வெண்தழல் தூரிகை

கானல் பனி மெல்லிய அளவில் விழுந்த நேரமது. நடு சாமம் இரண்டு மணி இருக்கும் குளிரில் கடிகார முட்கள் கூட நடுங்கியது அப்போது தான் மதனின் அலைப்பேசி அலறியது. தூக்க கலக்கத்துடன் அலைபேசியை அனைத்தான் மீண்டும் ஒலித்தது இந்தமுறை எடுத்தான். எதிர் அலையில் ஓர் மென்மையான பெண் குரல்.

“மதன் ரெடியா இரு, 5 மணிக்கு நம்ம கிளம்புறோம் சரியா!

நமக்கு தேவையான பணம் எல்லாம் எடுத்துக்கிட்டேன்.” என தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உறக்கத்தை கலைத்து மணியை பார்த்தான் இரண்டு ஆறை தழுவி கொண்டிருந்தது. வேகமாக அலைபேசியை பார்த்தான் அப்போது தான் தெரிந்தது அது பிரம்மகலை என்று, மீண்டும் அவளுக்கு அழைத்தான்.

“ஏய் என்னடி சொல்ற அஞ்சு மணிக்கு எங்க போற”

“டேய் ஊர விட்டு ஓடி போக போறோம்ல”

“எதுக்கு…”

“அதலாம் காலையில பேசிக்குவோம்.
நீ அஞ்சு மணிக்கு ரெடியா பி பிளாக் மாடில நில்லு. நானும் வந்துரேன் சேர்ந்து ஓடி போவோம்”

“ஏய் போறது தான் போறோம்!
நல்ல தூங்கி எந்திருச்சிட்டு டிபன் சாப்பிட்டு மெதுவா போவோம்”

“அதலாம் முடியாது சொன்னத செய்”

இணைப்பு துண்டிக்கப்பட்டது இருந்தும் அவன் ஏலம் விட்டுக்கொண்டே இருந்தான் அவள் பெயரை.

சூரியன் துயில் எழ காத்திருந்தான். சொன்னதை போலவே மார்கழி பனியின் குளிரையும் பொருட்படுத்தாமல் தாழ்வாரத்தின் இடுக்குகளில் காத்திருந்தாள். பின்பு ஏதோ ஒரு சப்தத்தை கேட்க நேர்ந்தாள். அதை கேட்ட மாத்திரமே ‘ மதன்’ ‘மதன்’ என்று கூக்குரலிட்டாள். ஆனால் சப்தமோ நிசப்தாமாகி இருந்தது.
திடிரென சில்லென்ற குளிரில் வெப்ப மூச்சு காற்று அவள் மேல் வீசியது. அப்படியே அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அந்த மெல்லிய இருளில் யாரோ பின் தொடர்வதை உணர்ந்தாள். அலைப்பேசியை எடுத்து மதனை அலைக்க முற்பட்டாள். பாதகத்தி அதையும் இருளில் தவறவிட்டாள். திசை தெரியாமல் தாழ்வாரத்தையே சுற்றி திரிந்தாள். தூரத்தில் ஒரு வெளிச்சம் வந்து வந்து சென்றது. அது மதனாக தான் இருக்கும் என அவள் அன்னிச்சைகள் கூறியது. நேரே சென்று பார்த்தால் அது மெச்சுப் படிகளின் சுவரோரம் பொருத்தப்பட்டிருந்த எடிசனின் படைப்பு. அந்த வெளிச்சத்தில் அவள் மனம் வெளிரி போனது. வெளிச்சம் மெல்ல வெளியே படர இது தான் தக்க தருணம் என கைப்பேசியை துலாவினாள், கண்டுபிடித்தேன் என ஓடினாள் அருகே சென்றவள் பேரதிர்ச்சியில் உறைந்தாள். கைப்பேசி அருகே மதன் கிடத்தப்பட்டதை கண்ட கலைக்கு மயக்கமே பிரசவமாயிற்று. அவனை மெல்ல அனைத்து கன்னங்களை தட்டினாள் ம்ஹூம் எழவில்லை. ‘என்னடா ஆச்சு! எந்திரிடா” என சொல்லிக்கொண்டே என்னவோ முயற்சி செய்தாள். எதுவும் கதைக்கு ஆகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கதறி அழுத அவளுக்கு மணியின் ஞாபகம் வந்தது.

