கலங்கும் மதில்கள்

===
அவர்களின் மேடைப் புளுகுகளுக்கு
பதாகை பாக்குவைக்கும்
தாம்பூலம்.
**
அரைநிர்வாணப் படங்களால்
இளசுகளுக்குக் கிளுகிளுப்பூட்டி
பாலியல் வன்முறைக்குப்
பாடம் நடத்தும்.
பகிரங்க ஆசிரியன்.
**
ஓவியர்களின் வயிற்றுப்பாட்டுக்கு
மேனிகொடுத்து உதவும் இவைக்கு
கல்மனசு என்றாலும்
உள்மனசில் ஒன்றுமில்லை.
**
கழுதை கெட்டால் குட்டிச்சுவர்
மதில்மேல் பூனை
சுவரில்லாமல் சித்திரம் ஏது
என்ற பழமொழிக் குழந்தைகளைப்
பெற்றெடுத்தத் தாய்.
**
மரண அறிவித்தல்களைத்
தாங்கும்போது கண்ணீர் விட முடியாமலும்
கல்யாண பதாகைகளைத்
தாங்கும்போது புன்னகைக்கத் தெரியாமலும்
நிமிர்ந்தே இருக்கின்ற
காவல் சாதி.
**
தெருமாடுகளின் பசிக்கு
காகித தோசை வார்த்துக் கொடுக்கும்
பரோபகாரி.
**
வீட்டின் இடுப்புக்கு
ஒரு ஆடையாக இருந்து
மானம் காத்தபோதும்
மானம் கெட்டதுகள் மதுபோதையில்
சிறுநீர் கழிக்க வேட்டியைத்
தூக்கும்போதுதான்
காறி உமிழ ஒரு வாயில்லையே என்று
கண்ணீர் விட்டுக் கலங்கியிருக்கலாம்
இந்த மதில்கள்!
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Feb-20, 1:35 am)
பார்வை : 366

மேலே