வீணே செருக்கிப் பழிமூடி யுள்ளாய் பரிந்து – செல்வத் திமிர், தருமதீபிகை 600
நேரிசை வெண்பா
உலகின் நிலையை ஒருசிறி(து) ஓரின்
அலகில் அனுபவங்கள் ஆகும் – விலகி
விழிமூடி யுள்ளமையால் வீணே செருக்கிப்
பழிமூடி யுள்ளாய் பரிந்து. 600
- செல்வத் திமிர், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உலக நிலையை ஒரு சிறிது எண்ணிப் பார்த்தாலும் அரிய பல அனுபவங்கள் தெளிவாகும்; அவ்வாறு கருதி அறியாமல் கண் மூடிக் குருடுபட்டுள்ளமையால் வீணில் செருக்கிப் பழி மூடி இழிந்துள்ளாய்; விழி திறந்து உய்க என்கிறார் கவிராஜ பண்டிதர். நேர்ந்துள்ளதை ஓர்ந்து பார் என இது உணர்த்தியுள்ளது.
உணர்ச்சியால் உயர்வுகள் உளவாகின்றன. கூர்ந்து பார்த்து ஓர்ந்து சிந்தித்து வரும் அளவு மனிதன் உயர்ந்து வருகிறான். கண் எதிரே கண்ட காட்சிகளை எண்ணி ஆராய்ந்து உண்மைகளை உணர்ந்து கொள்பவர் உயர்ந்த பெரியோர்களாய் விளங்கி நிற்கின்றனர்.
அவ்வாறு ஒருமையோடு உணராதவர் சிறுமையாளராய் மறுமை நலமிழந்து வெறுமையாய் வாழுகின்றனர். தெளிந்த உணர்வில்லாத அந்த வாழ்வு இழிந்த மிருகமாய்க் கழிந்து போகின்றது. ஒருவன் இவ்வுலகில் வந்து பிறந்து மனிதன் என்று சிறந்து நிற்கிறான், மனவுணர்வின் வாய்ப்பால் அந்த மாட்சியை மருவியுள்ளான்; இந்த நிலையை எய்தியுள்ளவன் தன் சொந்த நிலைமையை உணர்ந்து தெளியானாயின் அது எந்த வகையிலும் மிகுந்த பழியாகின்றது.
உலக நிலையை ஓர்தலாவது அதில் தோன்றியுள்ள மக்களுடைய நிலைமை நீர்மைகளைக் கூர்ந்து தெளிதல். எவ்வளவோ பெரிய செல்வர்கள் பெருகியிருந்தனர்; அவர் இருந்த இடமும் தடந்தெரியாமல் மறைந்து போயினர்.
'கோடிக் கணக்கில் பொருள் கூடி இருந்தவரும் ஓடும் கையுமாய் நாடறிய நின்றாரே!” என்று வடமொழியில் ஒரு கவி பாடியுள்ளமையால் உடைமைகளின் நிலைமைகளை உணரலாகும்.
அழிவுடையதை அழிவடையுமுன் அழியா வகையில் வழி செய்து கொள்ளின் அது விழுமிய நீர்மையாய் விளங்கி இன்பம் கெழுமியுள்ளது.
பொருள் உலக வாழ்வுக்கு அவசியமும், அளவிடலரியதுமாகும்; வெள்ளம் போல் அது எவ்வளவு பெருகி வந்தாலும் மனிதனுடைய உள்ளம் தீயதேல் அவ்வளவும் தீமையாய் அல்லலையே விளைத்து அவல நிலையில் தள்ளி அவரிடமிருந்து ஒழிந்து போகும்.
செல்வமுடையவன் பணிவும் பண்பும் உடையனாயின், அவன் அரிய பெரிய ஓர் அதிசயமான பாக்கியவான் ஆகின்றான்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125 அடக்கமுடைமை
செருக்கின்றி அடங்கியிருப்பது எல்லார்க்கும் நல்லதே; ஆயினும் செல்வர்க்கு அது ஒரு திவ்விய சம்பத்தாய்ச் சிறப்பினை அருளும் என்பது சிந்தித்து உணரவுரியது.
