1 வெயிலுக்கு இடும் விளக்குப் போலும் யான் நீதிநூல் கூறல் – அவையடக்கம் 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
வெயிலினைச் சோதி செய்வான்
..விளக்கிடல் போலுங் காகங்
குயிலினுக் கிசையு ணர்த்துங்
..கொள்கையே போலு நட்டம்
மயிலினுக் குணர்த்துங் கான
..வாரண மெனவும் யாவும்
பயிலுல கிற்கு நீதி
..பகரயான் துணிவுற் றேனால். 1
- அவையடக்கம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”அறமுறை அகலாதொழுகும் உலகினுக்கு நீதிநூல் சொல்ல நான் துணிவது இயல்பாகவே வெளிச்சம், இசை, நடனம் மூன்றும் முறையே தரும் சூரியன், குயில், மயில் மூன்றிற்கும் விளக்கு, காக்கை, காட்டுக்கோழி ஆகிய மூன்றும் அவற்றைத் தனித்தனியே உணர்த்தப் புகுந்ததற்கு ஒப்பாகும்” என்று இப்பாடலாசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.
நட்டம் – நடனம், சோதிசெய்வான் - சூரியன்