ரத்த வேட்டை-2

அத்தனை நாய்களும் அந்த பழைய போன்பூத்தை சுற்றிச் சுற்றி வந்து பயங்கரமாக குலைத்தன. சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் உள்ளே நுழைந்து என்னைக் குதறி சின்னாபின்னாமக்கத் தயாராக இருந்தன.

ஏதடா இது, ஊருக்குள் காலடி வைத்த சிலமணி நேரங்களிலிலே அனுபவங்கள் இத்தனை பயங்கரமாக இருக்கிறதே. உண்மைலே அந்த ஆளு சொன்னபடி இங்க பேய் இருக்கோ.? இப்படியெல்லாம் நடக்கும்ன்னு அவர் சொல்லவே இல்லையே. நீங்களே நினைத்துப் பாருங்கள் ஆட்கள் நடமாற்றமற்ற அந்த இடத்தில் இருள் கவிந்த நிலையில் ஒரு சிறிய இடத்தில் சுற்றிலும் கடித்துக் குதறும் வெறியுடன் நாய்களால் சுழப்பட்டிருப்பது என்பது எத்தனை மோசமான அனுபவம். இதை தான் ஆரம்பத்திலே ஆபத்து நிறைந்தது என்றேன்.

பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நானே இப்படிநாய்களைக் கண்டு பயந்துக் கொண்டிருக்கிறேனே. ஒருவேளை இங்க நெஜமாவே பேய் இருக்கா? நம்பத் தொடங்கி விட்டது மனசு. ஏனெனில் இத்தகைய மோசமான அனுபவம் வேறு எங்கும் எனக்கு நிகழ்ந்ததே இல்லை. பேயைப் பற்றி நான் படித்ததை இன்னொரு விஷயம் சந்தர்ப்பம் தெரியாமல் நினைவுக்கு வந்தது.

“பேய்களுக்கு உருவம் இல்லை. ஆனால் அதால் எந்த உருவம் வேண்டுமானாலும் எடுத்து வர முடியும். ஆனால் நம் கண்களுக்கு அவை பேய் போலவே தெரியாது. வந்த நபரைப் போலவே தெரியும்.”

மேற்குதொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப் பகுதியில் ஒரு முறை ஆராய்ச்சி சம்மந்தமாக ஈகா பழங்குடி மக்களிடையே சென்றது நினைவுக்கு வந்தது. அவர்கள் மந்திரதந்திரமிக்கவர்கள். அங்குள்ள மந்திரவாதிகள் யாரையேனும் கொலை செய்ய விரும்பினால் அவரைப் போலவே களிமண்ணால் பொம்மை செய்து பூஜை நடத்தி அந்த களிமண் பொம்மையை வெட்டுவார்கள். பார்க்க மிக பயங்கரமாக இருக்கும். அப்படி செய்தால் அவர்கள் நம்பிக்கைப்படி அந்த மனிதர் விரைவில் மரணமடைவார். அப்படி சிலர் மரணமடைந்துமிருக்கிறார்கள்.

இதை மாயசக்தி என்பதா? இல்லை குட்டிச்சாத்தனின் வேலை என்பதா? இல்லை பேய்களின் வேலையாக கூட இருக்கலாம். ஒரு பேய் மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் அவைகள் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்யும். பேய்களை வசப்படுத்துவது ஒன்றும் அத்தனை சாதாரணமானது அல்ல. அதற்க்கான பூஜை முறைகளும் தியான முறைகளும் மிகக் கடுமையானவை. சாதாரண மனிதர்களால் அதைச் செய்ய முடியாது அசாதரணமான மனிதர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

ஒருநாள் மறைந்திருந்து அவர்கள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களில் பழங்குடி ஒருவன் பார்த்து விட்டான். அவன் எல்லோருக்கும் சொல்ல அவர்கள் “ஓ...வென” கூச்சலிட்டபடி வேல் கோடரி வில் அம்பு சகிதம் என்னைத் தாக்க நெருங்கி விட்டார்கள். அதிலிருந்து தப்பி ஒடி வந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் மயிர்க்கூச்சொரியும் நிகழ்வுகள்.

அதன் பிறகுதான் இப்போது நிகழ்பவை. இங்க வந்து நாய்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த இரவை என்னால் மறக்கவே முடியாது. நாய்கள் நகருவது போலத் தெரியவில்லை. நேரமாக நேரமாக பயண அசதியும் களைப்பும் காரணமாக கண்கள் சொக்கிக் கொண்டு வர அங்கேயே கால்களை மடக்கித் தூங்கிப் போனேன்.

எத்தனை நேரமாக என்று தெரியவில்லை சூரிய வெளிச்சம் என் மீதுபட்டு தோளை எரியச் செய்த நொடி ஒன்றில் எழுந்து கொண்டேன். நன்றாக விடிந்திருந்தது. எழுந்தேன். நாய்களைக் காணவில்லை. பேய்களின் சக்தியெல்லாம் இரவில் தான்.

இந்த களேபரத்தில் எனக்கு கடிதமெழுதிய நபரைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவர் பெயர் விக்டர் சர்ச் ஒன்றில் போதகராக இருப்பவர். எனது கட்டுரைகள் எல்லாம் தவறாமல் படித்து வந்திருக்கிறார். தன்னுடைய ஊரிலும் பேய்த் தொந்தரவுகள் இருப்பதாக அவர் அனுப்பிய மெயில் தான் என்னை இங்கே வரச் செய்திருக்கிறது. நேற்று நடந்த நிகழ்வுகள் யாவும் கண்முன்னே வர உடல் சிலிர்த்தது. சர்ச் எங்கிருக்கிறது என விசாரித்து சர்ச்சை அடைந்து படிகளில் ஏறினேன்.

