சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா

சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா ....!!!

முகிலுக்குள் ஒளிந்துகொண்டு முகம்காட்டா முழுமதியே
அகிலத்தில் நடக்கின்ற அனைத்தையும்நீ பார்க்கின்றாய்
தகிக்கின்ற நெஞ்சத்தைத் தணிவிக்க ஏன்மறந்தாய்?

பதிலைச்சொல்!

இளமைமுதல் இன்றுவரை இனியநட்பாய் இருப்பவளே
களையிழந்த என்வாழ்வின் கதையுணர்ந்தும் மௌனமேனோ?

சற்றேசொல்!

அன்றுன்னைக் காட்டித்தான் அமுதூட்டி மகிழ்ந்தேன்யான்
இன்றென்றன் பிள்ளைகளின் இதயத்தில் இடமில்லை!

சரியாசொல்!

காப்பகத்தில் விட்டுவிட்டுக் கடல்கடந்து சென்றுவிட்டார்
கூப்பாடு போட்டாலும் கூப்பிடத்தான் எவர்வருவார்?

ஆகையினால்

பித்தம் பிடித்த பிள்ளைகள் போக்கைச்
சத்த மின்றிச் சரிசெயின்
சித்தங் குளிர்ந்து சீர்பெறு வேனே!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (24-Mar-20, 2:08 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே