சின்னஞ் சிறு இரகசியமே

அவள் ஏழு கண்டங்களும் காணாத சின்னஞ் சிறு அதிசயமா? இச்சைகளுக்கு அடங்காத சின்னஞ் சிறு விரகதாபமா? ஆழ்மனதில் லயிக்கும் சின்னஞ் சிறு புளங்காகிதமா? எண்ணங்களில் செல்லரித்துப் போன சஞ்சலமா? சிறுக சேமித்த சின்னஞ் சிறு இரகசியமா?

ஊடலுவகையில் கட்டி அணைத்தபடி சின்னஞ் சிறு ஆசைகளை கண்களில் மறைத்து கலவி கொள்ளும் வேளையில், தன்னவனின் வியர்வையில் திளைத்து சின்னஞ் சிறு இரகசியங்களை தனக்குள் புதைத்து புன்னகைக்கிறாள் கண்ணம்மா.

கூடல் பொழுதில் சல்லாபங்கள் கடந்து ஊடல் கொள்ளாமல் நித்திரையை அனைத்தபடி கிடக்கிறான் கவிநயன்.

அவனை தாழ்வாரத்தின் அருகே படுத்துறங்கும் சின்னஞ் சிறு நாய்க்குட்டியை போல வருடி ரசிக்கிறாள்.

அவன் மீது அவளுக்கு சிறுதும் கோபமில்லை, வருத்தமில்லை சிறிதேனும் சலனமில்லை. அவள் என்ன தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவலோக கண்ணிகையா? பூலோக கண்ணகியா? எவ்வளவு கடிந்தாலும் அவளை ஒரு பொருட்டாக மதியாத போதிலும் எங்கிருந்து வந்தது இந்த பொறுமை. பேராண்மையை கண்டதுண்டு இந்த வையகம் ஆனால் பேருண்மையை மறந்து போனது அது பெண்களின் பேராபெண்மை.

விடியல் வந்த பிறகும் அவன் எழுவதாய் இல்லை. அவனை எழுப்பி விட மனமும் இல்லை. தாமததிற்கு அவனிடம் சில ஏச்சுகளை வாங்க கூடும் இருந்தும் அவனை இரசித்து கொண்டே இருக்கிறாள்.

கணவன் மனைவி எனும் உறவு மனையியல் வரையறைக்கு அப்பார்பட்டது அது வள்ளுவன் வாசுகியின் மனைமாட்சியை போல பாரதி செல்லம்மாவின் சுட்டும் விழி சுடரை போல மனையியல் இலக்கணம் எப்போதும் புதிரானது.

அப்படிதான் அதுவும் ஒரு புதிரான மனையியல். வழக்கத்தை விட பரபரப்பாக கிளப்பிக்கொண்டிருந்தான் கவிநயன்.

அவளும் வழக்கத்திற்கு மாறாக பல அறுசுவை உணவுகளை வைத்து காத்திருந்தாள் எல்லாம்

அவனுக்காக அந்த ஒற்றை ஆளுக்காக.

ஆனால் அவையனைத்தையும் அவன் கண்டுகொள்ளவே இல்லை அவளையும் கூட.

வேகமாக ஆஃபிஸ்க்கு சென்றான் இல்லை அவன் சாம்ராஜ்யத்திற்கு வந்தடைந்தான். அவன் வந்த உடனே அங்கிருந்தவர்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. எல்லோரும் சடசடவென குழுமினர்.

தன் கைப்பேசியின் வால்பேப்பரை பார்த்து கொண்டே ஓர் நீண்ட பெருமூச்சு விட்டான். நிற்க அந்த வால்பேப்பர் பல லட்சம் டாலர்களை உள்ளடக்கி இருந்தது.

நிறுத்தி நிதானமாக பேச ஆரம்பித்தான் ‘தி ஜஸ்ட் மேடு’ சிஇஓ கவிநயன்.

“லாஸ்ட் இயர் வி ஹாட வன்டர்புல் பிஸ்னஸ் வித் டிரமென்டஸ் மில்லியன் டாலர்.

ஸோ லைக் லாஸ்ட் இயர் வீ கோன்ன மேக் என்று பில்லியன் டாலர் பிஸினஸ்…

ஸோ கெட் ரெடி போக்ஸ்

லாஸ்ட் ஏர் விட இன்னோவேட்டிவா ஹார்ட் ஹிட்டிங்கா மோர் பிராமிஸிங்கா எனக்கு ஐடியாஸ் வேனும் அண்ட் மேக் சூர் ஃபார் தி பூட் பால்ஸ்.