அலைப்பேசியை எடுத்து அழைத்தாள், தொண்டையில் வார்த்தைகள் கவ்வ நடந்ததை கூறினாள். மணியும் அதிர்ச்சியுடன் “என்ன சொல்ற ! இரு வரேன்” என்று கிளம்பினான்.

மணிக்கும் சற்று குழப்பம் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என பதறியடித்து தாழ்வாரத்தின் அருகே வந்தான். மதனை பார்த்த மாத்திரத்தில் “நண்பா !! என்னடா டேய்..” என கதறினான். கலையும் கலையிழந்து நிற்க நேரம் ஐந்தை நெருங்கியது. அப்போது சட்டென யோசித்தவன் அவன் மூக்கின் அருகே விரல்களை வைத்தான். திடுக்கிட்டு பின்னே நகர்ந்தான் மூச்சின் சூடு அவன் விரல்களை தகிக்கவில்லை. நிறுத்தி நிதானமாகவே சொன்னான் மணி “மதன் செத்துட்டான்”. அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். அவள் இறந்த சேதி கேட்டு சிந்திய கண்ணீரின் அளவு கோளில் மதனுக்கு சற்று அதிகம்.

ஆம்! காதலுக்காக காதலர்கள் சிந்திய கண்ணீரை சேமித்திருந்தால் இன்னும் ஒரு இந்துமா சமுத்திரத்தையே கண்டிருக்கும் இந்த பிரபஞ்சம். நல்ல வேளை வற்றாத ஜீவநதியாக காதலர்களுக்குள்ளே ஓடும்படி செய்துவிட்டான். பெற்றோருக்காக சிந்திய கண்ணீர் துளிகளை விட காதலுக்காக சிந்திய காதல் துளிகள் அதிகம்.

கண்ணீர் வரத்தின்றி நின்ற அவளுக்கு ஆறுதல் மொழி கூறினான் மணி. “இத நான் பாத்துக்குரேன் ! நீ யாருக்கும் தெரியாம போய்ரு … அப்பாக்கு எது தெரியாம கப் சிப்னு படுத்துக்கோ.”

அவளுக்குகோ மனம் கேட்கவில்லை, எப்படி கேட்கும் ! உருகி உருகி காதலித்த காதலன் காதலில் திளைத்து கிடப்பதை பார்த்த கண்களில் பேச்சும் மூச்சும் இன்றி கிடப்பதை பார்த்து எப்படி கேட்கும்.

ஆண்களுக்கு காதலில் விழ நான்கு நொடிகள் போதுமாம் ஆனால் பெண்கள் காதலில் விழ யுகம் கூட ஆகுமாம். ஆம் ! தத்துவ ஞானிகள் மற்றும் உளவியல் பேரறிஞர்கள் கூறுவது போல எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் போல பெண்களின் காதல் அழகு பார்க்கும், நிறம் பார்க்கும், பணம் பார்க்கும், குணம் பார்க்கும் அதன் ஆழம் பார்க்கும். அப்படி ஏதும் பாராமல் நொடி பொழுதில் அவன் வசம் விழுந்தவள் அவள் ஏழேழு ஜென்மங்கள் வாழ கனவுகள் பல கண்டவள் அவன் நிலையை கண்டு மலை முகடுகளின் நிலவும் மழை புழுக்கத்தை போல புழுங்கினாள். அவளை கண்டு நமக்கு சிரிக்க தான் தோன்றும் ஏனென்றால் அவள் இந்த நூற்றாண்டின் புதுமை பெண், ‘என் மகள் காசிக்கு ஓடிப்போய் தாழ்ந்த சாதியை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் !” என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று கூறிய பாரதியின் புதுமை பெண் ஆனால் பாரதி
இப்போது இருந்துதிருந்தால் அவளுக்காக அவனும் கண்ணீர் சிந்தியிருப்பான்.

ஆம் கண்ணீர் தான் சிந்தியிருப்பான். உங்களுக்கு தெரியாத ஒன்று யானும் பாரதியும் மட்டும் அறிந்த ஒன்று அந்த அவளின் நெகிழ்வான தருணங்களை நினைத்து கண்ணீர் சிந்தியிருப்பான்.

