படகேறிய தமிழன் படைகொண்டு வருவான்

படகேறிய தமிழன் படைகொண்டு வருவான்

மண்ணுக்குள் மனிதம் புதைந்து
காலங்கள் வேகமாகப் போகிறது.

வெற்றிக்கொடியேற்றக் களத்தில்
வேள்விக்காக வெட்டப்பட்ட
வெள்ளாடுகளின் இரத்தம் இன்னமும்
காயவில்லை.... ஓலமும் ஓயவில்லை....
சற்றும் மனங்கிறுங்காமல் சிங்களம்
கொட்டித் தீர்த்தது கொடூரத்தை...

முள்ளிவாய்க்கால் எனும் பெயரே
முள்ளாகக் குத்துகிறது....

“ஜயோ” எனத் தஞ்சம் கேட்டவரின்
கைகளை வெட்டித் தீ மூட்டினார்கள்...
கொஞ்ச உயிரை மிச்சம் கொண்டு
மண்டியிட்டுத் தஞ்சம் கேட்டோரை
காலால் மிதித்துக் கருவறை யறுத்தார்கள்...
மிஞ்சும் காலமெல்லாம் தீராத கறையைச்
சிங்களம் முள்ளால் செதுக்கியது
முள்ளிவாய்க்கால் மண்ணில்...

சொல்லால் செதுக்கமுடியாச் சுமையை
மனிதம் எங்குமே பார்க்காத வதையை
முள்ளிவாய்க்காலில் மூடிய திரைக்குள்
சிங்களம் இரத்தருசிபார்த்தது...

அந்த நாட்கள் எப்படிக் கரைந்தது!
ஒரு தசாப்தம் தாண்டிய வடுயிது
ஆறாத வடுவாகி நெஞ்சை உருக்கி
வஞ்சம் தீர்க்கப் பகையைத் தேடும் நெஞ்சம்...

பால் மறவாப் பிஞ்சை மடியில் வைத்துக்
கதறும் தாயின் ஓலம்..
கண்விழிக்கவில்லை... கடவுளும்தான்..

நாவறண்டு கிடக்கும் வேளை
நீரெடுத்து வரப்போன தந்தை வரவில்லை!!!
..
தந்தையைத் தேடிப்போன மைந்தனும்
குற்றுயிராய்த் தெருவழியில்...

உற்றவர் யாருதான் உயிரோடு இருக்கிறார்
என்றறிந்து வரக்கூடப் பொழுது இல்லை..

மாற்றான் படைமறிக்கக் களம் புகுந்த
வீரமறவனும் வீடுவரவில்லை..

எங்கும் ஓலம்... ஓலம்.... அழுகையின் அவலம்...
காதைப்பிளக்கும் நேபாம் குண்டுகளைத்
தாண்டியும் அழுகுரல் வானெட்டியது..

மனிதஉரிமைகள் ஏனோ மௌனித்துப் போனது.
இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது...

“தெருவோரம்! இல்லை தெருவே தெரியாத வழியோரம்
தவழ்ந்து போய் என் பிள்ளைக்காய்
நீரேடுத்து வரும் வேளை
‘அண்ணா’ என்ற அனுங்கலான சத்தம்!!!
கிடந்தபடி திரும்பிப் பார்த்தேன்..
காயத்துடன் பல களமாடிய பெண் புலிகள்
ஒரு வாகனத்தின் கீழே...
தண்ணீரென்றார்கள். தண்ணீர் கொடுத்தேன்
“எல்லோரும் போகிறார்கள் நீங்கள் போகவில்லையா?”
எனக்கேட்டேன்...
‘இல்லையண்ணா நாங்கள் உடம்போட சாச்சர் கட்டியிருக்கிறம்
அவன் வந்தால் வெடிச்சிருவம் அவனட்ட பிடிபட்டால்
என்ன செய்வான் என்று தெரியும் தானே”

கொஞ்சமும் மானத்தை அந்த மந்தைக் கூட்டத்திடம்
கொடுத்துவிடக் கூடாது என்ற ஓர்மம்....

மானமே பெரிதென வார்த்தெடுக்கப்பட்ட
தமிழனின் மறக்குலப் பெண்களாக...
வேண்டாம்... வேண்டாம்....

நெஞ்சுக்குள் அந்த மென்மையான குரலின்
வேதனை இன்னமும் மிகுதியாய்த் தேங்கிக் கிடக்கிறது.
நினைக்கும் போதும் , உறங்கும் போதும்
கனவாக புரட்டிப்போடும் காயத்தின் வலிகள்!...

இப்போது பார்த்தால் முள்ளிவாய்க்கால்
பூகம்பத்தின் பின்னரான அமைதிபோல
அமைதி காத்துக் கிடக்கிறது...இல்லை
அமைதியாக்கப்பட்டுள்து....

புதைக்கப்பட்ட இடங்களில் புதர்மண்டிக்கிடக்கிறது.
உயிர்காக்க வெட்டப்பட்ட குழிகளுக்குள்
உடலங்கள் புதைக்கப்பட்டு மட்டமான
நிலமாக்கப்பட்டுவிட்டது.... அமைதி...
ஓர் மயானத்தின் அமைதி...

அங்கே அமைதியாக நீங்கள் நிதானமாக
ஒருமுறை காதுகொடுத்துக் கேட்டுப்பாருங்கள்..
அன்றைய வேதனையின் மூச்சுத்தினறல்
காதுகளில் மெதுவாக அலறிக்கொண்டிருக்கும்...
உங்கள் கால்களில் குண்டுகளின் ஓசைஅதிரும்...

ஒரு பெரும் யுகத்தை தகர்த்துவிட்டோம் என்றபடி
மார்புதட்டும் பேரினவாதத்தின் பெரும்
கொலைப்பசிக்குத் தனலாகிப்போனது ஒரு களம்...
ஆனால்... ஆனால்...
பினிக்ஸ் பறவையாக உருகி எரிந்து சாம்பலாகி
ஒரு இனம் மீண்டும் பிறப்பெடுப்பதை
வெறியர்கள் கண்டுகொள்ளவில்லை..

நின்று பகைமுடித்து வென்று களமாடிய வேங்கைகள்
கண்கள் இன்னமும் மூடவில்லை...
கொஞ்சமும் ஓயவில்லை...

படகேறிய தமிழன் பகை முடிக்க
படையோடு வரும் காலம் தொலைவில் இல்லை.!!!!

எழுதியவர் : Paulus Albert (30-Mar-20, 2:19 am)
சேர்த்தது : அன்பரசன்
பார்வை : 22

புதிய படைப்புகள்

மேலே