நர்மதா , உயிரைத்தா
நர்மதா , உயிரைத்தா
நர்மதா மிகவும் அழகாய் இருந்தாள் வசீகரமான அவள் முகத்திற்கு மெல்லிய பவுடர் தீற்றல் எப்போதும் உபயோகிக்கும் லெவண்டர் ஃப்ர்ஃப்யூம்., விரலில் ஒற்றை மோதிரம், நகரில் உள்ள ஆட்டோ மொஃபைல் தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்தில் ஸீனியர் ஆபிசராக வந்து ஆறு மாதம் ஆகிறது, அப்பா அம்மா குடும்பம் அரக்கோணத்தில், அவளுக்கு திருமணம் ஆக வில்லை. தனியாக ஃப்ளாட்டில் வசிக்கிறாள், அவளுக்கு எந்த உடையும் அழகாகவே இருந்தது, அலுவலகத்தில் பலர் முயன்றும் அவளை வசீகரிக்க முடியாமல் முயற்சிகளை புதைத்து இருந்தனர். அவளுக்கும் யார் மீதும் ஈர்ப்பு வரவில்லை நிஷாந்த்தை தவிர. நிஷாந்த் அஸிஸ்டண்ட் மானேஜர், அங்கு சில வருடங்களாய் பணி புரிகிறான், இருவருக்கும் காதல் துளிர் விட்டு பரவிக் கிடந்தது, சில சமயம் உடன் பணி புரிபவர்கள் லஞ்சின் போது , நிஷாந்த் ஒரு மாதிரி என்பது போல சொன்னார்கள் ஆனால் அதை நர்மதா பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
போன பத்தியில் நாம் ரசித்து படித்த நர்மதா இறந்திருந்தாள். காலையில் பக்கத்து ஃப்ளாட் நிவேதா , நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால், சந்தேகப் பட்டு அபார்ட்மெண்ட் செகரட்டரி சபேசனிடம் சொல்லி கதவை மாஸ்டர் கீ போட்டு திறந்து பார்த்து விட்டு போலிசுக்கு தெரிவித்திருந்தனர், ஸ்டேஷனில் இருந்து இன்ஸ்பெக்டர் ஆகாஷும் அஸிஸ்டெண்ட் குமரேசனும் வந்தனர். ஆகாஷ் அப்பார்ட்மெண்டை ஒரு நிமிடம் பார்த்தான். குமரேசன் என்ன சார் ? ரோட்டுல இருந்து முன்னூறு மீட்டர் தூரம் , பக்கத்துல வேற எதுவும் கடைகள் இல்ல , கேமரா அப்பார்ட்மெண்டுல மட்டும் தான் இருக்கு அப்பார்ட்மெண்ட் பின்புறம் கொஞ்சம் தள்ளி தோட்டம் இருக்கு என்றான் ஆகாஷ். குமரேசன் மனதுக்குள் ஆச்சர்யப் பட்டான்.
முதல்ல பார்த்தது யாரு ? எங்களுக்கு ஃபோன் செய்தது யாரு ? ரெண்டுமே நாந்தான் சபேசன் வந்தார், உள்ள அவ நிலை குலைஞ்சு கிடக்கறப் பாத்து எங்களுக்கு கையும் ஓடல காலும் ஓடல , உடனே ஃபோன் பண்ணிட்டேன் , யாரும் எதயும் டச் பண்ணல. அவர் மிகுந்த முன் ஜாக்கிரதையாக பேசுவதாகப் பட்டது ஆகாஷுக்கு. அழகான மெத்தை விரிப்பில் கலைந்து இருந்தாள் , சற்று தள்ளி ட்ரஸ்ஸிங் டேபிள் அருகில் ஒரு பேப்பர் கிடந்தது அதில் ஆங்கிலத்தில் NIS என்று எழுதப் பட்டு இருந்தது. எழுந்து ஏதோ எழுத முயற்சி செய்து பாதியிலே வலி தாங்காமல் மெத்தையில் விழுந்து இருக்க வேண்டும். வழக்கமான ஃபாரன்ஸிக் , ஆம்புலன்ஸ் என்று தொடர்ச்சியாக பணிகளைப் பார்த்தார் குமரேசன்.
ஆகாஷ் அதற்குள் இருபத்தி நாலு ஃப்ளாட்டிள் இருபத்தி மூன்று ஃப்ளாட்டிலும் விசாரித்து இருந்தான், ஒன்றும் சந்தேகமாக தெரியவில்லை, சிசி டிவியில் பதிவான காட்சிகளும் ஒன்றும் குறிப்பிடத்தகுந்ததாக இல்லை, எப்பொழுதும் போல் , நர்மதா முதல் நாள் இரவு அலுவலகம் விட்டு வருகிறாள் உள்ளே நுழைகிறாள். பின் வழக்கமாக வரும் அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள், நைட் வாட்ச் மேன் இத்யாதி இத்யாதி.. சபேசன் கேட்டதற்கெல்லாம் முடிந்த வரை பதில் சொன்னார்.
ஆகாஷுக்கு வேறு முக்கிய பணி இருந்ததால் , குமரேசனை அனுப்பி அவளது ஆபிஸில் துவக்க விசாரணைகளை ஆரம்பிக்க சொல்லி இருந்தான், மாலையில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் மரணம் இரவு ஒன்பதில் இருந்து ஒன்பதரைக்குள் நிகழ்ந்த்தாகவும் , காரணம் உணவில் கலக்கப்பட்ட விஷம் என்பதும் தெரிந்தது, கேஸில் ஒன்றும் இல்லை , ஒரே ஒரு பேப்பர் அதில் NIS என்று எழுதி இருக்கிறது.
குமரேசனைக் கூப்பிட்டான் , என்ன ஏதாவது ? சார் அவங்க ஆபிஸுல இவங்க செக்சன்ல இருபது பேர் எல்லாத்து கிட்டேயும் விசாரிச்சுட்டேன், நர்மதாவுக்கும் , அஸிஸ்டெண்ட் மேனேஜர்க்கும் லவ்வுனு பேசிக்கிறாங்க, நர்மதா அவன் கிட்டே மட்டும் தான் சிரிச்சு பேசுவாங்களாம் , அந்த நிஷாந்த் ஒரு சபல கேசு மாதிரி தெரியுது, ஆம்பளைக கிட்டே எரிஞ்சு விழுவான் போல இருக்கு,
நேத்து அவங்க டிபார்ட்மெண்ட் ஸ்டாப் மட்டும் பக்கத்துல இருக்கற ஓட்டல் தேவா பாரடைஸ் ல ஒரு டின்னர் பார்ட்டி , நிஷாந்த் தான் அரேன்ஜ் செய்திருக்கான், பார்ட்டி முடிஞ்சதும் நர்மதாவும் அவனும் மேரேஜ் செய்துக்க போறதா ஓப்பனா எல்லார் கிட்டேயும் சொல்லீருக்கான் நர்மதாவுக்கும் , நிஷாந்த்துக்கும் அதுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல, அவ NIS எழுதி வச்சிட்டு போயிட்டா, நாளைக்கு நீங்களும் வந்தீங்கன்னா மேலும் விசாரிச்சுரலாம். ஆனா ஆளு (நிஷாந்த்) நல்லாவே அப்செட் ஆகி இருக்கான், அதுவும் NIS விஷயத்தை சொன்னவுடனே அவனுக்கு முகமே பார்க்க சகிக்கலை. அப்புறம் அந்த ஹோட்டல விசாரிச்சுட்டேன் , வெளிப்பக்கம்தான் கேமரா இருக்கு , உள்ள நடந்தது எதுவும் பதிவாகலை.
மறு நாள் , ஆகாஷ் நர்மதாவின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கெல்லாம் இருந்தான், நிஷாந்த்தை விசாரித்தான், அவன் முகத்தில் இரு நாள் தாடி இருந்தது, சிகரட் குடிப்பான் போல, கீழுதடு கருப்பாக இருந்தது, அவனே ஆரம்பித்தான் , சார் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் சார், நர்மதாவை சந்தித்த அப்புறம் நான் மாறிட்டேன் சார், முன்னெல்லாம் அப்பிடி இப்பிடி இருந்தேன் , என்னை மாத்திட்டா சார், நாங்க வர்ர ஜனவரில கல்யாணம் செய்துக்க இருந்தோம் ஆனா, ஆனா ... அவன் உடைந்து போனான். உங்க ஸ்டாஃப் எல்லார்த்தையும் குமரேசன் நேத்து விசாரிச்சுட்டார், நர்மதா உயிர் பிரியறதுக்கு முன்னாடி ,NIS எழுதி வச்சிட்டு போயிருக்கா , அது நிஷாந்த்தை குறிக்கும்னு நினைக்கிறேன் , அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் படிந்தன.
எனக்கும் புரியல சார். அந்த பார்ட்டியில ஏதாவது ஃபோட்டோஸ் எடுத்தீங்களா ? குமரேசன் மனதுக்குள் இதை நாம் யோசிக்கவில்லையே என நினைத்தான். நிஷாந்த், சார் என்னோட கலீக் பிரசன்னா அவனோட மொஃபைலில் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தான் சார். அதை வாங்கி பார்த்தான் ஆகாஷ். இதை அப்பிடியே உங்க கம்ப்யூட்டர்ல கனக்ட் பண்ணி ஒரு பிரிண்ட் கொடுங்க என்றான், பதினெட்டு போட்டோவையும் பேப்பரில் ப்ரிண்ட் கொடுத்தான் நிஷாந்த்.
ஹோட்டல் பார்ட்டியில் நிஷாந்த்தின் டேபிளில் உள்ளவர்களைப் பற்றி மட்டும் அவனிடன் விசாரித்தான், நிஷாந்த், நர்மதா, சஞ்சனா , பிரசன்னா, சிந்துஜா, வேல்ராஜ். ஒவ்வொருவரைப் பற்றியும் நிஷாந்த் விளக்கமாகச் சொன்னான். கேட்டுக் கொண்டே வந்தவன் ஓ ஐ சீ என்றான்.. ஓகே நாங்க ஈவ்னிங் வர்றோம் கிளம்பினான் ஆகாஷ்.
