நாய்க்கும் தேங்காய்க்கும்
நேரிசை வெண்பா
ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே!
தீங்காய தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயு நாயுநேர் செப்பு. 55
- கவி காளமேகம்
பொருளுரை:
தோழியே! தீமை எனப்படுவது இல்லாதே இருக்கின்ற திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே தேங்காயும் நாயும் ஒப்பிட்டு உரைத்துக் கொள்க, எங்ஙனமெனில்;
தேங்காய்:
தனக்கு ஓர் ஓட்டினை உடையதாயிருக்கும்; அந்த ஓட்டின் உட்புறம் வெண்மையான தேங்காயைக் கொண்டிருக்கும்: அனைவராலும் விரும்பப்படும் குலையாகத் தொங்குவதற்கும் அது கோணுவதில்லை;
நாய்:
சில பொழுது, ஓடித் திரியும்; சில பொழுது, இருந்தவிடத்திலேயே இருக்கவும் செய்யும்; அதனுடைய வாயின் உட்புறம் வெண்மையா யிருக்கும்; அதற்கு விருப்பமான குரைத்தலிலே ஈடுபடுவதில் அது வெட்கப்படுவதே இல்லை; ஓயாது குரைத்துக் கொண்டேயிருக்கும்.