சிதம்பர சின்னங்கள்
சிதம்பரம், நடராசர் கோயிலிலே இருக்கின்ற சின்னங்கள் பலவற்றையும் தொகுத்து வெண்பாவாகப் பாடியது இது.
நேரிசை வெண்பா
ஞான சபைக னகசபைசிற் றம்பலம்பே
ரானந்தக் கூடந் திருமூலட் - டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபு ரம்பொற்செய்
கம்பமண்ட பஞ்சிவகங் கை. 87
- கவி காளமேகம்
பொருளுரை:
சிற்சபை ஞானசபை என்பது,
கனகசபையாவது பொன்னம் பலம்; பெருமான் நடராச மூர்தியாக வீற்றிருக்கும் இடம் அது;
சிற்றம்பலம் என்பது சிற்சபையான ஞான சபைக்கு முன்னர் இருப்பது,
பேரின்ப சபை பேரானந்தக் கூடம் எனப் பெறுவது; இது பெருமான் ஊர்த்துவதாண்டவ மூர்த்தியாக விளங்கும் இடம்.
திரு மூலட்டானம் என்பது பெருமான் சிவலிங்க சொரூபமாக விளங்கும் இடம்.
பேரம்பலம் என்பது தேவசபை: தேவர்கள் வந்து பெருமானைத் தரிசித்துப் போற்றும் இடம்;
ஐந்து பிரகாரங்கள் பஞ்சாவரணம் என்று குறிக்கப் பெற்றன.
நான்கு திசையிலும் விளங்கும், கோபுரங்கள் நாற்கோபுரங்கள் என்று குறிக்கப் பெற்றன.
கம்ப மண்டபம், ஆயிரக்கால் மண்டபம், சிவகங்கை - திருக்குளத் தீர்த்தம்.