வுமன் டே இஸ் மோர் புராபிடபில் டே தேன் எனி அதர்…

இன்டர்நெஷனல் வுமன்ஸ் டேவ ஓரு மணி மேக்கிங் டே மாத்துனதுக்கு அஸ் அ கார்ப்பரேட் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்போனு தெரியும்…

ஸோ மார்கெட், புரோமட் அண்ட் சேல் அட் த கோர்…

பேனர்ஸ், ஹோர்டிங்க்ஸ், டிவி பேப்பர் ரேடியோ அட்ஸ், ஹான்ட்பில்ஸ், எஸ்பெஷலி சோசியல் மீடியால மீம்ஸ் போடுங்க ஆஃபர்ஸ் அள்ளி தெளிங்க டென் லாக்ஸ் பட்ஜட் ஒதுகுங்க கூகுள் பேஸ்புக் அட்ஸ் பண்ணுங்க ரீமார்கட்டிங் பண்ணுங்க ப்ளிப் கார்ட் அமேசான்ல நம்ம புராடக்ட பார்த்த நெக்ஸ்ட் செகன்ட் நம்ம புராடக்ட மட்டும் தான் மொபைல இருக்கனும்

அன்டர்ஸ்டான்ட்…

நம்ம கார்மன்ட்ஸ் வுமன் வேர் எல்லாத்துக்கும் ஒரிஜினல் எம்ஆர்பி யவிட ஃபார்ட்டி பர்ஸன்ட் இன்கிரீஸ் பண்ணி எம்ஆர்பி பிக்ஸ் பண்ணுங்க அண்ட் மேக் த ஒரிஜினல் பிரைஸ் அஸ் ப்ளாட் ரேட் டிஸ்கவுன்ட் பிரைஸ்.

ஜுவல்லரில ஒரு கிராம் தங்கம் வாங்குன ஆயிரம் மதிப்புள்ள காஸ்மெட்டிக் கிட் ப்ரி சொல்லுங்க!!!!

அப்போது ஓர் குரல் ஒலித்தது,

இதே ஆஃபர நம்ம மதர்ஸ் டேகும் பண்ணலாம்ல சார்…

“ஹான்… கம் அகேன்” என நிதானமாக கேட்டான்.

அதற்கு மீண்டும் கூறினாள் “இல்ல இதே ஆஃபர நம்ம மதர்ஸ் டேகும் பண்ணலாம்லனு கேட்டேன்”

“தாய்மைக்கும் பெண்மைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு

தாய்மை வேற பெண்மை வேற எல்லா பெண்மைகுள்ளயும் தாய்மை இருக்குமாங்குறது எ பிக் கொஸ்டின் மார்க் தாய்மைங்குறது நூறு பெண்மைக்கு சமம் அண்ட் இட்ஸ் மோர் இன்டலெக்சுவல் அண்ட் காம்ப்ளிகேடட் டோண்ட் கெட் கன்புயுசுடு

சோ பி பிரிபேர்டு ஐ நீடு எ பர்பக்ட் எபிடி திஸ் இயர்’. என்று பட பட வென பொறிந்து தள்ளினான்.

அன்றைய தினம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நிறைவானது. எப்போதும் கிடாயாய் கிடப்பவன் இன்று மட்டும் சீக்கிரமாகவா கிளம்ப போகிறான் மணி பனிரெண்டை நெருங்கவும் அவன் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.

ஆனால் அவள் காத்திருந்தாள் எப்போதும் போல் அல்லாமல் கொஞ்சம் புதிராக சிறப்பாக பேராபெண்மையுடன்.

அவளுக்கும் ஓர் மனம் உண்டு அதில் அவனுக்கு ஓர் இடமுண்டு. எத்துணை முறை தள்ளி போனாலும் தாளாத கோபத்தில் கேளாத வன் சொற்கள் வீசினாலும் தீராத மோகத்தில் தன் பெண்மையை பந்தாடினாலும் எள்ளி நகையாட தன்னுடன் விளையாட அவன் காணாது போனாலும் அவன் மீது தான் வைத்திருக்கும் காதல் குறையாது என்கிறாள்.

அவள் என்ன தீண்டாமையின் பிம்பமா! அடிமையின் அடையாளமா! அவனுக்காக வழங்கபட்டவளா! இல்லை இல்லவே இல்லை அவனுக்காக இறங்கி வந்த வானத்து கண்ணிகை.

தாயை மதிப்பவன் தன்னையும் மதிப்பான் என்று காத்திருக்கிறாள்.

பட பட வென உள்ளே வந்த அவனுக்கு பேரதிர்ச்சி கொஞ்சம் கலங்கி போனான்

அது பேராச்சர்யமாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அதற்கான தருணமாக அவன் அதை வைத்ததில்லை.

