வண்ணப் பாடல் முருகன்
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதானா
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தனதானா
ஆறுபடை வீடுடைய ஆறுமுக வேலவனும்
ஆறுதலை யேயருள வருவோனே !
ஆவலொடு பாடுமடி யாரிதய மேயுறைய
ஆனைமுக னோடருகில் விரைவோனே !
வீறுகொளு சூரர்தமை வேலுமிரு கூறுசெய
வேழமக ளோடுமணம் புரிவோனே !
வேதனையெ லாம்விலக நாடிவரு வோர்மகிழ
வீடுபெற வேகருணை அருள்வாயே !
பேறுடைய மாகயிலை வாழ்பரம னார்மகனும்
பீடுடைய தேனிசையில் மகிழ்வோனே !
பேரழகு வேடர்மகள் நாணமுற வேயினிது
பேசியுற வாடுமெழில் மணவாளா!
நீறணியு மேனியொடு மார்பிலணி யாரமொடு
நீலமயில் மீதுநட. மிடுவோனே !
நேயமிக வேபழநி மாமலையி லேயுறையும்
நீடுபுக ழோடுதிகழ் பெருமாளே!
சியாமளா ராஜசேகர்