குமரேச சதகம் - பலர்க்கும் பயன்படுவன - பாடல் 16
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கொண்டல்பொ ழிமாரியும், உதாரசற் குணமுடைய
கோவுமூரு ணியின்நீரும்
கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும்,
குடியாளர் விவசாயமும்,
கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற்
கனிபல பழுத்தமரமும்,
கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும்
காவேரி போலூற்றமும்,
விண்டலத் துறைசந்தி ராதித்த கிரணமும்,
வீசும்மா ருதசீதமும்,
விவேகியெ னும்நல்லோ ரிடத்திலுறு செல்வமும்
வெகுசனர்க்கு பகாரமாம்,
வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப
மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 16
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
வண்டுகள் முரலும் கடப்பந்தாரணிந்த சிவந்த கலவைச் சந்தனங்கமழும் மார்பனே!, வடிவேற் கையனே!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!
முகில் பெய்யும் மழையும், வண்மையும் நற்பண்பும் உடைய அரசனும்;ஊராருக்குப் பொதுவான நீர்நிலையிலுள்ள தண்ணீரும்; ஊர்ப் பொதுக்கூட்டங்கள் கூடும் மேடையான மன்றிலே தழைத்த மரத்தின் நிழலும்; குடிகள் இடும் பயிரும்;
எல்லோரும் வரக்கூடிய பெரிய சந்திப்பான இடத்திலே பல பழங்களுடன் நிற்கும் மரமும்; அருளுடன் அமைக்கப்பெற்ற தண்ணீர்ப் பந்தலும், காவிரியைப் போல வற்றாது சுரக்கும் நீரூற்றும்,
வானிலே உலவும் திங்கள் ஞாயிறுகளின் ஒளியும்; வீசுகின்ற குளிர்ந்த காற்றும்; அறிவாளிகளான நல்லவரிடத்திலே உண்டாயிருக்கும் செல்வமும்;பல மக்களுக்கு ஆதரவாகும்.
விளக்கவுரை:
ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீர்நிலை.
முற்காலத்திலே ஊருக்குப் பொதுவான இடத்திலே பெரிய மரத்தடியிலே உள்ள மேடையே பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம்.
சனர் (வட) - மக்கள், விவேகி (வட) - அறிவாளி. விவேகி: ஒருமை; நல்லோர் :பன்மை. ஆகையால், ‘விவேகியெனும் நல்லோர்' என்பது ஒருமை பன்மை மயக்கம்.
களபம் - கலவைச் சந்தனம், குங்குமப்பூ கலப்பதாற் ‘செங்களபம்' ஆயிற்று.
கருத்து:
முகில்பொழியும் மழையும் அதனுடன் கூறப் பெற்ற மற்றவைகளும் எல்லோருக்கும் பயன்படுவன.