உள்ளத்தில் தருக்கு இல்லையானால் அந்தச் செல்வன் உலகத்தில் உயர்ந்த சீமானாய் எல்லா மேன்மைகளையும் எய்துகிறான்.
பணிவுடைமையே செல்வமுடைமையை நல்ல செல்வம் ஆக்குகின்றது; அங்ஙனமின்றிச் செருக்கி நின்றால் அது பொல்லாத புலையாய் இழிக்கப்படுகின்றது.
நேரிசை வெண்பா
கல்வி யுடைமை பொருளுடைமை என்றிரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோல் தாமும்
தலைவணங்கித் தாழப் பெறின். 16 நீதிநெறி விளக்கம்
கல்வியாளரும் செல்வரும் தலைவணங்கித் தாழ்ந்திருப்பின் அவரது நிலை அதிசய மேன்மையாய் உயர்ந்து விளங்கும் என இது உணர்த்தியுள்ளது.
செல்வர்க்குப் பணிவு மேலான செல்வமாம் என்ற வள்ளுவர் கருத்தைத் தழுவி கல்வியாளரையும் இணைத்து இக்கவி உரைத்துள்ளமை நுனித்து நோக்கத் தக்கது.
படித்தவர்க்கு அழகு பண்பும் பரிவும்,
பணத்தவர்க்கு அழகு பணிவும் பயனும்.
நல்ல செல்வங்களை அடைந்தவர் எல்லார்க்கும் நலமாய் இதம் புரிந்து வர வேண்டும்; அவ்வாறு செய்யின் ஈசன் அருளை எய்தி மேலும் அவர் தேசு மிகப் பெறுகின்றார். அங்ஙனம் செய்யாது செருக்கி நின்றால் வெறுத்து இழிக்கப் படுகின்றார்,
ஒத்த உயிரினங்களுக்கு உதவி புரிந்து வரவே இறைவன் உன் கையில் பொருளைக் கொடுத்து வைத்திருக்கிறான். அவன் திருவுளப்படி அதனைச் சரியாகச் செய்து வந்தால் அரச பதவி முதலிய பெரிய செல்வங்களை உதவி மேன்மேலும் உன்னை மேன்மைப்படுத்தி அருளுவான்;
அவ்வாறு புரியாமல் பொருளில் மருள் கொண்டு உள்ளம் செருக்கி நின்றால் எள்ளி இகழ்ந்து இழிநிலையில் தள்ளி விடுவான். இந்த உண்மையை உள்ளியுணர்ந்து உரிமையான நன்மையை நாடிக் கொள்ள வேண்டும்.
எவன் உள்ளத்தில் செருக்கு எழுந்ததோ அன்றே அவன் பொருளுக்கு வளர்ச்சி குன்றியது; அவனும் அருள் இழந்தவனாய் மருளில் விழுந்து இருளில் உழல்கின்றான். சின்னப் பொருளைக் கண்டு செருக்க நேர்ந்தவன் பின்பு பெரிய பொருளை என்றும் காணாதவனாய் இழிந்தே போவான்.
பணிவின் பான்மை மனிதனுக்கு உயர்ந்த மேன்மைகளை அருளுகின்றது; செருக்கின் திமிர் அவனை இழிந்த கீழ்மையில் இறக்கி ஈனன் ஆக்கி விடுகின்றது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
தாழ்ந்தோர் உயர்வர் என்றும்மிக
..உயர்ந்தோர் தாழ்வர் என்றுமறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம்
..மதில்சூழ் கிடந்த தொல்லகழி
தாழ்ந்தோர் அனந்தன் மணிமுடிமேல்
..நின்றன்(று) உயர்ந்து தடவரையைச்
சூழ்ந்தோர் வரையின் உதிப்பவன்தாட்
..கீழ்நின் றதுபோய்ச் சூழ்எயிலே! - பிரபுலிங்க லீலை
ஒரு அரசனது நகருக்கு அமைந்திருக்க அகழியையும், மதிலையும் இது வருணித்துளது. பாதலம் வரை கீழே ஆழ்ந்தும், சூரிய மண்டலம் வரை மேலே உயர்ந்தும் அவை முறையே நின்றன. தாழ்ந்து போன அகழி முடிவில் ஆதிசேடன் முடிமேல் அமர்ந்திருந்தது; உயர்ந்து சென்ற மதில் சூரியன் காலடியில் குனிந்து நின்றது; ஆகவே பணிவோடு தாழ்ந்தவர் உயர்ந்து திகழ்வர், செருக்காய் நிமிர்ந்து நடப்பவர் இழிந்து நிற்பர் என்னும் உண்மை இதனால் விளங்கி நின்றது எனச் சிவப்பிரகாசர் இங்ஙனம் சுவையாக விளக்கியுள்ளார்.