“விக்டர் இருப்பாரா.? இங்கயே தங்கிருப்பதாக சொல்லிருந்தாரே” சர்ச்சின் மணி “டங்...டங்..” என அதிர்ந்து ஒலித்தது. நான் படிகளில் ஏறி நடந்தேன் சர்ச் பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டினேன். “தட்..தட்..” கதவு திறந்தது. திறந்தது விக்டர் இல்லை. வேறொருவன்.

“யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?”

“என்னோட பேரு ராஜா. நான் பாஸ்டர் விகடரைப் பார்க்கணும்.”

“ஓ.. நீங்கதானா அது. வாங்க உங்களுக்காக தான் அவர் காத்திட்டு இருக்கார்.” நான் உள்ளே நடந்தேன். நான் உள்ளே வந்ததும் அவன் கதவைப் பூட்டி தாளிட்டு நடந்தான். நான் அவனைப் பின் தொடர்ந்தேன். மாடிப்படி நீண்டு வளைந்து கொண்டு செல்ல, அதில் நாங்கள் இருவரும் நடந்தோம். அவன் கதவைத் திறந்தான்.

அங்கே போதகர் விக்டர் மிக வயதானவராக தெரிந்தார். மூப்பின் காரணமாக படுத்தப் படுக்கையாக கிடப்பது தெரிந்தது. இவரா எனக்கு மெயில் அனுப்பியது.?
உடன் வந்தவன்,

“பாஸ்டர்.” என்றான். அவர் மெதுவாக கண் திறந்தார். என்னைக் கண்டு விட்டு,

“ராபின் இது யாரு.?”

“பாஸ்டர் நாந்தான் ராஜா. பேய் பற்றி ஆராய்ச்சி செய்றவன். என்ன வரச்சொல்லி நீங்க மெயில் அனுப்பிருந்தீங்க”

“ராபின் என்னை கொஞ்சம் உக்கார வைய்யேன். நான் அவரைக் கொஞ்சம் நல்லா பார்க்கணும்.” ராபின் அவரைத் தூக்கி உட்கார வைத்தான். எழுந்து உட்கார வைத்தான். அவர் என்னை உற்றுப் பார்த்து.

“எனக்கு நினைவுக்கு வந்துருச்சு. ராஜா உங்களை வரச் சொல்லி நான்தான் மெயில் அனுப்பினேன். நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்.” நொடிக்கு ஒருமுறை இருமியபடியே இருந்தார்.

“நான் இங்க பெரிய ப்ரோடெஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.”

“ப்ரோடெஸ்ட்? போராட்டமா.?”

“ஆமாம். முதல்ல பக்கவாதம் வந்த என் உடம்போட போராட்டம். அப்புறம் அந்த சாத்தானோட போராட்டம். இருமினார்.

“அந்த போராட்டம் தொடரனும் ராஜா. என்னோட அது நின்னுடக் கூடாது.”

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல பாஸ்டர். கொஞ்சம் விவரமா சொல்லுங்க.” என்றேன்.

அவருக்கு மூச்சு வாங்கியது. “ என்னால ரொம்ப பேச முடியல. அதுக்கு முன்னாடி நீங்க ஒரு டைரியா படிக்கணும் ராஜா. அந்த டைரிய எழுதுனது என்னோட ஒரே பொண்ணு ஜூலி. அவ இப்போ உயிரோட இல்ல. அந்த சாத்தான் என்னோட ஒரே மகளைக் கொன்னுடுச்சு.” அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

“ராபின் அந்த டைரிய எடு.” அவன் எடுத்துக் கொடுத்தான்.

“இந்தாங்க ராஜா இதுதான் அந்த டைரி இதைப் படிச்சா உங்களுக்கு எல்லா விஷயமும் புரியும். இதுல எல்லா விஷயமும் இருக்கு. என்னோட மகள் சாகுறதுக் முன்ன கடைசியா எழுதின டைரி இது. அவளோட அனுபவத்தை இதுல எழுதிருக்கா.” என்றபடியே களைப்பில் கண்களை மூடிக் கொண்டார்.

“வாங்க போய்டலாம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும். உங்களுக்கு தனியா ஒரு ரூம் ஒதுக்கிருக்கோம். நீங்க அங்க தங்கிக்கலாம். ஏதாவது தேவைன்னா என்ன கூப்பிடுங்க.” என்றான் ராபின். நாங்கள் இருவரும் நடந்து எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றோம். ராபின் அறையைத் திறந்து விட்டு சென்றான். நான் உள்ளே நுழைந்து விளக்கையும் பின் விசிறியையும் சுழல விட்டு விட்டு கட்டிலில் அமர்ந்து டைரியைத் திறந்தேன். அதன் முதல் பக்கத்தில் எதோ எழுதிருந்தது. வாசித்தேன்.

“இந்த டைரிய படிக்கிற யாரும் அந்த சாத்தான் கிட்ட இருந்து இந்த கிராமத்தை தயவு செஞ்சு காப்பாத்துங்க.”

-திகில் கூடும்

எழுதியவர் : அருள் ஜெ (30-Jan-20, 12:26 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 77

மேலே