ஆம் கண்ணீர் தான் சிந்தியிருப்பான்.
உங்களுக்கு தெரியாத ஒன்று யானும் பாரதியும் மட்டும் அறிந்த ஒன்று அந்த அவளின் நெகிழ்வான தருணங்களை நினைத்து கண்ணீர் சிந்தியிருப்பான்.

இது எப்படி நிகழ்ந்தது என்று அவளுக்கு கடுகளவு கூட யோசனை இல்லை. அவள் சிந்தனை முழுவதும் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு அங்கும் இங்கும் அலைப்பாய்ந்தது. மணியும் கலையும் உடனை அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

மெல்ல நகரும் வேளையில் தான் அந்த சத்தம் கேட்டது. அது என்ன சத்தம் என்று வெகுவாக விளங்கவில்லை. ஆனால் தாமதிக்காமல் கலை அவ்விடம் ஓடினாள். மணி அவளை பின் தொடர அவனுக்கு அங்கு அவகாசம் ஏதும் இல்லை.

சட்டென ஒரு கதறல் ‘மணி! மணி..’ என்று. மணியும் விரைந்து வந்தான்.

“என்ன கலை? என்னாச்சு!”

அவள் முகத்தில் பயம் கவ்வியிருந்தது. தொண்டை குழியில் எச்சில் விழுங்க எத்தனித்த குரலில் “மதன் பாடிய காணோம்!

“ஏய் என்ன சொல்ற…” என்றவாறே அருகில் சென்ற மணிக்கும் கதிகலங்கியது.

“இங்க எதோ தப்பா இருக்கு! உடனே நம்ம இங்க இருந்து போனும் “.

கலையும் அவனை ஆமோதித்தாள்.

ஆளில்லா தாழ்வாரம் பனி விழும் இரவு, யார் என்ன செய்தார்கள், என்ன நடந்திருக்கும் என இருவரும் குழப்பத்துடனே அங்கிருந்து சென்றனர்.

யார் அந்த மதன்? கலைக்கும் அவனுக்கும் என்ன உறவு இவர்கள் இடையே உளவும் மணி யார் ? என மணித்துளிகள் மணியின் கண்களில் பின்னோக்கி நகர்ந்தன.

அது ஒரு வெயில் சுட்டெரித்த சித்திரை மாதம், மதன் தன் மூன்றாண்டு ஹாஸ்டல் வாழ்க்கையை துறக்க நண்பன் குடியிருப்புக்குள்ளே வீடு எடுத்து தங்கிட பேரவா கொண்டு வந்தான். மீதமிருக்கும் ஓராண்டையும் கழிக்க வந்தவனுக்கு ஹாஸ்டல் வாழ்க்கையை விட இந்த குடியிருப்பு வாழ்க்கை மிகவும் பிடித்து போனது. பின்பு பிடிக்காத என்ன? பரோலில் வெளிவந்த கைதி போல கூட்டை விட்டு வெளி வந்த குருவி போல அத்தனை மகிழ்ச்சி அவன் உள்ளம் முழுவதும்.

மணி தன்னை புஜபல பராக்கிரமசாலியாக எண்ணி கொண்டு வட்டாரத்தில் ஒரு டானை போல சுற்றி திரியும் இளைஞன். மதனின் கல்லூரியில் தான் அவனும் படிக்கிறான்.
மணி மதனின் மீதுள்ள அன்பினால் தாம் இருக்கும் குடியிருப்பிலே வசிக்க அழைத்தான். இவனும் மூச்சை காட்டாமல் வந்து குடியேறினான்.

இவர்களுடன் மூன்றாவதாக இணைந்தான் மகிழ்நன். அதே குடியிருப்பில் வசிக்கும் போக்கிரி இளைஞன். அனுதினமும் ஏகத்துக்கும் மற்றவர்களை கலாட்டா செய்து மகிழும் நன் அவன். விவசாய கல்லூரியில் களையெடுக்க பயிலும் மாணவன், மணியின் பள்ளிக் கால உற்ற நண்பன்.