செருக்கால் சிறுமையே வருமாதலால் அதனை மருவாதிருக்க வேண்டும் என நூலோர் பல வகைகளிலும் நிலைமைகளை விளக்கி உறுதி நலன்களை உணர்த்தியுள்ளனர்.
‘உள்ளத்திமிர் உயிர்க்குக் கேடு’ என்னும் முதுமொழியால் அதன் நாசமும் நீசமும் நன்கு அறியலாகும்.
“Before destruction the heart of man is haughty, and before honour is humility.” (Bible)
'அழிவு வருமுன் மனிதன் இருதயம் இறுமாப்பு உறும்; மேன்மை வருமுன் பணிவாயிருக்கும்’ என சாலமன் என்னும் நீதிமான் கூறியுள்ளார்.
‘விழிமூடி யுள்ளமையால் வீணே செருக்கிப் பழிமூடி யுள்ளாய்!’ என்றது வழுவின் வழி தெரிய வந்தது.
அறிவுக் கண்ணைத் திறந்து பாராமல் குருடாய் மூடம் மண்டியுள்ளமையினாலேதான் செருக்கு என்னும் பீடை உண்டாகிறது. பொருளின் நிலையைத் தெருளுறின் இருள் நீங்கி விடும்.
லட்ச ரூபாய் கையில் இருந்தால் உன்னைப் பெரிய செல்வனாக நீ எண்ணிக் கொள்கின்றாய்;. அவ்வாறு எண்ணும் பொழுது உலகத்தை முன்னும் பின்னும் கொஞ்சம் எண்ணிப்பார்.
பாரி, நள்ளி முதலிய வள்ளல்கள் பெரிய திருவுடையவர்; யாண்டும் பெருந்தன்மையுடன் எவ்வுயிர்க்கும் இரங்கி இதம் புரிந்திருந்தனர். அதனால் அவரை உலகம் இன்றும் உவந்து புகழ்ந்து வருகிறது. திருவின் பயன் படைத்தவர் திருவாளராகின்றார்.
எல்லார்க்கும் நல்லது செய்யவே ஆண்டவன் உன்னைச் செல்வன் ஆக்கி வைத்தான். ஏழைகளிடம் தாழ்மையாய் நடந்து வரும் அளவு உன் வாழ்வு வளம்பெற்று வரும். நிலைமையை உணராமல் நெஞ்சம் செருக்கினால் புலையாயிழிந்து புன்மை யுறுவாய்; உண்மையை உணர்ந்து உறுதியை விரைந்து கொள்.
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431 குற்றங் கடிதல்
செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழ வேண்டுமானால் செருக்கு முதலிய சிறுமைகள் இன்றி இருக்க வேண்டும் எனக் வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். பெரியோர்களுடைய அருள் மொழிகள் விழுமிய அறிவொளிகளை இனிது அருளி வருகின்றன. அவ் ஒளிகளால் உள்ளம் தெளிந்து உயர்ந்து கொள்ள வேண்டும்.
நேரிசை வெண்பா
அறம்புகழ் ஈட்ட அமைந்த பொருளை
மறம்பழி யீட்ட மருண்டு - புறம்பழிக்க
உள்ளம் தருக்கியே ஊனமுறல் ஈனமே
உள்ளம் தெளிக உடன். - கவிராஜ பண்டிதர்
செல்வம் பெற்றால் நல்ல நீர்மைகள் தோய்ந்து உள்ளம் தயாளமாயிரு; உறுதி நலங்களை ஓர்ந்து செய்; எல்லா மேன்மைகளும் இனிய தரும சிந்தனையால் தனியே உளவாகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.