செங்கழுநீர்க் கிழங்கு
செங்கழுநீர் என்பது நீர்ப்பூ வகைகளுள் ஒன்று. கச்சிக் காவலன் என்றொருவன் அந்தச் சபையிலே வந்திருந்தான். "செங்கழுநீர்க் கிழங்கு என்று அமைத்துப் பாடுக” என்றான் அவன். அப்போது காளமேகம் பாடிய செய்யுள் இது.
நேரிசை வெண்பா
வாதமணர் ஏறியதும் மாயன் துயின்றதுவும்
ஆதிதடுத் தாட்கொண்ட அவ்வுருவும் - சீதரனார்
தாள்கொண் டளந்ததுவும் தண்கச்சிக் காவலா!
கேள்செங் கழுநீர்க் கிழங்கு. 41
– கவி காளமேகம்
பொருளுரை:
குளிர்ச்சி பொருந்திய கச்சி நகரத்துக் காவலனே! நீ குறித்தபடியே சொல்வேன் கேட்பாயாக;
திருஞான சம்பந்தப் பெருமானோடு வாதிட்டுத் தோற்ற அமணர்கள் ஏறியிருந்ததுவும்,
மாயனான திருமால் பள்ளி கொண்டிருப்பதும், முதல்வனான சிவபெருமான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட அந்தத் திருவுருவும்,
திருமாலானவர் தன் திருவடியினைக் கொண்டு அந்நாளிலே அளந்து கொண்டதுவும் செங்கழுவும், நீரும், கிழவுருவும், பூமியும் ஆகும்.
'செங்கழு’ என்றது பழுக்கக் காய்ச்சிய கழுமரம் என்பதனால், அல்லது, செங்குருதி வழியச் சிவப்படைந்து தோன்றிய கழுமரமும் ஆம்,
'நீர்' என்றது பரந்தாமன் துயில் கொண்ட பாற்கடலினை.
சீதரன் எனத் திருமாலைக் குறித்தது, அவன் திருமகளைத் தன் மார்பிலே தரித்திருப்பவன் ஆதலினால்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