ஆண்களுக்குள் எப்போதும் ஒரு கூற்று மிக பிரசித்தம் ” அது நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்” என்பது தான். இருவர் மூவர் ஆனார்கள். மும்மூர்த்திகள் போல மூவரின் அல்சாட்டியம் கட்டுக்கடங்காமல் போனது. கவட்டை கொண்டு சொட்டைகளை பதம் பார்ப்பது. இரும்பு தும்பிகளை கண்டபோதல்லாம் இரும்பு கடைக்கு வழியனுப்புவது, மட்டை பந்துகளால் குடியிருப்பு ஜன்னல்களில் அழகு சேர்ப்பது என எல்லையில்லாமல் போனது.

அந்த நேரத்தில் தான் அவள் வந்தாள் கரிசல் காடுகளில் பெய்த பேய் மழையை போல வேளுடன் சேர்ந்து மண்வாசனையை பிறபித்தாள்.
அவளை கண்டு மூவரும் சொக்கி தான் போனார்கள். மீனாட்சியை கண்ட நாதன் சொக்கி சொக்கன் ஆன கதை தான் நிகழ்ந்தது அதில் மிகவும் சொக்கி தவித்தது மதன் தான். அது பெயரினால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம். பிரம்மகலையை கண்ட கண்கள் பல பிரம்மபிரயத்தனத்தை முடித்து கொண்டதை போல அவளை தன் பார்வையின்
வீச்சில் ஒளி கூட அண்டாது பார்த்தன.

நாட்கள் சென்றன, மதன் கலையிடம் பேச
சந்தர்ப்பம் ஏதேனும் அமையுமா என்று பார்த்துக் கொண்டே இருந்தான். அன்று இரவு குடியிருப்புகளில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். அங்கு ஆண்களையும் பெண்களையும் கட்டாயப்படுத்தி பல போட்டிகள் நடந்து கொண்டிருந்தன கலைக்கு அந்த கலைகள் வெகுவாக அழுத்து போனது. மெல்ல அவ்விடம் வீட்டிற்கு செல்ல எண்ணினாள். கொண்டாட்டத்தை இரசித்து கொண்டிருந்த தாயிடம் வீட்டுச் சாவியை வாங்கி கொண்டு நகர்ந்தாள்.

வீட்டை திறக்க முற்படும் போது வெளியே எறிந்த மின் விளக்கு அனைந்தது. கொஞ்சம் பதறிப்போனாள். சட்டென ஓர் வெளிச்சம்
சீரிய முகத்துடன் இப்போது அதிர்ந்து போனாள்.

“பயப்படாதீங்க ! நீங்க வீட்ட துறங்க” என்றான் மெல்லிய குரலில்.

மதனை பார்த்து வெளவெளத்து போனவள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை கண்கள் துலாவியது கை விரல்கள் பரபரத்தது நிற்க கண்கள் பரபரக்க விரல்கள் துலாவ அவள் பரபரப்பு என்னுள்ளும் தொற்றிக்கொண்டது.

“மெதுவாங்க மெதுவா! அவசர படாதீங்க…”

“சாரிங்க நேத்து உங்கள தப்பா நினச்சு பயந்துடடேன்”

“பரவால்லங்க இதலாம் பொதுவா வர்றது தானங்க நாய் பேய்லா பார்த்த வர்ற மாதிரி”

“என்னங்க ஆண்கள நாய்னு சொல்றீங்களா!”

“ஆமாங்க பெண்கள் ஆண்கள அப்படி நினச்சே பழகிடாங்க…
சில ஆண்களும் அதுவாவே ஆகி பழகிடாங்க”

“நீங்க எதுவாவும் ஆகலயா?”

“நீங்க எதுவாவும் ஆக்கம இருந்தாலே போதும்…
ஐ மீன் பெண்கள சொன்னேன்” என்று மதன் சொல்லும் போது கலை ஏகத்துக்கும் முறைத்தாள். இருந்தும் மதன் தொடர்ந்தான்

“என்ன பார்த்தாலே தப்பா நினச்சு பயப்புடுவீங்கனு எனக்கு தெரியும்”

“எப்படி தெரியும்”

“எப்பயும் கழுத்துல இருக்குற துப்பட்டா என்ன பார்த்ததும் இருக்க வேண்டிய இடத்துக்கு வரும்போதே தெரியும்”

அதற்கு கொஞ்சம் திக்கிக் கொண்டே தான் பதில் கூறினாள்.

