2 ஆன்றோர் அறிவித்த வற்றையே அவர் முன் கூறுவேன் – அவையடக்கம் 2

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பானுவின் கதிரை யுண்ட
..பளிங்கொளி செய்தல் போலும்
வானுலாங் கொண்டல் பெய்யு
..மழையினைத் தழையில் தாங்கித்
தானும்பெய் தருவைப் போலுந்
..தமிழொரு மூன்று மாராய்ந்(து)
ஆனுவார் கவிசொல் வோர்முன்
..அறிவிலேன் பாட லுற்றேன். 2

- அவையடக்கம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”முத்தமிழும் ஆராய்ந்து நிறைவாக செய்யுள் செய்யும் சிறப்புடையோர் முன் அறிவில்லாத நான் பாடுவது பளிங்கு சூரியனின் கதிர்களை வாங்கி ஒளி தருவதையும், வானத்தில் உலா வரும் மேகம் தரும் மழையைத் தங்கள் கிளை தழைகளில் தாங்கித் தரும் மரங்களையும் போன்றதாகும்” என்று இப்பாடலாசிரியர் அவையடக்கத்துடன் கூறுகிறார்.

பானு - சூரியன். தரு - மரம். ஆனுதல் - நிறைதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Mar-20, 8:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே