நான் வந்துட்டேனு சொல்லுடி
பார்வதி பாட்டி மூன்று நாட்களாக மயக்க நிலையில் அவரது அறையில் படுத்துக்கிடக்கிறார். பேத்தி பொன்மாரி. வயது 13. கொரோனா விடுமுறையில் பாட்டியை அருகிலிருந்து கவனித்துக் கொள்கிறாள்.
பொன்மாரி மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாட்டியின் வாயில் ஒரு தம்ளர் பாலை சொட்டுச் சொட்டாக விட்டு கவனித்துக் கொள்கிறாள்.
பாட்டிக்கு வயது எண்பது. மிகவும் சுறுப்பாக நடமாடித் திரிபவர். மூன்று நாட்களுக்கு முன்பு இரவ நேரத்தில் குளியலறை சென்றவர் மயங்கி விழப் போகும்போது பொன்மாரி தாங்கிகப் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டு பெற்றோரை கூப்பிட்டாள்.
அவர்கள் வந்து பாட்டியைத் தூக்கி வந்து அவரது கட்டிலில் படுக்கவைத்தனர்.
இந்த கேடுகெட்ட கொரோனாச் சனியன் அச்சுறுதாதல் காரணமாக பலமுறை 108ஐ அழைத்தும் பயனில்லை. குடும்ப மருத்துவரும் கொரோனாவிற்கு பயந்து பொன்மாரியின வீட்டுக்கு வரமறுத்து விட்டார்.
மூன்றாவது நாள் வரப்பேற்பு அறையில் பொன்மாரியின் தந்தை :" அம்மா மூணு நாளா பேச்சு மூச்சு இல்லாம கெடக்கறாங்க. இன்னைக்கோ நாளைக்கோ நடக்கக்கூடாதது நடந்திருச்சுனா என்ன செய்யறதுன்னு தெரில, கண்ணம்மா" என்றார்.
பொன்மாரியின் தாய் கண்ணம்மாவும் "நானும் அந்தக் கவலைலதாங்க இருக்கிறேன். இந்த நேரத்தில தொலைவில இருக்கிற சொந்தபந்தம்கூட மாவட்ட ஆட்சியர்கிட்ட அனுமதி சீட்டு வாங்கிட்டு வந்துசேர முடியாதுங்க" என்று கூறினார்.
இந்த நேரம் பார்த்து பாட்டி கைகால்களை அசைக்க ஆரம்பித்து கண்விழித்து பார்த்தார்.பொன்மாரி பாட்டியின் வாயில் கொஞ்சமாக பாலை ஊற்றிப் பருக்கிவிட்டாள். சில நொடிகள் கழித்து காட்டி தன்னை உட்கார வைக்கும்படி பேத்தி பொன்மாரிக்கு பாட்டி கைசாடை மூலம் புரிய வைத்தார்.
பாட்டி பேத்தி தாங்கிப் பிடிக்க மெதுவாக கட்டிலில் உட்கார்ந்தார். அந்த சமயம்தான் பொன்மாரியின் பெற்றோர் பேசியது அவர் காதில் விழுந்தது. உடனே பொன்மாரியிடம் "நான் வந்துட்டேனு சொல்லுடி. நான் பொழச்சு வந்தேட்டுனு சொல்லடி" என்று மெலிந்த குரலில் கூறினார்.
பொன்மாரி துள்ளிக்குதித்துக் கொண்டு ஓடி தன் பெற்றோரிடம் ""பாட்டி பேசறாங்க. பாட்டி பேசறாங்க. "நான் வந்துட்டேனு சொல்லுடி" சொன்னாங்க அப்பா'"" என்றாள்.
இதைக்கேட்ட பொன்மாரியின் பெற்றோர் அதிர்ச்சியான ஆனந்தம் பொங்க பாட்டியின் அறைக்கு விரைந்து சென்றார்கள்.