முத்துவிழா வாழ்த்து முனைவர் சரஸ்வதி ராமநாதன் 19112019

தேவகோட்டை மாதரசி ! தேமதுர சொல்லரசி !
தேவதைபோல் எழில்கொஞ்சும் தெய்வீக இசையரசி !
பாவனமாய் மணம்பரப்பும் பைந்தமிழின் பாட்டரசி !
சேவைசெயும் பெண்ணரசி ! திறமைமிக்க உரையரசி !

சொற்பொழிவால் கேட்போரைச் சொக்கவைக்கும் சுவையரசி !
கற்றோரும் வியக்குவண்ணம் கவிபடைக்கும் கவியரசி !
வற்றாத தமிழூற்றாய் மகிழ்விக்கும் தமிழரசி !
சற்றேனும் சலிப்படையாச் சாந்தமான குணவரசி !

கலைமகளின் பெயர்கொண்ட கனிவான அன்னையிவள்
அலையில்லா ஆழ்கடல்போல் அமைதியான அறிவரசி !
மலைக்கவைக்கும் பண்பரசி ! வானளவு பேரிருந்தும்
தலைக்கனமே இல்லாத தகைமைமிகு கவினரசி !

கணக்கில்லாப் பட்டிமன்றம் கவியரங்கம் கண்டவரின்
இணையில்லாத் தனிச்சிறப்பை எடுத்தியம்ப சொற்களில்லை
அணங்கிவரின் அரும்பணிகள் அளவிடவே முடியாது
வணக்கத்துக் குரியவரை மனம்கனிந்து வாழ்த்திடுவோம் !

குடமுழுக்கு நாளிலிவர் குரலமுதைச் செவிமடுக்கக்
கடவுளரும் ஆவலுடன் காதுகளைக் கூர்தீட்டிப்
படையோடு காத்திருந்து பைந்தமிழைத் தாம்பருகி
அடடாவோ அடடாவென்(று) அகங்குளிர்ந்து வியந்திருப்பர் !

கண்ணுக்குக் கண்ணாக கையளவு மனத்திற்குள்
கண்ணதாசன் பாடல்களைக் கவினழகாய்ப் பொதித்துவைத்துக்
கண்ணுறங்கும் வேளையிலே கனவினிலும் அசைபோட்டுக்
கண்ணதாசன் புகழ்பாடும் கவிக்குயிலே வாழியவே !

கடமையிலே கண்ணாக கருணையிலே தாயாக
மடமைகளைக் களைந்தெறியும் மாண்புமிகு பெண்ணாக
புடம்போட்ட பொன்னாக பொறுப்பான நடுவராக
நடமாடும் கலையரசி ! நற்றமிழ்போல் வாழியவே !

முத்துவிழா காணுமெங்கள் முத்தமிழின் நாயகியே
நித்திலமாய் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் பாமணியே
தித்திக்கும் செம்மொழியாம் செந்தமிழ்போல் எந்நாளும்
உத்தமியே நீவாழி! ஓங்கட்டும் நின்புகழே !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 1:36 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 474

மேலே