“ஹான் !! அது யுசுவலா கேர்ள்ஸ் செய்றது…
நாங்க…. ஐ மீன் நான் எதுவும் மீன் பண்ணி பண்ணல”

“பாய்ஸ் ஆர் சோ மீன்ல…

ம்ம்

பட் திஸ் இஸ் அன்யுசுவல் ஃபார் மீ…

ஒரு ஆம்பள கண்ண பார்த்து பேசுறானு தெரிஞ்சபுறமும் இட்ஸ் ஹாப்பனிங் னா 

லெட் இட் பி

எனிவே அம் மதன் நீங்க!” என்று மதன் சொல்ல கண் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள் கலை.

“ஹோ…

என் கலை.. பிரம்மகலை”

“செம பேருங்க”

“பிரம்மன் செய்த கலை அது தானே மீனிங்”

“ம்ம் அப்படித்தான் அப்பா சொல்வாரு”

“உங்க அப்பா கவிஞரா? இல்ல ஓவியரா?”

“இரண்டுமே இல்லை, ஏன் கேக்குறீங்க”

“கவித மாறி பேரு பெயிண்டிங் மாறி பொன்னு”

“எனக்கு ஏற்கனவே ஜலதோஷம்ங்க”

“ஐஸ் வைக்கிறேனு கலாய்கிறீங்க….”

என்று ஒரு புன் முறுவலை மட்டும் அவ்விடம் விட்டு சென்றான். அந்த முன் முறுவல் அவளை ஏகத்துக்கும் வதைத்தது நினைவிலும் நித்திரையிலும் அவனை அப்படி அந்த கள்ளச்சிரிப்பில் எதை கவர்ந்து சென்றானோ இல்லையோ அவள் உள்ளத்தை களவாடி அவன் புன்னகையை விதைத்து சென்றான். காதல் மெல்ல துளிர் விட தொடங்கியது. அது மாபெரும் விருட்சமாக வளர்ந்து நின்றது.

மனதுக்குள் காதல் ரீங்காரமாக வட்டமிட்டு தேனை அள்ளி தெளித்து கொண்டே இருந்தது. முதல் காதல் எப்போதும் மனதிற்கு நெருக்கமாகி ஓர் சுகானுபவத்தை விட்டு செல்லும் அந்த அனுபவம் நம்மை காலம் கடந்து இட்டு செல்லும். காதலின் அழகே கொடுப்பதும் பெறுவதும். அள்ள அள்ள குறையாத வண்ணம் இருவரும் பரஸ்பரம் கொடுத்து பெற்று கொண்டார்கள். இவர்களின் அன்பை கண்டு காதலுக்கே மூச்சையுற்றது.
காதலால் காதல் கொண்டு காதலாகி
காதலாட காதலில் திளைத்திருந்தார்கள். காதலர்கள் தவறு செய்வதுண்டு காதல்கள் தவறு புரிவதில்லை. அவனும் தன் காதலில் உன்மையை விதைத்திட முயற்ச்சித்தான் ஆனால் பொய்மை தலை தூக்கியது. அது தன்னையே அறியாமல் நிகழ்ந்தது. சில சமயங்களில் பொய்மை காதலில் துளிர் விடும் அது சரச நாடகங்களுக்காக இருக்கலாம். காமனின் பானம் போல அடிக்கரும்பாய் காதல் இனித்தது. அந்த கரும்பில் இருந்து எய்யப்படுவது ஓர் துரோகம் என அவள் அறியாமல் இருந்தாள்.

துரோகம் யாரை தான் விட்டு வைத்தது. தூரோகங்கள் பல வகை உண்டு ஆனால் அதில் கொடியது நம்பிக்கை துரோகம் தான். நம்பி கெடுவதென்பது வாழும் போதே நரகத்தை காணும் தருணம். அப்படி ஓர் தருணத்தை அவன் பரிசாக வழங்கினான். காதலின் கடவு நிலை திருமணம் அதை நோக்கி நகர்த்த பரஸ்பரம் இருவரும் திட்டமிட்டனர். தன் காதலை தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என்று அவள் தீர்க்கமாக நம்பினாள் ம்ஹும் நம்ப வைக்கப்பட்டாள்.