அவன் முப்பத்தி மூன்று அகவையை கண் முன் நிறுத்தி இருந்தாள் அந்த அறை முழுவதும். தாய் மடியில் தவழ்ந்த தருணம் தந்தை தோளில் மிதந்த தருணம் நண்பர்களுடன் நட்பாடிய தருணம் முன்னாள் காதலில் கலந்த தருணம் என அனைத்தும் இருந்தது. இவையனைத்தையும் பார்த்து மெய் சிலிர்த்து நின்றான். அவன் பார்வை அவள் மீது விழுந்தது.

அவன் மெள்ள நெருங்கி வந்தான். அவள் உள்ளத்திலோ பெரும் பதைபதைப்பு என்ன செய்வானோ ஏது செய்வானோ என்று. எரிமலை போல எரிந்து விழுவானோ பேய் மழை போல நனைத்திடுவானோ சற்று நேரத்தில் ஏதேதோ எண்ணம் வளர்த்தாள் எல்லாம் அவள் கண் முன் நிழலாடியது.

நெருங்கி வந்தவன் அவள் கண்களின் கருமையின் வண்ணம் கரையும் வரை கண்டான் அவள் கண்களோ காற்றில் சிக்கிய ஆலாவை போல அங்குமிங்குமாக உருண்டோடியது.

அவள் கண்களை பார்த்த வண்ணமே அவள் கைகளை பிடித்தான். சட்டென அவள் மெல்லியிடையின் பக்கவாட்டில் கீச்சிதறல்கள் சில்லென அவள் உடலெங்கும் பரவியது.

அவள் கைகளை பூபோல எடுத்து மெள்ள வருடினான் அவள் சுண்டு விரலின் நகக்கனுவை வருடியவாறு சுண்டு விரலின் நுனியை முத்தமிட்டான். சில்லென பரவிய கீச்சிதறல் இப்போது அவள் உச்சந்தலையின் வகிட்டில் வந்து சிலிர்த்தது. வருடல் நீண்ட நேரம் தொடர்ந்தது நிச்சயிக்கப்பட்ட போது அவளுக்கிட்ட மோதிரத்தை தன் கண்ணில் வைத்து ஆலாபனை செய்தான் இப்போது அவள் விரல் இடுக்குகளில் நீர் துளி மெதுவாக வழிந்து நெளிந்து ஒடியது. அவள் கைகள் முழுவதும் ஈரம். பரபரப்பை உணர்ந்து அவன் கண்களை பார்த்தாள். அவள் பார்த்த மறுகணமே தாமதிக்காமல் கூறினான் முப்பத்தி மூன்று ஆண்டுகள் யாரிடமும் கூறாத அந்த வார்த்தையை எவரிடமும் உதிர்க்காத அந்த வார்த்தையை கண்களில் நீர் வழிய கூறினான்

“ஐ யம் சோ சாரி”

அதோடு அவன் சொல்லாடலை முடிக்கவில்லை இன்னும் ஓர் சொற்றொடர் அவன் தொண்டை குழியில் சிக்கி தவித்து கொண்டு இருந்தது அந்த கொண்டு வர ஓரு இலக்கண பிரயத்தனம் தேவைப்பட்டது. அவன் கூறுவதாக இல்லை , அதை இவள் முன்மொழிய முன்வந்த அந்த நொடியே உதடு ரேகைகள் தேய சொன்னான்



“ஐ லவ்வ் யூ கண்ணம்மா”

எந்த வார்த்தைக்காக தவமருந்தாளோ அந்த வார்த்தையை காது மடல்கள் கிளர்ந்தெழ கேட்டாள். அவன் கண்களில் இன்னும் கண்ணீர் துளிகள் வந்த வண்ணமிருந்தது. இவையனைத்தையும் கேட்ட பிறகு அவளால் என்ன ஆகச் சிறந்த வாய்மொழியை கூறிவிடமுடியும். இருந்தும் கூறினாள் அவன் கண்களில் இன்னும் கண்ணீரை சுரந்திட செய்ய மென்புன்னகையோடு நெத்தியில் முத்தமிட்டு மாபெரும் நிறுவனத்தின் சிடிஒ என்ற அரிதாரத்தை அகற்றி அன்பொழுக சொன்னாள்,

“ஹாப்பி பர்த்டே மைடியர்”.

பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

எழுதியவர் : பிரசன்ன ரணதீரன் புகழேந்த (30-Apr-20, 4:08 pm)
பார்வை : 296

மேலே