா என்றவள் எனக்கு காதல் கடிதம் எழுதிருக்கிறாள். ஆனால் அதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லாததால், அந்த தீபா முன்பே அந்த கடிதத்தை கிழித்து எறிந்து அவள் அழுது கொண்டு ஓடியதெல்லாம் இங்கே தேவை இல்லாத செய்தி. தொடர்க. கல்லூரிப் படிப்பை எப்போதோ முடித்து விட்டவன். சில விஷயங்களில் சிலர்க்கு அதித ஈடுபாடு இருக்கும் ஏனென்று தெரியாது. அதையே பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். அது எவ்வளவு ஆபத்துகள் நிறைந்தாக இருந்தாலும் துணிச்சலாக அதில் ஈடுபடுவார்கள். பக்கத்தை வீணடிப்பானேன். எனவே சொல்லிவிடுகிறேன்.
நானொரு ஆராய்ச்சியாளன். என்ன கேட்டீர்கள்.? எதைப் பற்றியா? பேய்களைப் பற்றி.!
பேய்களைப் பற்றி ஆராய்வதில் என்ன இருக்கிறது? திகில் இருக்கிறது. பேய் என்ற மூட நம்பிக்கையை வைத்து மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை “மர்மத்தின் விடை” என்ற ப்ளாக்கில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன். எழுதிக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் களத்தில் இறங்கி போலியாளர்களை அம்பலப்படுத்திக் கொண்டிருப்பவன். சரி இந்த அகாலவேளையில் ஆட்கள் நடமாற்றம் அற்ற இந்த நேரத்தில் இங்கு எனக்கென்ன வேலை?
காரணம் ஒரு கடிதம். உங்கள் ஊரில் பேய் இருக்கிறதா இருந்தால் இந்த இணைய முகவரிக்கு மெயில் செய்யுங்கள் உண்மை அறிய நேரில் வருகிறேன் என்ற எனது பதிவுக்கு வந்த மெயில்களை பொறுக்கி ஆராய்ந்ததில் ஒருவரின் மெயில் தனித்து தெரிய அப்போதே முடிவு செய்தது விட்டேன். இந்த ஊருக்கு வருவதென.
பிளாட்பாரத்தில் ஆட்கள் ஒப்புக்குக் கூட இல்லாமல் வெறிச்சோடிப்போய் இருக்க, சுற்றும்முற்றும் பார்த்தேன். யாருமில்லை..
“என்ன யாரையும் காணம். மெயில நம்பி இங்க வந்தது தப்போ.?” வெளியே வந்தேன்.
“ஸ்டேசன்க்கு வருவேன்னு மெயில்ல சொல்லிருந்தார். ஒருவேள மறந்த்துட்டாரோ? நைட்டு வர வேணாம்ன்னு சொல்லிருந்தார். இந்த பாழப் போன ரயில் இவ்வளவு லேட் ஆக்கும்ன்னு யார் கண்டா. ஒருவேள நைட்டு வந்தாலும் ஸ்டேசன விட்டு வெளிய வர வேணாம்ன்னு எச்சரிக்கை வேற. அதுக்காக நைட்டு முழுக்க இந்த கொசு கடில எப்படி இருக்க.? யோசித்தபடியே நடந்தேன். அங்கங்கே டியூப்லைட் வெளிச்சம் இருந்ததால் எவ்வித பயமும் இல்லாமல் என்னால் நடக்க முடிந்தது. அரைமணி நேர நடை.
டியூப்லைட் வெளிச்சம் நின்று போயிருக்க சுற்றிலும் இருட்டு.. செல் ஸ்டார்ச்சை ஆன் செய்து கொண்டேன். ஏற்கனவே பாட்டரி லோ என்று கதறிக் கொண்டிருந்தது செல்போன் சில நிமிடத்தில் அதுவும் தீர்ந்து போக செல் சுவிட்ச்ஆப் ஆனது. “ச்சே” என்று அலுத்துக் கொண்டு செல்லை பைக்குள் வைத்துக் கொண்ட அதே வினாடி.
எங்கிருந்தோ சிறகடி ஓசை பலமாய்க் கேட்க அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். இந்த இரவு நேரத்தில் என்ன பறவை? ஆந்தையா? இல்லை. சுற்றிலும் இருட்டு ஒன்றையும் தெளிவாய் பார்க்க முடியவே இல்லை. சிறகடி ஓசை என்னை நெரும்கியது. தீடிரென என்னை பறவைகள் சூழ்ந்தன. என்னை உரசிப் போன பறவைகளை உற்றுப் பார்க்க,
“கடவுளே இதென்ன?” அத்தனையும் வவ்வால்கள்.! போதாத குறைக்கு இலைகள் வேறு காற்றில் சலசலத்தன. எங்கிருந்தோ நாயின் தீனமான ஊளைச் சத்தம். அது என்னை நோக்கிதான் நெருங்கி வந்தது. இருட்டில் சில ஜோடிக் கண்கள் நெருப்புத் துண்டுகளாய் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தன. அத்தனையும் நாய்களின் கண்கள். அவைகள் என்னை நோக்கிதான் வந்தன. நான் பயந்து போனேன். சுற்றிலும் பார்க்க உடைந்து போகும் தருவாயில் இருந்த பழைய டெலிபோன் பூத் கண்களில் பட, நான் அதை நோக்கிப் பாய்ந்தேன், நான் கதவைப் பூட்டவும் நாய்கள் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்து. நாய்கள் வெறிக் கொண்டு குலைத்தன. நகத்தால் கதவைப் பிராண்டி குலைத்தன. கடவுளே இவைகளிடம் சிக்கினால் எலும்பு கூட மிஞ்சாது போல. எனக்கு பயங்கரமாக வேர்த்தன. நாய்கள் தொடர்ந்து ஊளைட்டன.
நாய்கள் ஊளைட்டால் அருகில் பேய்கள் இருப்பதாக சொல்லப்படுவது நினைவுக்கு வர வேர்வையால் உடை நனைந்தது..
-திகில் கூடும்