நானும் ஒரு வித்தகன்

வெண்காகிதமொன்று எடுத்து
கவியெழுத யோசித்தேன் ஒரு பொழுதில்!

'அன்பே' என்று ஆரம்பித்த நான்
அடுத்தவரி இயற்ற ஸ்தம்பித்தேன்...
அவ்வரியை அடித்துவிட்டு
பாட்டெழுத முயற்சித்தேன்;

'அம்மாடி ஆத்தாடி, ஆசைநூறு வகை, அடடா மழடா'
எப்படி யோசித்தாலும் இவைதான் சிக்கின;
சரி சிறுகதை எழுதலாமென பின் சிந்தித்தேன்...

'ஒரு ஊருல...' என ஆரம்பித்து கதையை முடித்தேன்,
படித்தவர்கள் இது பாட்டி வடை சுட்டகதை என வெறுப்பேற்றினார்கள்;
மனம் மாறினேன்...
கட்டுரை எழுதத் தயாரானேன்

'இயற்கையின் சீற்றம்' என தலைப்பு தயார் செய்தேன்,
முன்னுரை என முதல்வரி எழுதிட்ட எனக்கு
பின் உரை எழுதவே பிறக்கவில்லை ஞானம்;
கவிதை, கட்டுரை, கவிதை இவை எல்லாம் வேண்டாம்
ஓவியம் தீட்டலாம் என முடிவெடுத்தேன்...

முதலில் மஹாத்மாவை முயற்சித்தேன்,
தேசப்பிதாவை மீண்டும் ஒரு முறை கொன்றேன்...
பிறகு வள்ளுவரை சித்தரித்தேன்
சதாம் உசேன்- பின்லேடன் அவருக்குள் எட்டிப்பார்க்க
சித்தரிப்பை கத்தரித்தேன்...
வண்ணமயில் வரைந்தேன்
ஓவியம் கண்டவர்கள் கழுகு அருமை என்றார்கள்
அத்துடன் ஓவியக்கலையை ஒத்தி வைத்தேன்;

என்னடா இது எழுத்து ஞானமே இல்லையென்று
கழுத்து தொங்கி கசக்கியெறிந்தேன் காகிதத்தை...
சில்லென்ற காற்று என் மேனி தொட்டது,
ஆகாய மார்க்கம் விழிவழி பார்த்தேன்
மேகக்கூட்டங்களை உற்று நோக்கினேன்...
ராஜா குதிரை சவாரி செய்வது போல் மேகமிருந்தது,
அதே மேகம் அடுத்த விநாடி
ஒரு எருமைக்கடா போல உருமாறியது,
அடுத்தடுத்து என் எண்ணப்படி மேகவடிவம் அமைந்தது;
மேகக்கூட்டம் பாடம் கற்பித்தது எனக்கு
உருமாறும் கருமேகம் போல்
நான் அடுத்தடுத்து முயற்சித்த அத்தனையும்
கசக்கியெறிந்த காகிதத்தில் மழைநீராய் கரைந்தது...

மீண்டும் வெண்காகிதமெடுத்தேன்,
கவியெழுத யோசித்தேன்
'அன்பே' என்று ஆரம்பித்தேன்
அடுத்தவரி இயற்ற ஸ்தம்பிக்கவில்லை
யோசிக்கிறேன்! யோசித்துக் கொண்டிருக்கிறேன்!


-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (7-Mar-20, 10:12 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : naanum oru vithagan
பார்வை : 91

மேலே