நன்றி 23112019
அறுபதில் பிறந்த நானின்(று)
அறுபதைத் தொட்டு விட்டேன் !
பிறந்தது முதலாய் நானிப்
பிறவியில் என்ன செய்தேன் !
மறந்திட வியலாத் துன்பம்
வாட்டிவ தைத்த போதும்
இறைவனின் கருணை யால்தான்
இன்னமும் உயிர்வாழ் கின்றேன்!!
அருந்தமிழ் அரவ ணைப்பில்
அமைதியாய்ப் பயணம் செல்லும் !
வருந்துயர் யாவும் நீங்கி
வளத்துடன் வாழ்வும் வெல்லும் !
கரும்பெனும் மரபில் தோய்ந்து
களிப்புடன் உள்ளம் துள்ளும்!
விரும்பிய வாறு வண்ணம்
விரல்நுனி வழிந்து மின்னும் !!
எத்தனை பேரின் வாழ்த்தில்
என்மனம் திளைத்த தின்று?
புத்திள உதிரம் பாயும்
புதுசுகம் என்னுள் கண்டேன் !
சத்திய மாக இஃது
சாத்தியம் தமிழால் தானே ?
அத்தனை பேர்க ளுக்கும்
அன்புடன் சொல்வேன் நன்றி !!
கனிவுடன் வாழ்த்தி யோர்க்கும்
கவிதையால் வாழ்த்தி யோர்க்கும்
தனிப்பதி வாகப் போட்டுத்
தகைமையாய் வாழ்த்தி யோர்க்கும்
இனிமையாய்ப் படங்க ளோடே
இசையுடன் வாழ்த்தி யோர்க்கும்
பனித்திடும் விழிக ளோடு
பாவைநான் பகர்வேன் நன்றி !!
சொந்தமும் நட்பும் வாழ்த்தச்
சோர்வெலாம் பறந்து போச்சே !
இந்தநாள் பொன்னாள் என்றே
இதயமும் பாட லாச்சே!
வந்தெனைப் பெருகு மன்பில்
வாழ்த்திய எல்லோ ருக்கும்
செந்தமிழ்ப் பாவால் நன்றி
செப்புவேன் இருகை குவித்தே !!
சியாமளா ராஜசேகர்