பாரதி பாக்கள்
தண்டமிழைத் தாலாட்டித் தாய்நாட்டைப் போற்றிடும்
முண்டாசு பாரதியின் முத்தான பாக்களால்
எண்ணத்தி லுண்டாகும் ஏற்றமிகு பேரதிர்வில்
கண்ணுள்ளும் பூக்கும் கனல். 1.
கனல்தெறிக்கும் பாட்டில் கவிநயமும் கொஞ்சும்
நினைக்கையில் வீரத்தை நெஞ்சில் விதைக்கும்
மனமாசை நீக்கும் மருந்தாய் விளங்கும்
இனபேதம் போக்கும் இதம் .2.
இதந்தரும்; மாந்தருக்குள் இன்னலுண் டாக்கும்
மதவேறு பாட்டினை மாற்றப்போ ராடும்;
வதைத்திடும் மூட வழக்கத்தைத் தோண்டிப்
புதைத்திடப் பொங்கி யெழும் . 3
எழுகதிர் போலும் இருளைத் துடைக்கும்
உழுதிடு முள்ளம் உயர்கவி யாலே
பழுதுக ளைக்களைந்து பண்பட வைக்கும்
விழிப்புணர் வூட்டும் விழைந்து. 4.
விழைந்து படிப்பவர் வேண்டுதலீ டேற்றும்
பொழியும் மழையெனப் புத்துணர் வூட்டும்
அழிவை யகற்றி அறத்தா லுயர்ந்த
வழியினைக் காட்டும் வரம். 5.
வரமாய் விளங்கிடும்; மங்கையர் தம்மின்
உரிமை நிலைநாட்ட வூக்கங் கொடுக்கும்
பெருத்த குரலொடு பெண்ணடிமை தீர்க்குங்
கருவியாய்ப் போராடுங் காண்.6.
காண்பவ ருள்ளக் கனலை யெழுப்பிடும்
கேண்மை யுடனே கெடுதிக ளைப்போக்கும்
தீண்டாமைப் பேயைத் தெறித்தோடச் செய்திடும்
தூண்போலத் தாங்கும் தொடர்ந்து . 7.
தொடருந் துயரால் துவண்டு விடாமல்
சுடரின் ஒளிபோல் துணையாய் அமையும்
தடுமாறி வீழாமல் தைரிய மூட்டி
நடமாடச் செய்யும் நமை . 8.
நமைப்பேணும் பாரதியின் நற்றமிழ் பாக்கள்
இமைபோலக் காக்கும்; இளையசமு தாயம்
அமைதியாய் வாழ அடிகோலும்; என்றும்
நிமிர்ந்திட வைக்கும் நிலத்து. 9.
நிலையிலா வாழ்க்கையில் நிம்மதி தேடி
அலைபவர்க் கெல்லாம் அருகிருந்து தாய்போல்
மலைக்குவண்ணம் இன்புதரும் மாகவியின் பாக்கள்
விலைமதிப் பில்லா விருந்து. 10.
சியாமளா ராஜசேகர்