புத்தாண்டு வாழ்த்து 2020
பொலிவா யவளும் பிறந்துவிட்டாள்
புதுமை படைக்க மலர்ந்துவிட்டாள் !
வலிகள் போக்க வந்துவிட்டாள்
வளங்கள் சேர்க்க வடிவெடுத்தாள்!
நலிந்தோர் வாழ்வில் உயர்வடைய
நடக்கும் யாவும் நலமாக
மலர்ந்தா ளவளும் புதிதாக
வாழ்த்து மழையில் நனந்தவண்ணம்!!
வண்ணங் கொஞ்சும் கோலங்கள்
வாசல் தோறும் வரவேற்க
எண்ணம் முழுதும் இன்பவெள்ளம்
இனிதே இசையாய்க் கரைபுரள
உண்மை யன்பில் வாழ்த்துகளை
உள்ளங் குளிரப் பரிமாறக்
கண்ணைக் கவரும் விதமாகக்
கனிவா யவளும் பூத்தனளே!!
பூத்த வாண்டு நன்மைகளைப்
புவியில் கொண்டு சேர்க்கட்டும் !
மூத்தோர் காட்டும் நல்வழியில்
முனைந்தே இளைஞர் செல்லட்டும்!
காத்த லொன்றே கடமையெனக்
கட்சிப் பணிகள் சிறக்கட்டும்!
ஆத்தி ரத்தைப் புறந்தள்ளி
அன்பே நம்மை ஆளட்டும்!!
சியாமளா ராஜசேகர்
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்