நாஜி படைகளில் சிக்கிய சிப்பாய் போல தன்னிலை மறந்தாள். ஒருவர் அளவு கடந்த நம்பிக்கையை வழங்கும் போது அது நமக்காக விதிக்கப்பட்ட ஆசிர்வாதமாக எண்ணுகிறோம் இறைவன் தமக்காக வழங்கியது என அதன் மீது ஆதிக்கம் செலுத்த எண்ணுகிறோம். மனிதன் எவ்வளவு பெரிய கொடிய மிருகமாக காட்சியளிக்கிறான் அல்லவா!.

அவன் அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவ்வளவு சிரத்தையுடன் இருந்தாள். அவன் மீது உயிரையே வைத்திருந்தாள் அதனால் தான் தீர்க்கமாக நம்பினாள். அது அவளை படி தாண்டவும் செய்தது. தன் பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என அவள் இந்த காரியத்தை செய்ய துணிந்தாள் அவன் மீதுள்ள காதலும் ஒரு மனதாக செய்ய தூண்டியது. அதனால் தான் அவள் அன்றிரவு அப்படி பேசினாள்.

அவன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லாமல் அவளை
நிராகரிக்க ஒரு புது யுக்தியை கையாண்டான். எப்படி அவனுக்கு அந்த யோசனை வந்தது என்று தெரியவில்லை. அவன் படித்த புத்தகங்களின் நீட்சியாக இருக்கலாம் அவன் திரைப்படங்களின் பாதிப்புகளாக இருக்கலாம். எதுவானாலும் அவன் மிகப்பெரிய தவறு இழைக்க துணிந்தான். தன் நண்பன் மணியின் துணையுடன் அன்று இரவு தன் நாடகத்தை நடித்து முடித்தான். நாடகத்தை முடித்த கையோடு இரவோடு இரவாக ஊர் விட்டு ஊர் வந்தான். நாடோடியை போல மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தான். மணியுடன் மட்டும் அவ்வப்போது உலாவும் உரையுமாய் இருந்தான். ஆனால் நாம் செய்த கர்மா நம்மை விடாது அல்லவா! அது, அவனை மகிழ்நன் மூலம் துரத்தியது அது அவனுக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத்தர ஆவலாய் இருந்தது.

மார்கழியில் திங்கள் இரவு பாவை நோன்பு நோற்கும் பெண்கள் விழித்தெழும் நல்வேளை அது. இரவு பணியை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான் மதன். நிலவொளியின் வெளிச்சத்தில் ஆந்தையின் அலறலும் பேடை குயில் கூவலும் இரவை நிசப்தமற்றாக்கியது. அந்த இனிய கீதத்தில் கண் உறங்க எத்தனித்தான். மணி ஐந்தை நெருங்கியது. மதனின் அலைப்பேசி அலறியது நான்கு முறை இசைத்தது. தூக்கம் கலையவில்லை மதனுக்கு, மீண்டும் ஒலித்தது இந்த முறை லேசாக கண் விழித்தான். மெதுவாக எழுந்து கைப்பேசியை எடுக்க முற்பட்டான் ஆனால் ஒலி அடங்கியது. திடிரென எங்கிருந்தோ அலாரம் சத்தம் மதன் காதை கவ்வியது, எழுந்து மின் விளக்கை போட முயற்சி செய்தான் ஆனால் பலனில்லை. சட்டென மின் விசிறியின் வேகம் கூடியது விளக்குகள் பளிரென வெட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தவனுக்கு தலை கிடுகிடுவென சுற்றியது. அவன் விழிகள் பிதுங்கின தலையில் கைவைத்து அப்படியே விழுந்தான். இது எந்த இடமென்றும் தான் எங்கே இருக்கிறோம் என்றும் அவன் மனதுக்குள்ளே ஆயிரம் குழப்பங்கள். கேள்விகள் என்னவோ இரண்டு தான் ஆனால் அதற்கான பதில்கள் ஆயிரமாயிரம். கொஞ்சம் கதறினான் இதமாக கத்தினான் அழுதான் புரண்டான் நான்கு சுவற்றை இணைத்த கதவை தட்டினான். ம்ஹூம் யாரும் அங்கு இல்லை உதவிக்கு, ஜன்னல்கள் இல்லா நான்கு சுவற்றுக்குள் கடிகார முட்களும் தொட்டியில் நீந்திடும் மீன்களுமே துணையாகி கிடந்தன.

