பாரதியைப் பாடு

பைந்தமிழில் சொல்லடுக்கிப்
பாரதியைப் பாடு - சிந்து
பாடல்களை நாடு - அவன்
பாட்டுக்கில்லை ஈடு - ஜதி
பல்லக்கிலே வருமழகைப்
பார்த்திடவே கூடு !

நைந்தவுளம் தைக்குமவன்
நல்லதமிழ்ப் பாட்டு - சொன்ன
நல்லறத்தை கேட்டு - வாழ்வில்
நச்சுக்கிடு வேட்டு - நிதம்
நம்பியவன் வழிதொடர்ந்து
நன்மைகளைக் கூட்டு !

உயிர்களிடம் அன்புடனே
உரிமைகொண்ட தலைவன் - மனம்
உழுவதிலே முதல்வன் - என்றும்
ஓய்வறியாப் புலவன் - நம்முள்
ஒற்றுமையை விதைத்துவிட்ட
ஒண்டமிழ்த்தாய் புதல்வன் !

மயிலிறகின் வருடலைப்போல்
மயங்கவைக்கும் உள்ளம் - பாட
மறைந்துவிடும் கள்ளம் - அது
மடமைகளைக் கொல்லும் - இந்த
மண்ணுலகம் உள்ளவரை
மக்களுள்ளம் வெல்லும் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 1:58 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 91

மேலே