பிரபாவதி
பிரபாவதி
மணி காலை 6:30 ஆகி இருந்தது, எனக்கு புது அசைன்மெண்ட். நான் ஏதோ வீர தீர சாகசங்களை செய்யப் போகிறேன் என்று நீங்கள் நினத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. நான் ஒரு வார இதழ் ரிப்போர்ட்டர், கடன் - வாங்கிவிட்டு வீடு கட்ட முடியாமல் விட்டவர்களிடம் ஒரு பேட்டி எடுத்து அனுப்ப வேண்டும் அவர்களது போட்டோவுடன் வெளியாகும். முதலில் இது இரண்டு வாரம் சுமராக வாசிக்கப்பட்டது பின்னர் நன்றாக அனைவராலும் வாசிக்கப்பட்டது. பெரும்பாலும் அவர்களது நிலை, மேலும் வங்கி கடன் மறுத்த காரணங்ககள் போன்றவை அலசப்பட்டதால் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் பகுதியாக மாறியது.
இன்று ரசவல்லிபுரம் போக வேண்டும் அது நகரத்தில் இருந்து இருபது கி மீ தூரம் இருந்தது. நான் அங்கு சென்றடையும் போது மணி எட்டு. இங்கு ஒரு வீடு கட்டி முடிக்காமல் பல வருடங்களாக இருப்பதாக எங்கள் வார இதழ் ஏஜண்ட் போன வாரம் சொல்லி இருந்தார். இருந்த ஓரே டீக்கடையில் விசாரித்தேன், இங்க "ஒரு வீட்டு தெரு " என்றவுடன் "லெப்ட் எடுத்து போனீங்கன்னா ரெண்டு கிலோமீட்டர்ல வரும்" என் பதிலுக்கு காத்திருக்காமல் வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவினான். வரும் போது சாப்பிட வேண்டும்.
ஊர் ரம்மியமாக இருந்தது , அந்த சின்ன மண் சாலையின் வலது புறம் வாழையும் இடது புறம் பெயர் தெரியா பச்சை நிற பயிர்களும் பரவிக்கிடந்தது. "கண்ணாண கண்ணே- வை ஹம் செய்து கொண்டே அந்த வீட்டை அடைந்தேன். அரை வாசி கட்டப்பட்டு இருந்தது, வாசலில் சாணம் தெளித்து கோலம் போடப்பட்டு இருந்தது. அது வித்தியாசமான கோடுகளால் ஆன கோலம் , கோடுகள் அளவெடுத்தது போல் இருந்தன.
" பிரபாவதி இல்லம் - 1994" சிமண்ட் பூச்சு வீடு திறந்திருந்தது , நான் வாயை திறக்கும் முன் வா தம்பி என்று நடுத்தர வயது இருக்கும் பெண் குரல் கேட்டது. வேறு யாரும் இல்லை போல, ஒரு வயர் சேரில் உட்கார்ந்து நான் வந்த விஷயத்தை கூறினேன் , அதைக் கேட்டது போலே தெரியவில்லை , இரு தம்பி , குடிக்க தண்ணி கொண்டு வர்ரேன்... நான் வீட்டைப் பார்த்தேன் , மிக சுத்தமாக இருந்தது, ஊது பத்தி வாசனை தென்றலில் மிதந்தது, புத்தகங்கள் சீராக அடுக்கப்பட்டு இருந்தன, பழைய கடிகாரம் பெண்டுலம் அசைந்து கொண்டிருந்தது. அதை சாவி கொடுக்கவே அய்ந்து நிமிடம் ஆகும் போல. அரிக்கேன் லைட் ஒன்று இருந்தது எனக்கு இதை இன்னும் உபயோகிக்கிறார்களா என்று ஆச்சர்யமானது. அதை விட ஆச்சர்யம் அது சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் வெளியில் ஒரு முருங்கை மரமும் , கறிவேப்பிலையும் , பன்னீர் ரோஜாச் செடியும் பத்து , பனி ரெண்டு சின்னதும் பெரிசுமாக பூக்கள் பூத்து இருந்தன. பூக்களை எண்ணி முடிப்பதற்க்குள் சொம்பில் தண்ணீர் வந்தது, குடித்து முடிப்பதற்க்குள் , தம்பி கொஞ்சமா குடிங்க , தோசை எடுத்துட்டு வர்ரேன் சாப்பிடு.. உள்ள வ்ந்து உட்கார்.. என்ன அன்புத் தொல்லை என்று எண்ணிக் கொண்டேன் ஆனாலும் மறுக்கத் தோன்றவில்லை. உள்ளே ஒரு சின்ன கோரைப் பாய் போட்டு ஒரு தட்டினை வைத்து, நான் கேட்டேன் ... அக்கா உங்க பேர் என்ன ? பிரபாவதி ... முதல்ல சாப்பிடு, அப்புறம் பேட்டி எல்லாம். பக்கத்தில் சின்ன ஜாடியில் நெய் , மேலே முருங்கை இலை மிதந்தது., வீட்டில் காய்ச்சியது போல, எள் மிளகாய் பொடி , அரசணிக்காய் சாம்பார், சுட சுட பஞ்சு போல தோசை வந்து கொண்டே இருந்தது , சொன்னால் நம்ப மாட்டிர்கள் , ஒன்பது தொசைகளை சாப்பிட்டேன் , டபரா டம்ளரில் காப்பி , மிக சுவையாக இருந்தது.
எனக்கு வந்த வேலை மறந்து விடும் போல, உள்ளே அடுப்பு ஊதும் சத்தம் கேட்டது. முதலில் தான் பேட்டிக்கு , கேமரா , ரெகார்டர் எல்லாம் தேவை , இப்போது செல்போனே போதும், பாக்கட்டில் கையை விட்டேன் , செல்போனே கொண்டு வர வில்லை , மறந்து வீட்டில் விட்டு வந்து விட்டேன் போல , பிரபவதியிடம் அக்கா செல்போனை மறந்து வீட்டுல வச்சுட்டேன் போய் எடுத்து வர்ரேன்.. பிரபாவதி புரிந்ததாகவே தெரியவில்லை, நீயும் சேகரைப் போல மறதி , போய் எடுத்துட்டு வா, நான் எனது டூ வீலரை வந்த வழியிலே செலுத்தினேன்.
மீண்டும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கு வரும் போது மணி பனி ரெண்டு , அந்த வீட்டின் முன்னே ஒருவன் மண் வெட்டியால் மண்ணை கொத்திக் கொண்டு இருந்தான். என்னைப் பார்த்ததும் என்ன ? என்பது போல பார்த்தான் , அவனது பார்வையில் ஆச்சர்யமும் கேள்விக்குறியும் ஒரு சேர இருந்ததை உணர்ந்தேன். பிரபாவதி ... நான் முடிப்பதற்க்குள் அவன் .... அவங்க இறந்து இருபத்தி அய்ந்து வருஷமாச்சு , நாந்தான் அவங்க நிலத்தை குத்தகைக்கு எடுத்து பாத்துகிட்டு இருக்கேன், அவங்க தம்பி சேகர் வருஷத்துக்கு ஒரு தடவை வருவாரு .. அவங்க அக்காவுக்கு இந்த வீட்டு மேல உசுரு அதுனால இடிக்கல... நான் எச்சிலை விழுங்கியவாறே வீட்டைப் பார்த்தேன், கோலமோ , முருங்கையோ , ரோஜாவோ இருந்த தடமே இல்லை ... வீடு சிதிலமாக இருந்தது. எனக்கு காலையில் குடித்த காபியின் சுவை நாக்கில் இருந்தது..
,
- ஸ்ரீதரன் வெங்கிடகிருஷ்ணன் -