சிறிது தூரத்தில் உள்ள ஆனந்த பவன் ஹோட்டலில் நிறுத்தி வாங்க குமரேசன் ஒரு டீ சாப்பிட்டுட்டு போவோம் என்றான் ஆகாஷ் , குமரேசன் வடையும் டீயும் ஆர்டர் செய்தார், அதற்குள் ஆகாஷ் மீண்டும் ஒருமுறை ஃபோட்டோவைப் பார்த்தான் , டீ குடித்து முடித்ததும் 91 ரூபாய்க்கு பில் கொடுத்தான், குமரேசன் சார் நான் இந்த பக்கம் இருந்து பார்த்தா பில் 16 ரூபாய் சார் நானே கொடுக்குறேன் என்றார், தடக்கென்று நிமிர்ந்தான் ஆகாஷ் , ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வைத்து விட்டு, வாங்க குவிக் , போய் நிஷாந்த்தை திரும்பவும் பார்க்கலாம், குமரேசனுக்கு ஒன்றும் புரியவில்லை.
மீண்டும் இருவரும் வரவும் நிஷாந்த்துக்கு என்னவோ போல இருந்தது ,ஃபோட்டோக்களைக் காட்டி நிஷாந்த்திடம் விவரமாகப் பேசினான். குமரேசனுக்கு மலைப்பாக இருந்தது, நிஷாந்த் அதிர்ந்திருந்தான். சார் என்று பெரு மூச்சு விட்டுக் கொண்டே இண்டர்காமில் சிந்துஜாவை அழைத்து , என் ரூமுக்கு வா..ங்க என்றான்.
சிந்துஜா , மே ஐ கம் இன் .. என்றவாறே வந்தாள். ஆகாஷையும், குமரேசனையும் நிஷாந்த் ரூமில் இருந்ததால் கேள்விக்குறியுடன் அவர்களைப் பார்த்தாள். ஆகாஷ் அவளிடம் சிந்துஜா நீங்க இங்க என்னவா இருக்கீங்க ? பர்சேஸ் அஸிஸ்டெண்ட், ஒன்றரை வருஷமா வேலை பார்க்குறேன். அப்படியா ? உங்க ஹாபி , பார்ட்டிக்கு வந்தவங்களை மர்டர் பண்றதா சிந்துஜா ? நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல.
ஆகாஷ் புரியற மாதிரி சொல்றேன் , நிஷாந்தும் நீங்களும் காதலர்கள், நர்மதா வந்தவுடனே நிஷாந்த்தோட கவனம் மாறிப்போய் நர்மதாவோட திருமணம் வரைக்கும் வர உங்களுக்கு பொறுக்க முடியல , ஏற்கனவே முடிவான இந்த டின்னர் பார்ட்டியில நர்மதாவை கொல்ல திட்டம் போட்டீங்க, நர்மதாவுக்கு பிடிச்ச ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செஞ்சு லேட் ஆகுதுன்னு , நர்மதா சொல்ல சொல்ல கேட்காம நீங்களே போய் வாங்கி வந்துருக்கீங்க , அங்கயே விஷத்தையும் சாதுர்யமா கலந்துட்டீங்க,
இந்த ஃபோட்டோவுல நீங்க எல்லார் கூடவும் இருக்கீங்க பக்கத்துல உங்க ஹேண்ட் பாக் இருக்கு ஆனா நர்மதாவுக்கு ஆப்பிள் ஜூஸ் எடுக்க போன பின் எடுத்த ஃபோட்டோ அதுல நீங்களும் இல்லை உங்க ஹேண்ட் பாக் கும் இல்லை ? ஜுஸ் வாங்க ஹேண்ட் பாக் எதுக்கு ? அதுதான் எனக்கு இடறுச்சு அப்புறம் , நர்மதா இண்டெலிஜெண்ட், உயிர் போற தருவாயில எங்களுக்கு க்ளு கொடுக்க உங்க பேரை எழுத முற்பட்டு இருக்காங்க ஆனா SIN னு எழுதுனவுடனே அவங்க உயிர் பிரிஞ்சுருச்சு அந்த பேப்பரை தலை கீழாப் பார்த்துட்டு NIS னு நிஷாந்த்தை சந்தேகம் படும் படியா ஆயிடுச்சு. குமரேசன் சார் என்று கை குடுத்தான் , நீங்கதான் காரணம் என்றான் ஆகாஷ்.
குலுங்கி குலுங்கி அழுதாள் சிந்துஜா , ஆகாஷ் குமரேசனிடம் , கான்ஸ்டபிள் வளர்மதியை வரச் சொல்லி சிந்துஜாவை அழைச்சிட்டு போகச் சொல்லுங்க. பார்ட்டியில் எடுத்த ஃபோட்டோவில் நர்மதா மிகவும் அழகாய் சிரித்துக் கொண்டு இருந்தாள்.
@@@@@@
ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்