தரையில் கிடைத்தப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்து உதவிக்கு யாரேனும் அழைக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் அங்கும் அதிர்ச்சி அவன் கைப்பேசியில் சேமிக்கப்பட்ட எந்த கைப்பேசி எண்ணும் இல்லை. கடைசியாக வந்த மிஸ்டு கால் மட்டுமே இருந்தது.

செல்போனினால் செல்லரித்துப்போன மூளையில் ஞாபகம் வேறு மறந்து போயிற்று.

அந்த எண்ணுக்கு போன் செய்தான் நீண்ட அழைப்புக்கு பிறகு ஏற்கப்பட்டது இவன் குரலில் நிசப்தம் நிலவி எதிர் குரலில் ஓர் பெண் குரல்.

“ஹலோ!

ஹலோ !

யாரு போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க”

“ஹலோ ஹலோ நீங்க யாரு?” என் பதறி அடித்து கேட்டான்.

“நீங்க தான் போன் பண்ணீங்க…

இப்ப என்ன யாருனு கேக்குறீங்க…

நீங்க யாரு சார்?

உங்களுக்கு என்ன வேனும்”

“நான் இங்க…

என்ன யாரோ கடத்திட்டாங்க..

என்ன காப்பாத்துங்க”

“கடத்தீட்டாங்களா!!

ஹே யாரோ கலாய்கிறீங்க

யாரது??”

“இல்லங்க நான் உன்மைய தான் சொல்றேன்”

“ஹே சும்மா மொக்க போடாம தூங்கு

கடத்திட்டாங்களாம்.. கடத்திட்டாங்க

காமெடி பண்ணிட்டு

போன் வை” அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் இதயம் கலவரமானது.

மனதில் தோன்றிய சில எண்களை முயற்ச்சித்தான். முயற்சி தோல்வியுற்றது. சிறிய தாமதத்திற்கு பிறகு அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.

“ஏங்க என்ன நம்புங்க…

என்ன யாரோ கடத்திட்டாங்க

ஹெல்ப் பண்ணுங்க”

“உனக்கு எத்தன தடவ சொல்றது

லூசா நீ!!

சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போன வை ”

“இருங்க ப்ளிஸ்!!

என்னங்க நம்ப மாட்றீங்க

உங்கள கெஞ்சி கேக்குறேன் ஹெல்ப் பண்ணுங்க”

“சரி இரு…

நான் போலிஸ்ட சொல்லி உன்ன காப்பாத்த சொல்றேன்…”

“இல்ல வேணாம் வேணாம்…

ஏய் எனக்கு இப்ப தான் புரியுது..

நீ தான என்ன கடத்துனது…

சொல்லு நீ தான??”

ஒரு நீண்ட நிசப்தம். அவள் பதில் எதுவும் சொல்லாமல் இருந்தாள். சட்டென வெடித்து சிரித்தாள்.

“ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…”

என சிரிப்பு சத்தம் விண்ணை முட்டியது.

“ஏய் நீ கலை தான??

சொல்லு சொல்லு…”

சிரிபலை தொடர்ந்து கொண்டே இருந்தது..

“போடா ஆஆஆ” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே ஒலித்தது…

கையில் இருந்த சாவியை மகிழ்நன்னிடம் கொடுத்தபடி அவ்விடம் நவில்ந்தாள். கண்களில் நீர் கசிய மென் சிரிப்புடன். ஆனால் மதனின் காதுகளில் மட்டும் ஒலித்து கொண்டிருந்தது அந்த ஒற்றை வார்த்தை “போடா ஆஆஆ”

– பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (30-Apr-20, 4:13 pm)
பார்வை : 200

மேலே